2022 ஓகஸ்ட் 12, வெள்ளிக்கிழமை

தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்தானது

R.Maheshwary   / 2022 ஜூன் 27 , பி.ப. 03:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

அரசியல் ஸ்தீரமற்ற நிலையில் தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்தானதாகும்." என தமிழ் முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்தார்.

கண்டியில் நடைபெற்ற ஊடகசந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து தெரிவித்த அவர்,

இன்று, நாட்டின் அரசாங்கம் யாருடையது, யாருடைய தலைமையில், கட்டுப்பாட்டில் அரசாங்கமும், அரச நிர்வாகமும் செயற்படுகின்றது என்பன தெளிவற்ற நிலையிலேயே உள்ளது.

ஜனாதிபதி பங்கரில் இருந்துகொண்டு தனது நிகழ்ச்சிநிரலை முன்னெடுக்கும் முயற்சியில் உள்ளார். பிரதமர் தனது கட்சிசார்ந்த சகாக்களை சேர்த்துக்கொண்டு, தனது கட்சியின் நிகழ்ச்சிநிரலை முன்னெடுப்பதில் உள்ளார். இவ்வாறான அரசியல் ஸ்தீரமற்ற நிலையில் தோட்ட காணிகளின் பகிர்வு தொடர்பாக பேசுவது ஆபத்தானதாகும்.


மலையக பிரதேசங்களில் உள்ள பயிரிடப்படாத தோட்ட காணிகள் என்பது பல காலமாக பேசப்பட்டு வரும் ஒரு விடயம். இன்று நாட்டிலே ஏற்பட்டிருக்கும் உணவு பஞ்சத்துடன் மீண்டும் இவ்விடயம் பேசப்படுகின்றது. கடந்த காலம் முழுவதும் தோட்ட காணிகளின் பகிர்வில் தோட்ட மக்களுக்கு பாராபட்சம் காட்டப்பட்டு வந்துள்ளது. எல்லா பகுதிகளிலும் போல வெளியாருக்கே பெருமளவு நிலங்கள் பகிர்ந்து வழங்கப்பட்டுள்ளது.

இச் சூழ்நிலையில் இன்றைய அரசாங்கத்தில் மலையக பிரதிநிதிகள் எவரும் இல்லை. இருந்த சிலர் சுயாதீனமாகிவிட்டதாக கூறுகின்றனர். அரச தலைமைத்துவம் யாருடையதென்பது என்பதும் கேள்விக்குறியாக உள்ளது. இச்சூழ்நிலையில் தோட்ட காணிகளின் பகிர்வு பற்றி பேசுவது நாமே எம்மை காட்டி கொடுப்பது போன்றதாகிவிடும்.

கண்டி மாவட்ட்டத்தில் கலபொட தோட்டம், தெல்தோட்டை தோட்டம், போஹில் தோட்டம் மற்றும் கிரேட் வெளி தோட்டங்களில் பெருவாரியான நிலங்கள் வெளியாருக்கு கொடுக்கும் ஏற்பாடுகளை அரசாங்கம் செய்துள்ளது. அதே போன்று வுட்சைட் தோட்டம், கல்தூரியா தோட்டம் போன்றவைகளின் காணி சுவீகரிப்பு தொடர்பாகவும் பல முரண்பாட்டு நிலைமை உள்ளது.

இவற்றையெல்லாம் தடுத்து நிறுத்தி, தோட்ட காணிகளை பாதுகாத்து, தோட்ட மக்களின் வாழ்வாதாரத்திற்கு அவற்றை வழங்க வேண்டும். அதை விடுத்து இன்று நிலவும் பலவீனமான அரசியல் சூழலில் தோட்ட காணிகளின் பகிர்வுக்கு முற்படுவது பெரும்பாண்மை அரசியல் பிரதிநிதிகளின் நிகழ்ச்சி நிரல்களை நிறைவேற்றிக்கொள்ளவே வாய்ப்பாக அமையும் என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .