2021 டிசெம்பர் 07, செவ்வாய்க்கிழமை

வாழ்க்கையின் அழகான கனவு அவலட்சணமாகும் தருணம்

Editorial   / 2019 ஓகஸ்ட் 16 , பி.ப. 05:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

சட்டத்தைப் பற்றிய போதிய அறிவின்மை அல்லது அது பற்றிய அக்கறையின்மை காரணமாக, பல பெண்கள், தங்களுடைய திருமண வாழ்க்கையிலும் சரி சொத்து விடயங்களிலும் சரி, பல சிக்கல்களை எதிர்கொண்ட செய்திகள் பலவற்றை நாம் கேள்வியுற்றிருக்கிறோம்.

பிந்திய திருமண வாழ்க்கையானது, பல பெண்கள் சிக்கலில் மாட்டிக்கொள்ளவும் வழிசமைக்கிறது எனலாம். காரணம், திருமண பந்தத்தில் இணைந்துகொள்ள நெடுநாளெடுக்கும் பெண்கள், இனி எவரையேனும் திருமணம் செய்துகொள்வோமென்ற மனநிலைக்கு வருகின்றனர். அவ்வாறானவர்கள், தனக்குக் கிடைக்கப்போகும் துணை குறித்து, பெரிதும் தேடிப்பார்ப்பதில்லை. பெரும்பாலும் இவ்வாறான பெண்களே, தங்களது திருமண வாழ்க்கையை, மோசடிக்கார​ர்களுடன் பகிர்ந்துகொள்ளும் நிலைமைக்குத் தள்ளப்படுகின்றனர்.

இவ்வாறான பெரும்பாலான பெண்கள், ஏற்கெனவே திருமணம் முடித்தவரையோ அல்லது திருமணம் முடித்தும் முறையாக விவாகரத்துப் பெறாத​வரையோதான் தனது வாழ்க்கைத் துணையாகத் தேர்ந்தெடுக்கிறார்கள். இதனால், இத்தனைக்காலம் அவர்கள் சேர்த்து வைத்திருந்த பணம், சொத்துகள் அனைத்தையும் இழக்கவேண்டிய துர்ப்பாக்கிய நிலைமைக்கு அவர்கள் தள்ளப்படுகிறார்கள்.

இவ்வாறான பொறிகளுக்குள் சிக்கிக்கொள்ளாது. புத்திசாலித்தனமாகத் தமது திருமண வாழ்க்கையைத் தேர்ந்தெடுப்பது குறித்த சட்ட ஆலோசனைகளே இங்கு தரப்படுகின்றன.

மோசடி மனப்பான்மையுடைய பெரும்பாலான ஆண்கள், திருமண வயதைத் தாண்டிய பெண்களையே முதலில் இலக்கு வைக்கின்றனர். இவ்வாறானவர்கள், மணமகள் சேர்த்து வைத்திருந்த பணம், நகை, சொத்துகள் அனைத்தையும் மூட்டை கட்டிக்கொண்டு, படுத்த பாய்க்குகூட சொல்லாமல் ஓடிவிடுவதாகவே, பாதிக்கப்பட்ட பெண்கள் கூறுகின்றனர். இவ்வாறானவர்களைத் தேடிக் கண்டுபிடிப்பதும் கடினம்.

அத்துடன், இவ்வாறான மோசடிக்காரர்கள் அழைத்துவரும் திருமணப் பதிவாளர்கள்கூட போலியானவர்களாகவே இருக்கின்றனர். பார்ப்பதற்கு உண்மையானதைப் போன்றே காணப்படும் திருமணப் பதிவுச் சான்றிதழ்கள், சட்டத்தின் முன் போலியானவை என்று கண்டுபிடிக்கப்படுவதை அடுத்து, அந்தத் திருமணம் பூச்சியம் மற்றும் வெற்றிடத் திருமணமாகவே கருதப்படும். இதனால், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு, சட்டரீதியாகக் கிடைக்கவேண்டிய உரிமைகள் கிடைக்காமல் போகின்றன.

எவ்வாறாயினும், ஏமாற்றித் திருமணம் செய்துகொண்டார் என்ற அடிப்படையில் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றைச் செய்து, அவருக்கு எதிராக நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். அதன் கீழ் அவரை, பலதாரத் திருமணக் குற்றத்தின் கீழ் குற்றவாளியாகக் கொண்டுவர முடியும். அத்துடன், பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 1 இலட்சம் ரூபாய் வரையில் நட்டஈடு பெறமுடியும்.

இதைவிட அதிக​ ​தொகை நட்டஈடு வேண்டுமாயின், மாவட்ட நீதிமன்றத்தில் சிவில் நட்டஈட்டு வழக்கொன்றைத் தாக்கல் செய்து, குறிப்பிட்ட நபர் தன்னை மோசடி செய்ததால் தனக்கு ஏற்பட்ட மன உளைச்சல், சமூகத்தில் ஏற்பட்ட அவமானம், வாழ்க்கையின் பெறுமதி குறைவடைந்தமை ஆகிய காரணங்களைக் குறிப்பிட்டு, நட்டஈட்டைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு உள்ளது.

இவ்வாறான மோசடிக்காரரூடாகப் பிள்ளையொன்றைப் பெற்றிருந்தால், அந்தக் குழந்தை பிறந்தது முதலான பராமரிப்புத் ​தொகையையும் பெற்றுக்கொள்ளலாம்.

எவ்வாறாயினும், தான் மோசடிக்காரரிடம் மாட்டி, அவரைத் திருமணம் செய்துகொண்டேன் என்று அறியக்கிடைத்தவுடன் சட்ட நடவடிக்கை எடுப்பதே சிறந்தது. இல்லாவிடின், அவருடன் பல காலம் குடும்பம் நடத்தி, குழந்தையையும் பெற்றுக்கொண்ட பின்னர் சட்ட நடவடிக்கை நோக்கி நகர்ந்தால், சட்டத்தினூடாகப் பெற்றுக்கொள்ளக்கூடிய நிவாரணங்கள் குறைவாகவே இருக்கும்.

-சட்டத்தரணி
சஜீவனி அபேகோன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .