2023 ஜனவரி 30, திங்கட்கிழமை

ரிஷி சுனக்; நிறவெறிக்கு எதிரான குறியீடு அல்ல

Johnsan Bastiampillai   / 2022 ஒக்டோபர் 27 , மு.ப. 11:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

புருஜோத்தமன் தங்கமயில்

 

 

 

பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று இருக்கின்றார். சூரியன் அஸ்தமிக்காத அகண்ட கொலனித்துவ ஆட்சியை, நூற்றாண்டுகளாக செலுத்திய பிரித்தானியாவுக்கு, வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இப்போது பிரதமர் ஆகியிருக்கிறார்.

கறுப்பினத்தவரான பராக் ஒபாமா, அமெரிக்காவின் ஜனாதிபதியானார். அதுவும் அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவாகி, பெரிய நெருக்கடிகள் இன்றி ஆட்சி செலுத்தினார். 

ஆனால், ஒபாமா போன்று ரிஷி சுனக்கால், நெருக்கடிகள் அற்ற ஆட்சியை கொண்டு செலுத்திவிட முடியாது. பிரித்தானியாவின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்ற நிலையில், அவர் பிரதமர் பதவிக்கு வந்திருக்கிறார். அவருக்கு முந்தைய இரண்டு பிரதமர்களும், நாட்டின் பொருளாதாரத்தை சரிசெய்ய முடியாத நிலையிலேயே பதவி விலகிச் சென்றார்கள்.

ரிஷி சுனக், பிரித்தானியாவின் பிரதமராகப் பதவியேற்கப் போகிறார் என்றதும், பல வகையான எண்ண ஓட்டங்கள் மக்கள் மத்தியில் எழுந்தன. இந்தியாவை அடக்கி ஆண்ட பிரித்தானியாவை ஆள்வதற்காக, இந்திய வம்சாவளி வாரிசு வந்திருக்கிறார் என்று இந்திய ஊடகங்கள் கொண்டாடின. 

கர்நாடக மக்களோ, தங்களது மருமகன், பிரித்தானிய பிரதமர் ஆகியிருக்கின்றார் என்று மெச்சிக்கொண்டிருக்கிறார்கள். பிராமண குடிகள், தங்களில் ஒருவராக ரிஷியை அடையாளப்படுத்திக் கொள்கிறார்கள். 
கிறிஸ்தவ நாட்டுக்கு, இந்து மகன் பிரதமராக வந்திருப்பதாகவும் சமூக ஊடகங்களில் பேசப்படுகின்றது. 

இவற்றை​யெல்லாம் தாண்டி, வெளிநாட்டைச்  சேர்ந்த ஒருவரை பிரித்தானிய மக்கள் பிரதமராக ஏற்கும் அளவுக்கான மனநிலை, குறிப்பாக நிறவெறியற்ற உணர்நிலை ஏற்பட்டிருப்பதாக வரவேற்புச் செய்திகள் பகிரப்படுகின்றன.

அடிப்படையில், பிரித்தானியா இன்று சந்தித்து நிற்கின்ற பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதற்கான திராணி, ஆளும் கன்சர்வேடிவ் கட்சிக்குள் இருக்கின்ற பாராளுமன்ற உறுப்பினர்களிடம் இல்லை. அதனால் அவர்கள் பொறுப்பை ஏற்றுக்கொள்வது சார்ந்து தயக்கம் வெளியிடுகிறார்கள். அதுவே, நிறவெறிக்கு எதிரான நிலைக்குள் பிரித்தானியா பெருமளவில் சென்று சேர்ந்து விட்டதாக யாரும் கருத வேண்டியதில்லை.

ரிஷி சுனக்கும் பதவி விலகிச் சென்ற பிரதமர் லிஸ் டிரஸும் இரண்டு மாதங்களுக்கு முன்னர், கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைப் பதவிக்கு போட்டியிட்ட போது, பாராளுமன்ற உறுப்பினர்களால் ரிஷி சுனக் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். ஆனால், கட்சியின் உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட்ட தேர்தலில், லிஸ் டிரஸ் 57 சதவீதத்துக்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று வெற்றிபெற்றார். அந்த வெற்றி நிறவாதம் என்கிற அடிப்படையில் நிகழ்ந்த ஒன்று. 

அந்தத் தேர்தலில், தங்களை வெளிநாட்டு வம்சாவளி ஒருவர் ஆட்சி செலுத்துவதை விரும்பவில்லை என்று, கன்சர்வேடிவ் கட்சி உறுப்பினர்களில் பலரும் வெளிப்படையாக கூறியிருந்தார்கள். அதுவும், லிஸ் டிரஸைவிட, ரிஷி சுனக் பொருளாதார சீர்திருத்தத்தை செய்யக்கூடியவர் என்று அறிவித்துக் கொண்டே அவரைத் தோற்கடித்தார்கள். அதற்கு நிறவாதமே காரணமாக இருந்தது. சமூக ஊடகங்களில் இப்போதும் அந்த காணொளிகள் காணக் கிடைக்கின்றன. ஆனால், ரிஷி சுனக்கிடம் பொறுப்பை இப்போது காலம் கையளித்திருக்கின்றது.

ரிஷி சுனக் பிரித்தானிய பிரதமராக பொறுப்பேற்கப் போகிறார் என்றதும், பாராளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் பதவிவொன்றை இட்டிருந்தார். அதில் ஒருபகுதி,  “.....பிரதமர் ரிசி சுனக்கின் நாட்டில் நிறவாதம் தோலில் (Skin Deep) இருக்கிறது. ஆகவே, அதை மாற்றி எடுக்க முடிகிறது. ஆனால், இங்கே (இலங்கையில்) இனவாதம் ஆன்மாவில் கலந்துள்ளதால் (Soul Deep),  நம்நாட்டில் நமக்கு முதலிடம் தரத் தயங்குகிறார்கள்....” என்றுள்ளது.

மனோ கணேசனின் ஏக்கம் மிகச் சரியானது. இலங்கையின் ஆட்சி அதிகார கட்டமைப்பு, இனவாதத்தின் வழியாக எழுந்த ஒன்று. அதன் வேர்கள் ஆழமாக ஊடுருவி படர்ந்திருக்கின்றன. அதனை அறுத்துவிட்டு, ஆட்சி அதிகார கட்டமைப்பை ஏற்படுத்துவது என்பது அவ்வளவு இலகுவானது இல்லை. 

நாட்டின் பொருளாதாரம் படுபாதாளத்துக்குள் வீழ்ந்திருக்கின்றது. மீட்சி என்பது இப்போதைக்கு சாத்தியமில்லை. நெருக்கடி முழுவதையும், மக்கள் தலையில் சுமக்க வேண்டியிருக்கின்றது. அப்படியான நிலையிலும், குருந்தூர் மலையிலும், திருகோணேச்சர கோவில் வளாகத்திலும் பௌத்த சின்னங்களை அமைத்து, அந்த இடங்களை ஆக்கிரமிக்கும் வேலைகளை அரச கட்டமைப்பு செய்கின்றது. 

நாட்டின் பொருளாதாரத்தை சரி செய்து, மக்களின் சுமையை குறைப்பதை விடுத்து, ஆக்கிரமிப்பு வேலைகளை செய்வது என்பது, இனவாதத்தின் வேர்கள் செய்வது. பௌத்த சிங்களத்தின் வேர்கள் ஆட்சிக் கட்டமைப்புக்குள் பரந்தளவில் வியாபித்தமையே நாட்டைத் தோற்கடித்தன. 

உண்மையில், முன்னோக்கிய வளர்ச்சிப் பயணம் என்பது, தோல்விக்கான காரணங்களைக் அடையாளம் கண்டு கொள்வதன் மூலம் நிகழக் கூடியது. ஆனால், இலங்கை போன்றதொரு நாட்டில், இனவாத -மதவாத வழி ஆட்சி அதிகார கட்டமைப்பின் நிலைப்பு, ஊழல்வாதிகளையும் குற்றவாளிகளையுமே ஆட்சியில் அமர்த்தி அழகு பார்க்கின்றது. அவர்கள், கிடைத்த வரை கொள்ளை அடிப்பதிலேயே குறியாக இருக்கிறார்கள். 
ஆட்சியில் உள்ளவர்கள் எவ்வளவு கொள்ளை அடித்தாலும் பரவாயில்லை; ஆனால், தங்களின் ஆட்சி அதிகாரத்துக்குள் நீளும் இனவாத - மதவாத வேர்களுக்கு பாதகம் ஏற்பட்டுவிடக் கூடாது என்று பௌத்த சிங்கள அடிப்படைவாத சக்திகள் நினைக்கின்றன. இவ்வாறான நிலை, கூட்டுக் களவாணித்தனமாக நீள்கின்றது. 

இப்படியான கட்டமைப்புக்குள் நாடு முழுவதுமாக சென்றிருக்கின்ற நிலையில், இலங்கையில் என்றைக்கும் பராக் ஒபாமாக்களோ, ரிஷி சுனக்களோ உருவாக வாய்ப்பில்லை.

‘இலங்கையில் இனவாதம் ஆன்மாவின் கலந்திருக்கின்றது’ என்ற மனோ கணேசனின் பதிவு இன்னும் ஆழப்படுத்தப்பட வேண்டியது. அது, ஆன்மாவைத் தாண்டியும் ஆழமான கட்டங்களில் இனவாதமாக பொதிந்திருக்கின்றது. 

எதிரி மக்கள் எனக் கருதும் மக்களை இனவாதம் அழித்து, சொந்த மக்களை காக்கும் என்று நம்பினால் கூட, ‘காட்டாட்சி’ தத்துவத்தின்படி அது ஏற்கக் கூடியது. ஆனால், சொந்த இன மக்களையே கருவறுக்கும் அளவுக்கான இனவாத - மதவாத அடிப்படைகளையே, இலங்கை வெளிப்படுத்தி வந்திருக்கின்றது. 

அப்படியான நிலையில், அதனால் ஒரு சில மத வெறிக் கூட்டமும், சில குடும்பங்களும் மாத்திரமே வாழும். மற்றப்படி, நாடு முழுவதுமாக தொடர் தோல்விக்குள் வீழ்ந்து தொலைந்து போகும்.

பிரித்தானிய மக்கள், நிறவெறியை கைவிடும் நிலையில் எல்லாம் முழுவதுமாக இல்லை. ஆனால், நிறவெறிக்கு அப்பால், வாழ்வு என்ற ஒன்று இருப்பது குறித்து கவனம் செலுத்துகிறார்கள். 

தங்களது வாழ்வை மீட்டெடுப்பதற்கு யார் வந்தால் சரியாக இருக்கும் என்று நினைக்கிறார்களோ, அவரைத் தெரிவு செய்ய விளைகிறார்கள். கன்சர்வேடிவ் கட்சியின் தலைமைக்கான தேர்தலில், ரிஷி சுனக் தோற்கடிக்கப்பட்ட போதிலும், இன்றைக்கு அவரை ஏற்கும் நிலை வந்திருக்கின்றது. 

நாளையே இன்னொரு தேர்தல் வந்தால், அதில் பிரித்தானியாவின் வெள்ளை நிறவாதம் தலைதூக்கும். அப்போதும், ரிஷியால் அதனைத் தோற்கடித்து வெற்றிபெற முடிந்தால்தான், அது உண்மையான நிறவெறிக்கு எதிரான வெற்றியாக இருக்கும். 

இல்லையென்றால், அது, ‘பசுத்தோல் போர்த்திய புலி’க்கு ஒப்பான நிலைக்குள் பிரித்தானியர்களின் நிறவெறி மறைந்திருப்பதற்கு ஒப்பானதுதான். அப்படியான நிலையில், பிரதமர் பதவியை ரிஷி சுனக் அலங்கரிப்பதை நிறவெறிக்கு எதிரான வெற்றியாக யாரும் பெரியளவில் கொண்டாட வேண்டியதில்லை.

அதுபோல, ரிஷியோடு தங்களை இனமாக, மதமாக, வம்வாவளியாக இணைத்து பெருமை கொள்வதெல்லாம் அபத்தங்களின் உச்சம். அவர் ஓர் அரசியல்வாதி. அரசியல்வாதிக்குரிய குணாதிசயங்களின் வழியாக எழுந்து வந்தவர். அவர் தன்னை நிலைநிறுத்திக் கொள்வதற்காக எதையும் செய்யக் கூடிய ஒருவர். அதனைத்தான் அவரின் கடந்த காலங்கள் உணர்த்தியிருக்கின்றன. 

அப்படியான நிலையில், தேவையற்ற பெருமிதங்களால் யாருக்கும் எந்த நன்மையும் இல்லை.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .