2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைப் பொருளாதாரத்தில் ஏற்றுமதியாளர்களின் பங்களிப்பு அதிகரிக்கும்

Johnsan Bastiampillai   / 2020 ஒக்டோபர் 21 , பி.ப. 12:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையின் ஏற்றுமதியாளர்கள், அடுத்த 12 மாதங்களில் இலங்கையின் பொருளாதாரத்தில் தம்மால் குறிப்பிடத்தக்களவு பங்களிப்பை வழங்கக்கூடியதாக இருக்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளனர். குறிப்பாக, கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலின் தாக்கத்திலிருந்து மீண்டு, தம்மால் இவ்வாறான பங்களிப்பை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என, இலங்கையின் ஏற்றுமதியாளர்கள் மத்தியில் முன்னெடுக்கப்பட்டிருந்த, ‘கொரோனா வைரஸ் வியாபார மற்றும் தொழிலாளர் சந்தை தாக்கங்கள்’ எனும் கருத்துக் கணிப்பில் தகவல் வெளியிடப்பட்டிருந்தது.  

இலங்கை வர்த்தக சம்மேளனத்தின் பொருளாதார புலனாய்வு பிரிவும் USAIDஉம் இணைந்து PARTNER நிகழ்ச்சித் திட்டத்துக்காக முன்னெடுக்கப்பட்ட ஆய்வின்போது, இந்தத் தகவல்கள் வெளிப்பட்டிருந்தன.  

இலங்கையின் ஏற்றுமதி வியாபாரங்களில், கொவிட்-19இன் தாக்கம் தொடர்பான இரண்டாவது மதிப்பாய்வாக இது அமைந்திருந்தது. 

மே மாதம் பொருளாதாரத்துக்காக நாடு மீள ஆரம்பிக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்றுமதிச் சேவைகளை வழங்கும் நிறுவனங்கள் எவ்வாறு சவால்களுக்கு வெற்றிகரமாக முகங்கொடுக்கின்றன என்பது பற்றிய உள்ளார்ந்த தகவல்களை வழங்குவதாக அமைந்திருந்தது.   

இந்த ஆய்வில் மொத்தமாக 39 ஏற்றுமதிப் பிரிவுகள் உள்வாங்கப்பட்டிருந்தன. இந்த ஆய்வில் பங்கேற்றிருந்த சுமார் 49 பேர், மே மாதம் இடம்பெற்ற ஆய்வில் பங்கேற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.   

ஓகஸ்ட் மாதம் முன்னெடுக்கப்பட்ட இந்த ஆய்வின் போது, வியாபாரச் செயற்பாடுகள் கொரோனா வைரஸுக்கு முன்னரான நிலையை மீண்டும் மெதுவாக எய்துவதாகப் பதிலளித்தவர்களில் பெருமளவானவர்கள் குறிப்பிட்டிருந்தனர். 53 சதவீதமான நிறுவனங்கள், தமது வழமையான பணிச் செயற்பாடுகளை ஆரம்பித்திருந்ததாக தெரிவித்ததுடன், 64சதவீதமான நிறுவனங்கள் தமது மொத்த ஊழியர் எண்ணிக்கையில் 60 சதவீதமானவர்களுடன் பணியாற்றுவதாகத் தெரிவித்திருந்தன. எவ்வாறாயினும், சுமார் 38 சதவீதமான நிறுவனங்கள், பகுதியளவிலான உற்பத்திச் செயற்பாடுகளைத் தாம் முன்னெடுப்பதாகத் தெரிவித்திருந்தன.  

புதிய சந்தை வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளல் தொடர்பில், முன்னைய ஆய்வில் காணப்பட்ட 63 சதவீதமானவர்களின் ஈடுபாடு, இந்த ஆய்வில் 49 சதவீதமாகக் குறைந்திருந்தது. தொற்றுப் பரவல் காரணமாக எழுந்த சவால்களுக்குப் புதிய பொருள்கள்/சேவைகளினூடாக முகங்கொடுப்பதாகத் தெரிவித்திருந்தனர்.  

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .