2023 ஜூன் 07, புதன்கிழமை

ஜப்பான் உதவியில் திருகோணமலை துறைமுகத்துக்கு இரவு நேர திசைகாட்டி கட்டமைப்பு கையளிப்பு

S.Sekar   / 2023 பெப்ரவரி 20 , மு.ப. 05:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான ஜப்பானிய தூதுவர் மிசுகொஷி ஹிதேகி, திருகோணமலை துறைமுகத்தின் இரவு நேர திசைகாட்டி கட்டமைப்பை கையளிக்கும் வைபவத்தில் பங்கேற்றிருந்தார். ஜப்பானிய அரசாங்கத்தின் பங்களிப்புடன் நிறுவப்பட்ட இந்த கட்டமைப்பை கையளிக்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது. திருகோணமலை அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட இந்த கட்டமைப்பு கையளிப்பு நிகழ்வில், இலங்கையின் துறைமுகங்கள், கப்பற் போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா மற்றும் இலங்கை துறைமுக அதிகார சபையின் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

கிழக்கு மாகாணத்தின் திருகோணமலை துறைமுக இரவு நேர திசைகாட்டி கட்டமைப்பை நிறுவும் பணிக்கு ஜப்பானிய அரசாங்கம் 2.63 பில்லியன் ரூபாயை பங்களிப்பு செய்திருந்தது. பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தித் திட்டத்தின் திருகோணமலை துறைமுக அபிவிருத்தித் திட்டத்துக்கமைய இந்த உதவி வழங்கப்பட்டிருந்தது. 2016 ஆம் ஆண்டில் இடம்பெற்ற ஜப்பான் – இலங்கை அமர்வின் பெறுபேறாக, 2017 ஏப்ரல் மாதத்தில் இந்தத் திட்டத்துக்கான உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. இந்து சமுத்திரத்தில் இலங்கையை முக்கிய மையமாக கட்டியெழுப்ப வேண்டியதன் முக்கியத்துவம் இந்த அமர்வின் போது வலியுறுத்தப்பட்டிருந்தது. இந்தத் திட்டத்தின் பிரதான நோக்கங்களாக, துறைமுக நிர்வாகத்தின் மிருதுவான செயற்பாட்டை உறுதி செய்வதுடன், இரவு நேர திசைகாட்டல் செயற்பாட்டை பாதுகாப்பானதாக அமைந்திருக்கச் செய்வது மற்றும் திருகோணமலை துறைமுகத்தின் 24 மணி நேர செயற்பாட்டை உறுதி செய்வது போன்றன அமைந்திருந்தன. முன்னர் திருகோணமலை துறைமுகம் இரவு நேரத்தில் இயங்க முடியாத சூழ்நிலை காணப்பட்டது. குறிப்பாக யுத்த காலப்பகுதியில் திருகோணமலை துறைமுகத்தின் கலங்கரை விளக்கம் மற்றும் இதர திசைகாட்டல் உபகரணங்கள் போன்றன அழிக்கப்பட்டிருந்தன. ஜப்பானிய நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட Mooring buoys, Navigation signs, Automatic Identification System (AIS) மற்றும் இதர துறைமுக சாதனங்கள் போன்றன இந்தத் திட்டத்தின் கீழ் கையளிக்கப்பட்டிருந்தன.

இந்தத் திட்டத்தின் பெருமளவான அனுகூலத்தினூடாக, பிராந்திய இணைப்புத்திறன் வளர்ச்சி மற்றும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளின் மறுசீரமைப்பு போன்றவற்றினூடாக இலங்கையின் சமூக-பொருளாதார அபிவிருத்தியை மேற்கொள்ளக்கூடியதாக இருக்கும் என ஜப்பானிய அரசாங்கம் எதிர்பார்க்கின்றது. அத்துடன், தெற்காசிய பிராந்தியத்தில் இலங்கைக்கு பொருளாதார, வர்த்தக மற்றும் சரக்குக் கையாளல் மையமாக திகழ முடிவதுடன், அமைவிட அனுகூலத்தைப் பெறவும் உதவியாக இருக்கும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .