2021 ஒக்டோபர் 17, ஞாயிற்றுக்கிழமை

தன் இறுதிச் சடங்கை ஒத்திகை பார்த்த பெண்

Editorial   / 2021 மே 24 , மு.ப. 09:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

நம்மில் பெரும்பாலானோர் வாழ்நாளில் ஒரு முறையாவது ”நாம் இறந்துவிட்டால் என்ன நடக்கும் என்பதை ” நினைத்துப் பார்த்திருப்போம்.  ஆனால் இங்கு ஒரு பெண் அதனை நடத்தியே பார்த்துள்ளார்.

    ஆம் கரீபியனிலுள்ள டொமினிகன் குடியரசு நாட்டில் பெண் ஒருவர் தனது இறுதி சடங்கை ஒத்திகை பார்த்த விநோதமான சம்பவமொன்று  அண்மையில் இடம்பெற்றுள்ளது.

அலோன்சோ (Mayra Alonzo) என்ற 59 வயதான பெண்ணே இவ்வாறு தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் உதவியுடன் சாண்டியாகோ நகரிலுள்ள தனது வீட்டில் தனது  இறுதி சடங்கை ஏற்பாடு செய்தார்.   

ஒரு சடலத்தின் தோற்றத்தை பிரதிபலிக்க இறுதி சடங்கின் போது பிறர் அணிவித்து விடும் சம்பிரதாய வெள்ளை நிற ஆடையை உயிரோடிருக்கும் போதே அணிந்து கொண்ட அலோன்சோ, ஏற்கனவே ஏற்பாடு செய்து வைக்கப்பட்டு இருந்த ஒரு சவப்பெட்டிக்குள் சென்று பல மணி நேரங்கள் படுத்து கொண்டார். 

  மேலும் அவர் மூக்கு துவாரத்தின் இரு பக்கமும் சடலத்திற்கு வைப்பது போன்று பருத்தி பஞ்சை அடைத்து கொண்டு, தலையில் ஒரு மலர் கிரீடத்தையும்  வைத்திருந்தார். 

 உண்மையானசடலம் போன்று  காட்சியளித்த அலோன்சோவை பார்த்த அவரது நண்பர்கள், உறவினர்கள் மற்றும் குடும்பத்தினர் அவரது மரணத்திற்கு இரங்கல் தெரிவித்து கண்ணீருடன் விடை கொடுப்பது போல அழுது பாவனை செய்தனர்.   

இருப்பினும் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் சிலரால் உண்மையில் அழுவது போல நீண்ட நேரம் நடிக்க முடியவில்லை. அவர்களில் ஒரு சிலர் சிரித்து கொண்டும், தங்களது தொலைபேசிகளில் புகைப்படங்களை எடுத்து கொண்டும் இருப்பதை காண முடிந்தது. 

சவப்பெட்டி வாடகை செலவு, துக்கம் அனுசரிக்க வந்த விருந்தினர்களுக்கு சிற்றுண்டி வாங்கியது உட்பட இந்த போலி இறுதிச் சடங்கிற்கு சுமார் 710 யூரோ செலவாகியுள்ளதாகக் கூறப்படுகின்றது. 

தனது கனவை நனவாக்க இந்த இறுதி சடங்கை ஏற்பாடு செய்ய உதவிய தனது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் அண்டை வீட்டார்களுக்கு நன்றி தெரிவித்த அலோன்சோ, நான் நாளை இறந்தால், யாரும் எதையும் செய்ய நான் விரும்பவில்லை, ஏனென்றால் நான் வாழ்க்கையில் இதை எல்லாம் ஏற்கனவே பார்த்துவிட்டேன் எனத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .