2023 ஒக்டோபர் 03, செவ்வாய்க்கிழமை

மலையக மக்களின் 200 வருட வரலாற்றை நினைவுக்கூறும் நிகழ்வுகள்

J.A. George   / 2023 மே 12 , பி.ப. 12:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

கண்டி, சமூக அபிவிருத்தி நிறுவகம் மலையக மக்களின் 200 வருடகால வரலாற்றை நினைவுக்கூறும் வகையில், இம்மக்களது வரலாறு மற்றும் நாட்டின் அபிவிருத்திக்கு வழங்கிய பங்களிப்பினை வெளிக்காட்டும் வகையில் எதிர்வரும் 2023 மே மாதம் 19, 20, 21 ஆம் திகதிகளில் நுவரெலியா சினிசிட்டா மண்டபம் மற்றும் ரேஸ்கோஸ் மைதானத்தில் கண்காட்சி மற்றும் ஆய்வரங்கு உட்பட பல விசேட நிகழ்வுகளை ஏற்பாடு செய்துள்ளது.

இந்நிகழ்வில் மலையக மக்களின் வாழ்வியல் வரலாற்றையும் அரசியல், பொருளாதார விடயங்களையும் வெளிக்கொண்டு வரும்வகையில் ஆய்வரங்கு, தோட்டத் தொழிலாளர்களின் அருங்காட்சியக கண்காட்சி, மாவட்ட பிரதேச செயலகத்துடன் இணைந்து அடிப்படை ஆவணங்களை பெற்றுக்கொள்வதற்கான நடமாடும் சேவை மற்றும் பிரதேச சபையுடன் இணைந்து அதன் சேவைகள் தொடர்பான விழிப்புணர்வூட்டல் உட்பட VTA/NAITA உடன் இணைந்து இளைஞர்-யுவதிகளுக்கான தொழில் பயிற்சி வழிகாட்டல் செயலமர்வுகள் நடாத்தப்பட உள்ளது.

அத்துடன் பல முக்கிய பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் அழுத்தம் கொடுப்பதற்காக முக்கிய தொணிப்பொருளில் கையொப்பம் திரட்டப்பட உள்ளது. 'பெருந்தோட்ட சமூகத்தினருக்கு போதியளவான மற்றும் அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளை வழங்குக - தோட்டப்பகுதியில் கட்டப்பட்ட வீடுகளுக்கு கடனை மீள்செலுத்திய சுமார் 37,000 வீடுகளில் குடியிருப்போருக்கு சட்ட ரீதியான உறுதிப்பத்திரத்தை வழங்குக- தோட்டக்குடியிருப்புகளில் அனர்த்த முகாமைத்துவ குழுக்களை உருவாக்கி அதனை தேசிய அனர்த்த  முகாமைத்துவ நிலையத்தின் கீழ் கொண்டுவருக- தோட்டக்குடியிருப்புகளுக்கு தபால் சேவைகளை முறையாக வழங்குக- வாக்குறுதியளிக்கப்பட்டதன்படி நுவரெலிய மாவட்டத்தில் புதிய பிரதேச செயலகங்களை உருவாக்குக. மேலும் மேலதிகமாக பிரதேசசெயலகங்களை உருவாக்குக' ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி  கையொப்பம் திரட்டல் - மகஜர் சமர்ப்பித்தல் மற்றும் மலையக பாரம்பரிய கலை நிகழ்வுகளும், தென்னிந்திய பாடலாசிரியர்-பாடகர் அறிவு (ஏஞ்சாமி புகழ்)) அவர்களின் இசை நிகழ்ச்சியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மலையக மக்கள் இன்றும் தேசிய அபிவிருத்தி திட்டங்களில் அதாவது தேசிய நீரோட்டத்தில் இருந்து ஒதுக்கப்பட்டுள்ளனர். இதனால் இம்மக்களது அரசியல் மற்றும் பொருளாதார உரிமைகள் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எனவே இம்மக்கள் அரசியலில் நேரடியாக பங்குகொண்டு அரச சேவைகளையும் அபிவிருத்தி திட்டங்களையும் பெற்றுக்கொள்வதற்கான கட்டமைப்புக்களும், அரச பொறிமுறைகளும் காத்திரமான முறையில் உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, இம்மூன்று நாட்களும் இடம்பெறும் ஆய்வரங்கு மற்றும் கையொப்பம் திரட்டல் என்பன ஆட்சியாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அதாவது ஏற்புரை மற்றும் பரப்புரைகளை மேற்கொள்வதனை நோக்காகக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ்ஆய்வரங்கு மூலம் பெறப்பட்ட மலையக மக்கள் முகம் கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகளை சர்வதேச தேயிலை தினமான மே மாதம் 21 ஆம் திகதி சிவில் அமைப்புகளின் கோரிக்கையாக பிரகடனப்படுத்தப்பட்டு தொடர்ந்து சட்டங்களை உருவாக்கும் நிறுவனங்கள், கொள்கை வகுப்போருக்கு உட்பட உரிய அரச அதிகாரசபைகளுக்கு சமர்ப்பிக்கப்பட உள்ளது.

- யோகேஷ்வரி கிருஷ்ணன் -


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .