2022 மே 29, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் பலியான இளைஞனுக்கு நீதி கோரி வீதியை மறித்து போராட்டம்

Niroshini   / 2022 ஜனவரி 02 , மு.ப. 11:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

-க. அகரன்

 

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் இடம்பெற்ற விபத்தில் மரணித்த இளைஞனுக்கு நீதி கோரி, ஏ9 வீதியை மறித்து, நேற்று  (01) இரவு 10.30 மணியளவில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மரணித்த இளைஞனின் உறவினர்கள், நண்பர்கள் இணைந்து, இந்தப் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

வவுனியா - தாண்டிக்குளத்தில், பிக்கப் ரக வாகனமும், ஓட்டோவும் மோதி விபத்துக்குள்ளானதில், வவுனியா, தோணிக்கல் பகுதியைச் சேர்ந்த ரஜீபன் (வயது 32) என்ற இளைஞன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை முற்றுகையிட்டும், ஏ9 வீதியை மறித்தும், மரணித்த இளைஞரின் உறவினர்கள், நண்பர்கள் இரவு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஏ9 வீதியூடான போக்குவரத்து சுமார் ஒரு மணி நேரம் பாதிக்கப்பட்டது.

பொலிஸாரால் நிலைமையை கட்டுப்படுத்த முடியாமல் போக, சம்பவ இடத்துக்கு விசேட அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டனர்.

இதையடுத்து, ஏ9 வீதியை மறித்து போராடியவர்களை அகற்றிய விசேட அதிரடிப்படையினர், குழப்பம் விளைவித்ததாக பலரை கைது செய்து எச்சரிக்கையின் பின்னர், அனைவரையும் அங்கிருந்து வெளியேற்றினர்.

அத்துடன், நிலைமையை கட்டுப்படுத்த இராணுவத்தினரும் அவ்விடத்திற்கு பிரசன்னமாகியிருந்தனர்.

மக்களது போராட்டத்தை கட்டுப்படுத்த பொலிசார், விசேட அதிரடிப்படையினர், இராணுவத்தினர் இணைந்து நடவடிக்கை எடுத்ததையடுத்து, அப்பகுதியில் பதற்றநிலை ஏற்பட்டதுடன், முறுகல் நிலையும் தீவிரமடைந்தது.

சம்பவ இடத்திற்கு வருகை தந்த வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரும், மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவருமான கு.திலீபன், 'மரணித்த இளைஞனுக்கு நீதி கிடைக்கும். சரியான முறையில் விசாரணை இடம்பெறும்' என குறித்த இளைஞனின் தாயார் மற்றும் உறவினர்களுக்கு வாக்குறுதி அளித்ததுடன், போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போராட்டத்தை கைவிடுமாறும் கோரினார்.

இதையடுத்து, இரவு 11.50 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டதை அடுத்து, விபத்துக்குள்ளாகிய வாகனம் பொலிஸாரால் எடுத்து செல்லப்பட்டது.

விபத்து தொடர்பில் வவுனியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .