2022 ஓகஸ்ட் 11, வியாழக்கிழமை

செவ்வாய் கிரகத்தில் ரகசியப் பாதை? மௌனத்தைக் கலைத்தது நாசா

Ilango Bharathy   / 2022 மே 25 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

 
செவ்வாய் கிரகத்தில் ரகசிய பாதை போன்ற அமைப்பு இருக்கும் புகைப்படத்தை கியூரியாசிட்டி ரோவர் சில தினங்களுக்கு முன்னர் வெளியிட்டது.
 
இது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்திய நிலையில் தற்போது நாசா இதுகுறித்து விளக்கம் அளித்துள்ளது.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாசா கடந்த 2011 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் திகதி கியூரியாசிட்டி ரோவரை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்பியது. செவ்வாய் கிரகத்தின் தட்பவெட்ப நிலை, நில அமைப்பு, அங்கே உயிர்கள் வாழ சாதகமான சூழ்நிலை இருக்கிறதா? என்பதை கண்டறிவதே இந்த ரோவரின் நோக்கமாகும். இவ் விண்கலம் 2012 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம்  6 ஆம் திகதி செவ்வாய் கிரகத்தை சென்றடைந்தது.
 
அன்றிலிருந்து  பல்வேறு மாதிரிகளை சேகரித்து வருவதுடன், புகைப்படங்களை அனுப்பிவரும் இந்த ரோவர் கடந்த 7 ஆம் திகதி கேல் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள ஷார்ப் மலை குறித்து அனுப்பிய புகைப்படமொன்று  பலரையும் திகைக்க வைத்திருக்கிறது.

குறித்த புகைப்படத்தில் மலையில் ஒரு ரகசிய பாதை இருப்பது போன்ற வடிவம் தென்படுகிறது. இது பலரையும் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.
 
இந்நிலையில், இது ஏலியன்கள் எனப்படும் வேற்றுகிரக வாசிகளின் புகலிடமாக இருக்கலாம் எனவும் சிலர் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இது குறித்துக் கருத்துத் தெரிவித்த  நாசா," இந்த புகைப்படம் பலருக்கும் பாதை போன்று தோன்றியிருக்கிறது. ஆனால், இது சாதாரண புவியியல் அமைப்பு மட்டுமே. சிலருக்கு துல்லியம் இல்லாத சீரற்ற புகைப்படங்களை பார்க்கும்போதும் ஒரு தெளிவான வடிவம் தோன்றும். இதனை pareidolia என்கிறார்கள்" எனக் குறிப்பிட்டுள்ளது.

மேலும், இந்த ரகசிய கதவு இருப்பதாக சொல்லப்படும் இடத்தை தொலைவில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தையும் பதிவிட்டுள்ளது நாசா. அந்த மலை குன்றில் ஆங்காங்கே இப்படியான தோற்றம் இருப்பதையும் நாசா சுட்டிக்காட்டியுள்ளது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .