2021 ஓகஸ்ட் 02, திங்கட்கிழமை

இஸ்‌ரேல் மீதான காதலும் நம்மை நாதே நோதலும்

Johnsan Bastiampillai   / 2021 மே 23 , பி.ப. 02:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ

இந்தக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் போது, ஒருபுறம் பலஸ்தீனம் தொடர்ந்தும் தாக்குதலுக்கு ஆளாகிக் கொண்டிருக்கிறது. மறுபுறம், முள்ளிவாய்கால் பகுதி உட்பட்ட முல்லைத்தீவைத் தனிமைப்படுத்துவதாக அரசாங்கம் அறிவிக்கிறது.  

“காசா பற்றிப் பேசாதீர்கள்; யாழ்ப்பாணம் பற்றிப் பேசுங்கள்” என்று கண்டிக்கிறார் ஒரு தமிழ் ஊடகவியலாளர். அமெரிக்கப் பாணியில், எம்.ஏ. சுமந்திரன் கண்டனம் தெரிவிக்கிறார். இஸ்‌ரேல் மீதான காதலையும் ஒடுக்குமுறை மீதான ஆவலையும் என்னவென்று சொல்வது.   

இஸ்‌ரேல் மீதான ஈழத்தமிழரின் காதல் புதிதல்ல. இலங்கை தமிழரின் நிலையை இஸ்‌ரேலியருடன் ஒப்பிடுகிற ஒரு வழக்கம், 1960, 1961இல் சத்தியாக்கிரகம் தோல்வியில் முடிந்த பிறகு தீவிரமடைந்து, சிலகாலம் ஓய்வு பெற்று இருந்தது. ‘தமிழர் எல்லா நாடுகளிலும் உள்ளனர்; தமிழருக்கு ஒரு நாடு இல்லை’ என்பது, முன்னர் யூதச் சமூகம் பற்றிய ஒரு கூற்றுக்கு ஒப்பானது.   

1971இல், பங்ளாதேஷ் உருவான பின்னணியில், தமிழரசுக் கட்சிக்குள் அமிர்தலிங்கம் தன்னை மீள நிலை நிறுத்த, தனித் தமிழீழம் என்கிற கருத்தை முன்னெடுத்த காலப் பகுதியில், தமிழர் ஐக்கிய முன்னணி அமைந்த சூழலில், அமிர்தலிங்கத்தை ‘ஈழத்து முஜிபுர்’ என்று அழைக்கிற ஒரு போக்கு தொடங்கியது. மக்கள் முஜிபுரை ஆட்சியிலிருந்து விரட்டு முன்பே, ஓர் இராணுவச் சதி அவரைக் கொன்று, ஆட்சியைப் பிடித்தது. அத்துடன் அமிர்தலிங்கத்தை, ‘ஈழத்து முஜிபுர்’ என்று அழைப்பது ஓய்ந்தது.   

1974இல், பலஸ்தீன விடுதலை இயக்கம், ஐ.நா அங்கிகாரத்தைப் பெற்ற வேளையில், பலஸ்தீன விடுதலை பற்றிய எதிர்பார்ப்புகள் வலுவாக இருந்தன. எனவே, அமிர்தலிங்கம் ‘ஈழத்து அரபாத்’ என அடையாளம் காட்டப்பட்டார்.   ஆனாலும், தமிழ் இளைஞர் இயக்கங்கள், 1977இல் அமிர்தலிங்கத்தின் மீதான நம்பிக்கையை இழந்து போன போது, அந்த அடையாளமும் விடுபட்டுப் போனது.   

சில விடுதலை இயக்கங்கள், இஸ்‌ரேலில் ஆயுதப் பயிற்சி பெற்றன. இஸ்‌ரேலிய கொரில்லாப் பயிற்சிப் பிரிவு, தமிழ்ப் போராளிகளுக்கும் இலங்கை இராணுவத்தினருக்கும் சமகாலத்தில் பயிற்சி அளித்தது. 1983இன் பேரினவாத ஒடுக்கலின் பின்னர், இலங்கை அரசாங்கத்தை, இஸ்‌ரேல் ஆதரித்த நிலையில், தமிழரிடையே இஸ்‌ரேலிய முன்மாதிரி முடிவுக்கு வந்தது.   

போரின் முடிவின் பின்னரான எதிர்கால நிகழ்ச்சி நிரலின் பகுதியாக, இஸ்‌ரேலை முன்மாதிரியாகக் காட்டுகிற போக்கு தீவிரமாகி உள்ளதுடன், மேற்குலக யூத நிறுவனங்களினது ஆதரவை நாடுகிற ஒரு போக்கும் வெளிப்படையானது.   

மறுபுறம், அமெரிக்க அரசியல், ஊடக நிறுவனங்களில் செல்வாக்கு மிகுந்த யூத அமைப்புகள் மூலம், தமிழீழ விடுதலைக்கோ தமிழருக்குச் சாதகமான ஒரு தீர்வுக்கோ வழி தேடலாம் என்ற சிந்தனையும் உண்டு.   

இவை அனைத்தும் இஸ்‌ரேலியர்களைத் தமிழர்களுடன் ஒப்பிடும் போக்கு தொடர்ந்தும் நிலைப்பதற்குக் காரணமாகி உள்ளன. இதன் பின்புலத்திலேயே, காசாவில் நடப்பது குறித்த ஈழத்தமிழரின் மௌனத்தை, விளங்கிக் கொள்ள வேண்டும்.   

பலஸ்தீனத்தின் அண்மைக்கால அனுபவங்கள் பலவும், இன்றைய வடபகுதி நிலைவரங்களுக்கு மட்டுமில்லாமல், கிழக்குக்கும் தென்னிலங்கையில் வாழும் தமிழர்களுக்கும் பொருந்தி வருவன.   

அரபுத் தேசத்தைக் கூறுபோட்டு, எண்ணெய் வளத்துக்கும் அதிகாரத்துக்குமான போட்டியில், அரபு மக்களைப் பிளவுபடுத்த, ஐரோப்பியர் உருவாக்கிய பல்வேறு அரபு முடியாட்சிகளின் நடுவே, 1948 இல் இஸ்‌ரேல், ஐ.நா சபையால் உருவாக்கப்பட்டது. அக்காலப்பகுதியில் பலஸ்தீனம், பிரித்தானிய அதிகாரத்துக்கு உட்பட்ட பிரதேசமாக இருந்தது. அதிலிருந்து, இஸ்‌ரேலை உருவாக்குகிற சூழ்ச்சி, சென்ற நூற்றாண்டின் முற்பகுதியிலேயே, ‘பல்ஃபர்’ பிரகடனத்துடன் தொடங்கி விட்டது.   

முதலாம் உலகப் போரின் பின்பு, மெல்ல மெல்லத் தொடங்கி, 1940 களில் தீவிரம் பெற்ற யூதப் பயங்கரவாதக் குழுக்கள், அராபியர்களைத் திட்டமிட்ட முறையில், அவர்களது வதிவிடங்களிலிருந்து விரட்டின.   

1948 இல் இஸ்‌ரேலை உருவாக்கிய போது, இந்த இனச் சுத்திகரிப்பு, தீவிரமாக நடைபெற்றது. 1948 இல் நடந்த போரின் போதும், பிரித்தானியாவும் பிரான்ஸும் 1957இல் எகிப்தின் மீது தொடுத்த போரின் போதும் 1967 இல் இஸ்‌ரேல் வலிந்து, எகிப்தின் மீது தொடுத்த போரின் போதும் 1974 இல் எகிப்துடன் நடத்திய போரின் போதும் இஸ்‌ரேல் தனது விஸ்தரிப்புக் கொள்கையில் முனைப்பாக இருந்தது.   

1967 இல், இஸ்‌ரேல் கைப்பற்றிய எகிப்திய பிரதேசத்தை, 1974 போரின் பின்னர் படிப்படியாகத் திருப்பிக் கொடுக்க நேர்ந்த போதும், சிரியாவிடம் இருந்து பறித்ததை இஸ்‌ரேல் தன்வசம் வைத்துள்ளது. அதைவிட, 1978 இற்குப் பிறகு, லெபனானில் இஸ்‌ரேலிய ஊடுருவலும் ஆக்கிரமிப்பும் தொடர்ந்து வந்தன.   

எனினும், ஹிஸ்புல்லா அமைப்பின் வலுவான பதிலடி மூலம், இஸ்‌ரேலும் அதன் லெபனியக் கூட்டாளிகளும் கடந்த இரண்டு, மூன்று ஆண்டுகளில் கற்ற பாடம், லெபனானில் மீண்டும் ஓர் இஸ்‌ரேலிய ஊடுருவலுக்கு, இப்போதைக்கு வாய்ப்பில்லாமல் செய்து விட்டது. இருந்தபோதும், இஸ்‌ரேல் இன்று மத்திய கிழக்கில், அமெரிக்காவுக்கு அதிமுக்கியமான இராணுவ மேலாதிக்கக் கேந்திரமாக உள்ளது.   

இலங்கையின் தேசிய இனப்பிரச்சினை, பலஸ்தீனத்தைப் போன்று, அந்நிய மேலாதிக்கத்தின் கீழ் இருந்த ஒரு நாட்டில், ஒரு திட்டமிட்ட ஆக்கிரமிப்பின் விளைவானதல்ல. எனினும், அங்கு போல, தமிழ்த் தேசியத்தின் பாரம்பரியப் பிரதேசத்தை, திட்டமிட்ட குடியேற்றத்தின் மூலம் அடையாளம் இல்லாமல் ஆக்குகின்ற பணி, இஸ்‌ரேலின் யூதக் குடியேற்றங்களைப் பின்பற்றுகிற முறையிலேயே தொடக்கி வைக்கப்பட்டது. அதற்கான அத்திவாரம், கொலனிய ஆட்சிக் காலத்திலேயே இடப்பட்டு விட்டது. தமிழ்த் தேசியவாதத் தலைமைகள் அதை உணர்ந்தாலும், அதை ஒரு முக்கியமான பிரச்சினையாக முன்னெடுக்கவில்லை.   

இலங்கையில், தமிழ் பேசும் மக்களுக்கு எதிரான திட்டமிட்ட குடியேற்றமும் பிரஜாவுரிமைச் சட்டமும், டி.எஸ்.சேனநாயக்காவாலேயே புகுத்தப்பட்டவை. இத்தனைக்கும் அவர், வெளிப்படையாக இனவாதம் பேசியவரல்ல.   

தமிழரசுக்கட்சி திட்டமிட்ட குடியேற்றம் பற்றிப் பேசியது. பண்டா-செல்வா உடன்படிக்கையில், அதை மட்டுப்படுத்துவதற்கான ஒரு வழியும் காணப்பட்டிருந்தது. எனினும், சட்ட ரீதியாக (மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ்) மட்டுமன்றி, சட்டவிரோதமாகவும் திட்டமிட்ட குடியேற்றங்கள் தொடர்ந்தும் மும்முரமாக நடைபெற்றன.   

1977 இற்குப் பின்பு, படிப்படியாக முனைப்புப் பெற்ற இராணுவ ஆக்கிரமிப்பு, போராக விருத்தி பெற்ற சூழலில், இராணுவ முகாம்கள் என்ற பேரில் முதலிலும், உயர் பாதுகாப்பு வலயங்கள் என்ற பேரில் பின்பும் நிலப்பறிப்புத் தொடர்ந்தது. இப்போது தொல்லியல் என்ற பெயரில் புதிய வடிவம் பெற்றுள்ளது.   

நிலப்பறிப்பு என்பது, தேசிய இன ஒடுக்கலின் பகுதி மட்டுமல்ல; அது, தேசிய இன விடுதலைப் போராட்டங்களைப் பலவீனப்படுத்தும் ஒரு கருவியுமாகும். இஸ்‌ரேல் இப்போது, அராபியர்கள் வாழக்கூடிய பிரதேசங்களைத் தனது விஸ்தரிக்கப்பட்ட நிலப்பரப்பில், சிதறிக்கிடக்கும் சிறுசிறு தீவுகளாக மாற்றி வருகிறது.   

இலங்கையிலும் இதுவே நடைபெறுகிறது. இது போன்ற நடவடிக்கைகள், பல்வேறு வடிவங்களில் பல நாடுகளில் நடைபெற்றுள்ளன. பிலிப்பைன்ஸ் நாட்டின் முஸ்லிம் சமூகமான ‘மொறோ’ மக்கள் வாழும் மின்டனாவோ தீவில், கிறிஸ்துவ பெரும்பான்மையினர் பிற தீவுகளிலிருந்து குடியேற்றப்பட்டுள்ளனர். இங்கே இரண்டு நோக்கங்கள் உள்ளன. ஒன்று, மின்டனாவோ தீவு ஒரு சுயாட்சியாகவோ தனி நாடாகவோ அமையாமல் தடுப்பதுடன், அதன் இன அடையாளத்தை மாற்றுவதுமாகும். மற்றையது, அங்கே உள்ள கனிப்பொருள் வளத்தைக் கொள்ளையடிப்பது.   

தென்னாபிரிக்காவில் கூட, 1960கள் முதலாக, வளமான பகுதிகளை வெள்ளை இனத்தவரின் ஆதிக்கத்தில் வைத்துக்கொண்டு, கறுப்பு இன மக்களை வெள்ளையரின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பகுதிகளால் பிரிக்கப்பட்ட, பலவீனமான ‘சுயாட்சி’களாக மாற்றுகிற திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.   

இவ்வாறு குடியேற்ற நாடுகளான அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து, கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளிலும் முழு இலத்தின் அமெரிக்காவிலும் பழங்குடிகளது சமூகங்களுக்கு உரிய நிலம் பறிக்கப்பட்டு, தனியார் உடைமையாகவும் வெள்ளை அரசுகளுக்கு உரிய நிலமாகவும் மாற்றப்பட்டு, பழங்குடிகள் நிலமற்றோர் ஆக்கப்பட்டுள்ளனர்.   

இப்போது, ஈழத்தமிழர்களின் நிலை,யாருடைய நிலையை ஒத்தது என்பதை விளங்குவதில் சிரமங்கள் இராது. தமிழ்த் தலைவர்கள், இஸ்‌ரேல் விடயத்தில் மௌனம் காக்கிறார்கள்; எஜமானர்களைச் சங்கடப்படுத்தாத கருத்துகளை உதிர்க்கிறார்கள்.   

சுமந்திரனின் கருத்தும் அவ்வாறே! “அளவுக்கு மீறிய தாக்குதல்கள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என்று அவர் கோருவது, இஸ்‌ரேலிய - அமெரிக்க ஆதரவே ஆகும்.   

வலிந்த தாக்குதலைத் தொடுத்தது யார், அடக்குமுறையாளன் யார், ஒடுக்கப்படுபவன் யார்? என்பதை, அவர் அறியாதவரல்ல. ஆனால் வார்த்தைகள் அவ்வாறுதான் வந்து விழுகின்றன.   

ஆனால், அரசியல் இருப்பு முக்கியமானது. அதனால், மறுநாள் இவரிடமிருந்து “இலங்கையில் இப்போதும் இனவழிப்புத் தொடர்கிறது” என்ற வார்த்தைகள் வருகின்றன. மக்கள் முட்டாள்களாகத் தயாராக இருக்கும் வரை....   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .