2021 செப்டெம்பர் 25, சனிக்கிழமை

வென்று முதலிடத்தை நீடித்தது செல்சி

Shanmugan Murugavel   / 2016 டிசெம்பர் 18 , மு.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

இங்கிலாந்து கால்பந்தாட்டக் கழகங்களுக்கிடையிலான பிறீமியர் லீக் தொடரில், நேற்று (17) இடம்பெற்ற போட்டியொன்றில் வெற்றிபெற்ற செல்சி, பிறீமியர் லீக் புள்ளிகள் தரவரிசையில் தனது முதலிடத்தை நீடித்துக் கொண்டுள்ளது. 1-0 என்ற கோல் கணக்கில் கிறிஸ்டல் பலஸை செல்சி தோற்கடித்திருந்தது. செல்சி சார்பாகப் பெறப்பட்ட கோலினை, போட்டியின் 43ஆவது நிமிடத்தில் டியகோ கொஸ்டா பெற்றிருந்தார்.

தரவரிசையில் இரண்டாம், மூன்றாமிடத்திலுள்ள லிவர்பூல், ஆர்சனலை விட ஒரு போட்டி அதிகமாக விளையாடியுள்ள செல்சி, அவற்றினை விட ஒன்பது புள்ளிகள் அதிகமாகப் பெற்று, 43 புள்ளிகளைப் பெற்றுள்ளது.

இப்போட்டியுடன் சேர்த்து, பிறீமியர் லீக்கில் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ள செல்சி, தனது கழகச் சாதனையை சமப்படுத்தியுள்ளது. இதற்கு முதல், 2009ஆம் ஆண்டின் ஏப்ரல் தொடக்கம் செப்டெம்பர் வரையான பகுதியிலும் தொடர்ச்சியாக 11 போட்டிகளில் செல்சி வெற்றி பெற்றிருந்தது. பிறீமியர் லீக்கில், ஆர்சனல் 14 போட்டிகளில் தொடர்ச்சியாக  வெற்றி பெற்றமையே சாதனையாகும். 2002ஆம் ஆண்டில் இச்சாதனையை ஆர்சனல் நிகழ்த்தியிருந்தது.

இதேவேளை, 2-0 என்ற கோல் கணக்கில் வெஸ்ட் ப்ரோம்விச் அல்பியனை மன்செஸ்டர் யுனைட்டெட் தோற்கடித்திருந்தது. ஜெஸி லிங்கார்ட்டிடமிருந்து பந்தைப் பெற்ற ஸல்டான் இப்ராஹிமோவிக் போட்டியின் ஐந்தாவது நிமிடத்தில் கோலொன்றைப் பெற்று யுனைட்டெட்டுக்கு முன்னிலையை வழங்கினார். பின்னர், அணித்தலைவர் வெய்ன் ரூனியிடமிருந்து பந்தைப் பெற்ற இப்ராஹிமோவிக், போட்டியின் 56ஆவது நிமிடத்தில் மேலுமொரு கோலைப் பெற்று யுனைட்டெட்டின் வெற்றியை உறுதி செய்தார்.

லெய்செஸ்டர் சிற்றி, ஸ்டோக் சிற்றி ஆகிய அணிகளுக்கிடையிலான போட்டியில், இரண்டு அணிகளும் தலா இரண்டு கோல்களைப் பெற்ற நிலையில் போட்டி சமநிலையில் முடிவடைந்தது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .