2025 ஜூலை 20, ஞாயிற்றுக்கிழமை

மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களுக்கு உதவ ஜப்பான் நடவடிக்கை

S.Sekar   / 2023 மார்ச் 20 , மு.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜப்பானிய அரசாங்கத்தினால் இலங்கையின் மொனராகலை, அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களில் கிராமிய வாழ்வாதார மேம்பாட்டுத் திட்டங்களை முன்னெடுப்பதற்காக 203,703 அமெரிக்க டொலர்கள் (சுமார் ரூ. 73.5 மில்லியன்) வழங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்துக்கான உடன்படிக்கை கைச்சாத்திடும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. இந்த உடன்படிக்கையில், ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி மற்றும், தொழில்புரியும் பெண்களின் குரல் (VOWW) தலைவி ஹர்ஷனி சந்தமாலி ஞானசிங்க, வீதிச் சிறுவர் (Street Child) நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர் அமரசிங்கம் கஜேந்திரன் மற்றும் பெரகமன அமைப்பின் பிரதம நிறைவேற்று அதிகாரி தர்மா எஸ். சமரநாயக்க ஆகியோர் கைச்சாத்திட்டிருந்தார்.

“Grant Assistance for Grassroots Human Security Projects” எனும் திட்டத்தினூடாக, அம்பாறையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் நீர்ப்பாசன நாளிகைக் கட்டமைப்பு நிறுவும் திட்டம், மட்டக்களப்பின் மாவடிமுன்மாரி அரச தமிழ் கலவன் பாடசாலையில் பாடசாலைக் கட்டடம் நிர்மாணித்தல் திட்டம் மற்றும் மொனராகலையில், கொட்டியாகல பிரதேசத்தில் பொது வீதி நிர்மாணத் திட்டம் போன்றவற்றை முன்னெடுப்பதற்காக இந்த உதவி மேற்கொள்ளப்பட்டுள்ளது.

நாட்டின் வடக்கு மற்றும் கிழக்குப் பிராந்தியங்களைச் சேர்ந்த இலகுவில் பாதிப்புறக்கூடிய மக்களுக்கு நிலைபேறான வாழ்க்கைச் சூழலை ஏற்படுத்திக் கொடுப்பதற்காக ஜப்பானின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை தூதுவர் மிசுகொஷி உறுதி செய்திருந்தார். இதற்காக உள்ளூராட்சி சபைகள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களுடன் இணைந்து வடக்கு கிழக்கு பிராந்தியத்தைச் சேர்ந்த பின்தங்கிய மக்களுக்கு தற்போதைய பொருளாதார நெருக்கடியிலிருந்து மீட்சி பெறுவதற்கும், நிலைபேறான வளர்ச்சியை எய்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளவதாக தெரிவித்தார்.

அம்பாறையின் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசத்தில் நீர்ப்பாசன விநியோகக் கட்டமைப்பு நிறுவும் திட்டத்தினூடாக, அணைக்கட்டு மற்றும் நீர்ப்பாசன நாளிகைக் கட்டமைப்பு மறுசீரமைப்பு நிர்மாணம் போன்றவற்றினூடாக விவசாயத்தில் உணவுப் பாதுகாப்பு மற்றும் போஷாக்கு போன்றவற்றுக்கு நிலைபேறான நீர் முகாமைத்துவத்தை ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. இலங்கையின் உலர் வலயத்தில் இந்தப் பிராந்தியம் அமைந்துள்ளதுடன், தற்போது காணப்படும் நீர்ப்பாசனக் கட்டமைப்பு யுத்தம் காரணமாக சேதமடைந்து காணப்படுகின்றமையினால், பெரும்பாலான விவசாயிகள் மழை காலத்தில் தமது காணிகளில் சில மாதங்களுக்கு பயிர்ச் செய்கையை மேற்கொள்கின்றனர். புதிய நீர்ப்பாசனக் கட்டமைப்பினூடாக, 595 குடும்பங்களுக்கு வருடம் முழுவதிலும் பயிர்ச் செய்கையை மேற்கொண்டு, விளைச்சல்களைப் பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும். 

மட்டக்களப்பு, மாவடிமுன்மாரி அரச தமிழ் கலவன் பாடசாலையில் பாடசாலைக் கட்டடம் நிறுவும் திட்டத்தினூடாக, இந்தப் பாடசாலையில் சிறுவர்களுக்கு தமது கல்விச் செயற்பாடுகளை போதியளவில், சௌகரியமாகத் தொடர்வதற்கு அவசியமான பாடசாலைக் கட்டடத்தை நிர்மாணித்து வழங்குவதாக அமைந்துள்ளது. பிரதேசத்தின் மிகவும் பின்தங்கிய பகுதியில் அமைந்திருப்பதால், வலயக் கல்வி அலுவலகத்தினால் இந்தப் பாடசாலை “மிகவும் பின்தங்கியது” என வகைப்படுத்தப்பட்டுள்ளது. போதியளவு வகுப்பறைகள் இன்மையினால், தற்போது சில வகுப்புகள், வெளியிடப் பகுதிகளில் முன்னெடுக்கப்படுகின்றன. புதிய கட்டடம் நிறுவப்பட்டதும், பாதுகாப்பான வகுப்பறைகள் மற்றும் ICT அறை போன்றன பாடசாலை மாணவர்களுக்குக் கிடைக்கும். பாடசாலையின் 113 சிறுவர்கள் மற்றும் 13 ஆசிரியர்களுக்கு பாதுகாப்பான வகுப்பறையில் கற்றல் மற்றும் கற்பித்தல் அனுபவத்தை பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருக்கும்.

மொனராகலை, கொட்டியாகல பிரதேசத்தில் பொது வீதி நிர்மாணிக்கும் திட்டத்தினூடாக, கொட்டியாகல பகுதியிலுள்ள பின்தங்கிய கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு சந்தைகள், பாடசாலைகள் அல்லது வைத்தியசாலைகள் போன்ற பகுதிகளுக்கு பயணம் செய்வதற்கு வீதி வசதியை மேம்படுத்திக் கொடுப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. இந்த கிராமங்களைச் சேர்ந்தவர்களுக்கு அருகாமையிலுள்ள நகரத்துக்கு சென்று தமது அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளை நிவர்த்தி செய்து கொள்வதற்கு பாதுகாப்பான வீதிக் கட்டமைப்பு இன்மையிலான சவால்களுக்கு முகங்கொடுத்துள்ளனர். இவர்கள் தற்போது இடர்கள் நிறைந்த செப்பனிடப்படாத வீதியை பயன்படுத்தி வருகின்றனர். பாதுகாப்பான வீதியை சென்றடைவதற்கு நடையாக 6 முதல் 7 கிலோமீற்றர்கள் வரை பயணம் செய்ய வேண்டியுள்ளது. பிரேரிக்கப்பட்டுள்ள வீதியினூடாக, சுமார் 800 கிராமத்தவர்களுக்கு பாதுகாப்பாகவும், இலகுவாகவும் அருகாமையிலுள்ள நகரத்துக்கு சென்றுவரும் வசதி ஏற்படுத்தப்படும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X