2021 ஜூன் 13, ஞாயிற்றுக்கிழமை

‘யோஷித’ பறக்கலாம்

Thipaan   / 2017 மே 24 , மு.ப. 06:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் புதல்வர்களில் ஒருவரான யோஷித ராஜபக்‌ஷ, தன்னுடைய சிகிச்சைகளுக்காக வெளிநாட்டுக்கு செல்வதற்கு, கொழும்பு மேல் நீதிமன்றம், நேற்று (23) அனுமதியளித்தது.

 சீல் வைக்கப்பட்டிருந்த அவருடைய கடவுச்சீட்டை, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் நீதிமன்றம் விடுவித்தது.   கால்டன் ஸ்போர்ட்ஸ் நெட்வேர்க் நிறுவனத்தில் பணச்சலவை செய்தனர் என்று, யோஷித ராஜபக்‌ஷ, நிஷாந்த ரணதுங்க மற்றும் ரொஹான் வெலிவிட்ட ஆகியோர் கைதுசெய்யப்பட்டு, பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தனர்.  

இந்த வழக்கு, கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இடம்பெற்று வந்த நிலையில், கொழும்பு மேல் நீதிமன்றத்தால் யோஷிதவுக்கு ணை வழங்கப்பட்டிருந்தது. எனினும், அவருடைய கடவுச்சீட்டு, கடுவலெ நீதவான் நீதிமன்றத்தினால் தடுத்து வைக்கப்பட்டிருந்தது.  

அவர், மருத்துவ சிகிச்சைகளுக்காக அவுஸ்திரேலியாவுக்குச் செல்லவிருப்பதாகவும் அதற்கு அனுமதி வழங்குமாறு கோரியும், அவர் சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவால், கடந்த 19ஆம் திகதி, கொழும்பு மேல் நீதிமன்றத்தில் கோரப்பட்டிருந்தது. அது தொடர்பில், 23 ஆம் திகதியன்று அறிவிக்கப்படும் என, நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.  

இந்த விவகாரம், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஏ.ஏ.ஆர்.ஹெய்யந்தொடுவ முன்னிலையில், நேற்று எடுத்துக்கொள்ளப்பட்டது, இதன்போது, சட்டமா அதிபர் திணைக்களத்தின் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் அந்த கோரிக்கைக்கு எவ்விதமான ஆட்சேபனையையும் தெரிவிக்கவில்லை.  

இதனையடுத்து, இம்மாதம் 31ஆம் திகதியிலிருந்து, இரண்டு மாதங்களுக்கு வெளிநாடு செல்ல அனுமதி வழங்கிய நீதிபதி, யோஷிதவின் கடவுச்சீட்டை, 5 இலட்சம் ரூபாய் பெறுமதியான ஆட்பிணையில் விடுவிக்குமாறு, கடுவெல நீதவான் நீதிமன்றப் பதிவாளருக்கு உத்தரவு பிறப்பித்தார்.  அவுஸ்திரேலியப் பயணத்துக்கு முன்னர், தன்னுடைய தந்தையாரான மஹிந்த ராஜபக்ஷவுடன், ஐந்து நாட்களுக்கு ஜப்பானுக்கு விஜயம் செய்யவுள்ளார் என்றும், அவருடைய சட்டத்தரணியால், மன்றில் அறிவிக்கப்பட்டது. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .