2023 ஜூன் 02, வெள்ளிக்கிழமை

அதிகார வர்க்கத்தின் வரியின் பிடியில் பெண்கள்

Johnsan Bastiampillai   / 2020 நவம்பர் 30 , பி.ப. 02:22 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அனுதினன் சுதந்திரநாதன்

பட்ஜெட் மீதான விவாதத்தில், பெண் எம்.பிக்கள் மோதிக்கொண்ட சம்பவம், சமூகத்தின் கவனத்தை ஈர்த்திருந்தது. பெண்கள் மீதான வரிகள் தொடர்பிலும் கடந்த ஜனாதிபதி தேர்தலில், Pad Man என்று வர்ணிக்கப்பட்ட தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவின் தேர்தல் வாக்குறுதிகள் தொடர்பாகவும், பலரும் விவாதித்தார்கள். 

எமது நாட்டில் வாழும் பெண்களின் Sanitary Napkin தொடர்பிலான நிலை என்ன? மாதாந்தம் அவர்கள் எதிர்நோக்கும் அடிப்படை பிரச்சினையைக் கூட, இந்த அரசாங்கமும் வணிகர்களும் வணிக மயமாக்கி, இலாபம் தேட முனைகின்றார்களா?

பெண் அடிமைத்தனம் உடைப்போம் என்று பேசுபவர்கள், வணிகத்தில் பெண்களை போகப்பொருளாகப் பயன்படுத்துவதைக் கவனிக்க மறுக்கிறார்களா, இல்லை அதையேதான் விரும்புகிறார்களா? இந்த Sanitary Napkin தொடர்பிலான உண்மை நிலைவரம் தொடர்பில், சாதாரண பொதுமக்களும் ஆண் வர்க்கமும் அறிந்திருப்பது அவசியம். 

இலங்கை சனத்தொகையில், 52 சதவீதமாக இருக்கும் பெண்களில், சுமார் 4.2 மில்லியன் பெண்கள் ஒவ்வொரு மாதமும் மாதவிடாய் சார்ந்த பிரச்சினைகளைச் சந்திப்பவர்களாக இருக்கிறார்கள். இவர்களில் அநேகமானோருக்கு Sanitary Napkin, இன்னமும் ஆடம்பரப் பொருளாக இருக்கின்றது. 

2018ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் வரை, இலங்கை பெண்கள் தமது மாதவிடாய் காலத்தில் பயன்படுத்தும் Sanitary Napkin களுக்கு, சுமார் 101.2 சதவீதமான வரியைச் செலுத்தியுள்ளனர். இதில், பொது வரி 30%, பெறுமதிசேர் வரி 15%, துறைமுக வரி 7.5%, தேசத்தைக் கட்டியெழுப்பும் வரி 2%, அரச வரியாகவுள்ள CESS வரி 30% என்பன வெளிப்படையாகத் தெரியும் வரிகளாக அறவிடப்பட்டு வந்திருந்தது. 

நாட்டினதும் சமூகத்தினதும் மூலாதாரத் தேவைகளுக்கு மிக உயரிய பங்களிப்பை வழங்கிவரும் பெண்களின் அடிப்படை பிரச்சினைக்குத் தீர்வாக அமையும் பொருளுக்கே, சுமார் 101.2% வரியைச் செலுத்த வேண்டிய பெருமைமிகு சமூகமாக இருந்திருக்கிறோம். 

2018 செப்டெம்பர் மாதத்துக்குப் பின்னதாக, மற்றொரு பிரச்சினை எழுந்தது. இந்தப் பிரச்சினை, சமூக வலைத்தளங்களில் விவாதிக்கப்படத் தொடங்கியதும், வரிமூலமாகக் கொள்ளை இலாபத்தை உழைத்துக்கொண்டிருந்த அரசாங்கம் Sanitary Napkin மீதான வரிக்குறைப்புக்கு இணங்கியிருந்தது. Sanitary Napkin மீதான 101.2 சதவீத வரிவிதிப்பானது 62.6 சதவீதமாகக் குறைவடைந்திருந்தது. இது, வரவேற்கக் கூடிய வரிக்குறைப்பாக இருந்த போதிலும், இந்த வரிமாற்றமும் கூட, அப் பிரச்சினைக்கு முழுமையான தீர்வாக அமைந்திருக்கவில்லை. 

2021ஆம் ஆண்டுக்கான பட்ஜெட்டில், அரசாங்கம் நேரடியாக Sanitary Napkinக்கான வரியை அதிகரிக்காத போதிலும், Cess வரியில் ஏற்படுத்திய அதிகரிப்பால் Sanitary Napkin க்கான வரி, 53.6 சதவீதமாக உள்ளது. 

இலங்கையின் சுகாதார ஆய்வறிக்கைகளின் பிரகாரம், இலங்கையில் இருக்கக் கூடிய பெண்களின் சராசரி மாதவிடாய் காலம், ஐந்து நாள்கள் எனக் கணக்கிடப்பட்டு இருக்கிறது. இந்த மாதவிடாய் காலத்தில், நாளொன்றுக்கு குறைந்தது நான்கு தடவைகளாவது Sanitary Napkinகளை மாற்றவேண்டியது அவசியமானது என, சுகாதாரத் தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

எனவே, பெண்ணொருவர் தனது மாதாந்த மாதவிடாய் பிரச்சினைக்காக பயன்படுத்தும் Sanitary Napkin க்காக மாத்திரம், அண்ணளவாக 1,000 ரூபாயைச் செலவிட வேண்டியதாக உள்ளது. இலங்கையில் வருமானம் குறைந்த தரப்பினரின் மாதாந்த சராசரி வருமானமாக, 14,843 ரூபாய் கணக்கிடப்பட்டுள்ளது. இந்த வருமானமானது, இலங்கையின் வருமானம் உழைப்பவர்களில் 20 சதவீதமானவர்களை பிரதிநிதித்துவப்படுத்துவதாக அமைந்திருக்கிறது. 

எனவே, இந்த வருமானம் உழைக்கும் குடும்பமொன்றில், குறைந்தது ஒரு பெண் இருப்பராயின், இவர்களது வருமானத்தில் மாதாந்தம் 6 சதவீதத்துக்கு மேற்பட்ட வருமானத்தை, Sanitary Napkin கொள்வனவு செய்வதற்காக செலவிடப்பட வேண்டியுள்ளது. 

இதுவே, ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் இருக்கின்றபோது, இந்த சதவீதமானது அதிகரித்துக்கொண்டே செல்லும் என்பதில் வேறு கருத்துகள் இல்லை. இதனாலேயே, பல குடும்பங்களில், ஒன்றுக்கு மேற்பட்ட பெண்கள் உள்ளவிடத்து, மூத்த பெண் உறுப்பினர்கள் தமது மாதவிடாய் சுகாதாரத்தில் சமரசம் செய்துகொள்ள வேண்டியநிலை ஏற்படுவதுடன், அதன் காரணமாக ஏற்படக்கூடிய நோய் தொற்றுகளையும் விரும்பாமலேயே ஏற்கவேண்டிய சூழ்நிலையும் ஏற்படுத்தப்படுகிறது. 

2015ஆம் ஆண்டில், இலங்கையில் 720 பாடசாலை பெண்கள், 282 பெண் ஆசிரியர்களிடம் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் பிரகாரம், 60 சதவீதமான பெண்கள், மாதவிடாய் காலத்தில் அவர்களின் பெற்றோர்களால் பாடசாலைக்கு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. 

அத்துடன், 68 சதவீதம் தொடக்கம் 81 சதவீதமான பெண்களுக்கு மாதவிடாய் தொடர்பிலான பூரண விளக்கமில்லாத சூழல் இருப்பது பதிவாகியிருக்கிறது. 
மாதவிடாய் தொடர்பில் ஆண்கள் கலந்துரையாடுவதையும் எமது சமூகம் தவிர்த்தே வந்திருக்கிறது. ஆகையால், இவ்வகைப் பொருள்கள் மீதான வரிக்குறைப்பு அல்லது வரி நீக்கம் இடம்பெறுவதும் அவசியமாகிறது. 

உலகளாவிய ரீதியில், 2004ஆம் ஆண்டு கென்யா தனது நாட்டின் Sanitary Napkinக்கு முற்று முழுதாக வரி நீக்கியிருந்தது. அபிவிருத்தி அடைந்த நாடுகளான அவுஸ்திரேலியா, கனடா, இந்தியா, அயர்லாந்து, மலேசியா போன்ற நாடுகள் Sanitary Napkin பொருள்களுக்கான வரியை முற்று முழுதாக நீக்க, அதற்குப்பின்னர் முன்வந்திருந்தது. 

இலங்கை பெண் எம்.பிக்கள் விவாதித்து கொண்டிருக்க,  ஸ்கொட்லாந்து நாடு Sanitary Napkin தேவையானவர்களுக்கு அதை இலவசமாக வழங்க முடிவெடுத்திருக்கிறது. பல நாடுகள் Sanitary Napkinக்கு வரிவிதிப்பதன் மூலமாக, வருமானத்தை ஈட்டிக்கொண்டிருக்கின்றன என்பது கவலைக்குரியதே.

 Sanitary Napkin கள் மீது சுமார் 50 சதவீதத்துக்கு மேற்பட்ட வரியை விதிப்பதன் மூலமாக, நாட்டின் பெரும்பாலான பெண்களுக்குக் கிடைக்கக்கூடிய அடிப்படை சுகாதார வசதிகளைக்கூட கிடைக்கவிடாமல் செய்வதுடன், அதன் காரணமாக நாட்டின் பங்காளிகளாக மாற்றமடையக் கூடிய பெண் வளத்தை இல்லாமல் செய்து, அவர்களை நோயாளர்களாகவும் மாற்றிக்கொண்டு இருக்கிறது. 

எனவே, வணிகத்தின் பெயரால் அடிமைகளாக வைக்கப்பட்டு, இலாபம் உழைக்கும் கருவிகளாகப் பயன்படுத்தப்படும் பெண்களின் நிலையில் மாற்றமொன்று வருவது அவசியமாகிறது. 

நாட்டின் பொருளாதாரத்தில் 0.02% வரி வருமானத்தைத் தருகின்ற Sanitary Napkin மீதான வரியை இல்லாமல் செய்வதன் மூலமாகவும் நிறைவான, காத்திரமான பங்களிப்பை, இந்த அரசாங்கம் இலங்கை மக்களுக்கும் பொருளாதாரத்துக்கும் செய்ய முடியும்.  

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .