Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2017 மே 23 , பி.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகளின் சர்வதேச வெசாக் உற்சவம், இம்முறை இலங்கையில் கொண்டாடப்பட்டமை, அதில் கலந்துகொள்வதற்காக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் நேபாளத்தின் ஜனாதிபதி உள்ளிட்டவர்களின் இலங்கை விஜயம் காரணமாக, கடந்த வாரம், இலங்கை மிகவும் பிஸியான நாடாகத் தோற்றம் பெற்றிருந்தது.
வெசாக் கொண்டாட்டத்துக்காக இலங்கைக்கு விஜயம் செய்யும் இந்தியப் பிரதமருக்கு எதிராக, கறுப்புக் கொடி ஏந்தப் போவதாக, கடந்த மே தினத்தன்று, கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற ஒன்றிணைந்த எதிரணியின் மேதினக் கூட்டத்தின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச அறிவித்திருந்தார்.
அத்துடன், அவரது இலங்கை விஜயம், வெசாக் தோரணங்களைப் பார்ப்பதற்காகவன்று, இந்த நாட்டைக் காட்டிக்கொடுக்கும் ஒப்பந்தங்களில் கைச்சாத்திடுவதற்காவே ஆகுமெனவும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெசாக் காலத்தில், நாடு முழுவதிலும் கறுப்புக் கொடிகளை ஏற்றப்போவதாக அவர் சூழுரைத்திருந்தார்.
அவரது இந்தப் பேச்சுக்கு, கடும் எதிர்ப்புகள் கிளம்பின. இதனால், தங்கள் எதிரணியின் மூக்கு உடைபட்டுவிடும் என்று அச்சம்கொண்ட ஒன்றிணைந்த எதிரணியின் உறுப்பினர், உடனடியாக ஊடகவியலாளர் சந்திப்புகளைக் கூட்டி, “விமலின் தனிப்பட்ட கருத்தையே அவர் அன்று தெரிவித்தார். இது, ஒட்டுமொத்த எதிரணியினரின் கருத்தல்ல” என்று, உத்தியோகபூர்வமாக அறிவிக்கத் தொடங்கினர்.
எவ்வறாயினும், வெசாக் தினத்தன்று, விமலின் வீட்டில், “இந்த வீட்டுக்கு புத்தரின் ஆசீர்வாதம் கிட்டட்டும்” என்று எழுதப்பட்ட பதாகையொன்று மாத்திரமே தொங்கவிடப்பட்டிருந்தது. விமல் மாத்திரமல்ல, கம்மன்பிலவின் வீட்டில்கூட, கறுப்புக்கொடி என்ன, பௌத்தக் கொடியொன்று கூட பறக்கவிடப்பட்டிருக்கவில்லை.
சர்வதேச வெசாக் உற்சவத்தில் கலந்துகொள்வதற்காக, பிரதம விருந்தினராக இலங்கைக்கு விஜயம் செய்திருந்த இந்தியப் பிரதமர், இலங்கைக்குக் காலடி எடுத்துவைத்தவுடனேயே, கங்காராம விகாரையில் வழிபாடுகளுக்காகச் சென்றிருந்த நிலையில், அங்கு அமைக்கப்பட்டிருந்த வெசாக் வலயத்தையும் திறந்துவைத்தார்.
பின்னர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இரவு விருந்துபசாரத்துக்காக, ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லத்துக்குச் சென்றிருந்த அவரைச் சந்திப்பதற்கு, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அனுமதி கோரியிருந்தார்.
இரகசியச் சந்திப்பு
இது தொடர்பில், இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் தெரிவித்ததை அடுத்து, அந்தச் சந்திப்புக்கு அனுமதி வழங்குமாறு, ஜனாதிபதி ஆலோசனை வழங்கியிருந்தார்.
இதற்கமைய, இரவு 11 மணியளவில், மோடி - மஹிந்த சந்திப்பு இடம்பெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்துகொள்வதற்காக, கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் ஆகியோரும் சென்றிருந்த போதிலும், அவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்த நிலையில், மஹிந்த - மோடி சந்திப்பு, இரகசியச் சந்திப்பாக அமைந்தது.
எவ்வாறாயினும், சந்திப்பு முடிந்து திரும்பிய மஹிந்த, இருவரும் எது பற்றிக் கலந்துரையாடினார்கள் என்பது தொடர்பில், எவருக்கும் சொல்லவில்லை.
எவ்வாறாயினும், இந்தச் சந்திப்பு தொடர்பில் கருத்துத் தெரிவித்திருந்த விமல் வீரவன்ச, “ஒன்றிணைந்த எதிரணியின் தலைவர், மஹிந்த ராஜபக்ஷ. முன்னாள் ஜனாதிபதி மற்றும் எதிர்காலத்தில் இந்நாட்டின் ஆட்சியாளர் என்ற ரீதியிலேயே, மஹிந்தவை மோடி சந்தித்தார்.
அவர்களிருவருக்கும் இடையிலான சந்திப்பு, சுமூகமான முறையிலேயே இடம்பெற்றது. கறுப்புக்கொடி விவகாரம் தொடர்பில், மோடி கணக்கிலெடுக்கவேயில்லை” எனத் தெரிவித்திருந்தார்.
கறுப்புக் கொடிக்காரர்கள்
எவ்வாறாயினும், கறுப்புக் கொடிக்காரர்கள் தொடர்பில், பொலன்னறுவையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால, கடுமையான பதிலொன்றை வழங்கியிருந்தார். “மோடியின் வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, வெசாக் தினத்தன்று கறுப்புக்கொடி பறக்கவிடப்போவதாக சிலர் சொன்னார்கள். இந்த நாட்டின் ஒரு பகுதியை எடுத்துக்கொண்டுச் செல்வதற்கே அவர் வருகிறார் என்று சொன்னார்கள். நாங்கள் கொடுத்த விளக்கங்களை உதாசினப்படுத்தினார்கள். ஆனால், அவர்களே முன்வந்து, இரவு 11 மணிக்கு, மோடியை இரகசியமாகச் சந்தித்துவிட்டுச் சென்றார்கள். அதற்கு அனுமதி வழங்கியதும் நானே” என்று கூறியிருந்தார்.
புதுமையான தொப்பி
இது இவ்வாறிருக்க, நரேந்திர மோடி கலந்துகொண்ட நோர்வூட் மக்கள் சந்திப்பு, மிகவும் விசேடத்துவம் வாய்ந்ததாக அமைந்திருந்தது. இதனை வெற்றிகொள்ள, அமைச்சர்களான மனோ கணேசன் மற்றும் பழனி திகாம்பரம் ஆகியோர் தலைமையிலான தமிழ் முற்போக்குக் கூட்டணியும் முன்னாள் அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான் தலைமையிலான இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸும், மிகவும் பிரயத்தனம் காட்டியிருந்தன.
இந்தியப் பிரதமரைப் பார்வையிடுவதற்காக, தோட்டத் தொழிலாளர்கள், ஆயிரக்கணக்கில் கூடியிருந்தனர். அவர்களுக்கு, இந்திய தேசியக் கொடியின் வர்ணங்கள் அடங்கிய தொப்பிகள் விநியோகிக்கப்பட்டிருந்தன. அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில், மேற்படி தொப்பிகளை அணிந்திருந்தவர்கள், தனித்துத் தோன்றலாகினர்.
இது, தொண்டமானின் உபாயமாகவே காணப்பட்டது. தனது கட்சிக்காரர்களுக்கு அவ்வாறான தொப்பிகளை வழங்கி, மக்கள் மத்தியில் அவர்களைத் தனித்துத் தோற்ற அவர் மிகவும் பிரயத்தனம் காட்டியிருந்தார். தூரத்திலிருந்து பார்க்கும்போது, தொண்டமானின் கட்சிக்காரர்களே அதிகமாகக் காணப்பட்டதால், திகாம்பரம் முகத்தில் மலர்ச்சி காணப்படவில்லை என்பதும் யதார்த்தமே.
மாயப் படை?
மோடியின் பாதுகாப்புக்காக வருகை தந்திருந்த ஹெலிகொப்டர்களில் ஒன்று, தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, இலங்கையிலேயே தரித்திருக்க வேண்டிய நிலைமை ஏற்பட்டது. மோடி நாடு திரும்பிய போதிலும், அந்த ஹெலி, கண்டி - அஸ்கிரியவில் நிறுத்தப்பட்டிருந்தது.
அதனைத் திருத்திக் கொடுப்பதற்கு, இலங்கை விமானப்படையினர் முயன்ற போதிலும், இந்தியப் படையினர் அதற்கு மறுப்பு தெரிவித்திருந்தனர். காரணம், மோடி பயணிக்கும் உத்தியோகபூர்வ ஹெலிக்குள், எவரும் பிரவேசிக்கக்கூடாது என்பது, அந்நாட்டுப் படையினரின் கொள்கையாக இருந்தமையாகும்.
இந்நிலையில், ஹெலியைத் திருத்துவதற்காக, இந்தியாவிலிருந்தே விசேட குழுவொன்று வருகை தந்திருந்த போதிலும், அதனால் பறக்கமுடியாமல் போயிருந்தது. இதனையடுத்து, செய்யவேறு வழியின்றி, அதனைப் பறக்கவிடும் பொறுப்பு, இலங்கைப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனைத் திருத்திய இலங்கைப் படையினர், பின்னர் இந்தியப் படையினரை அழைத்துக்கொண்டு, தலதா மாளிகைக்குச் சென்று வழிபாட்டில் ஈடுபட்ட பின்னர், தங்களது பயணத்தை எவ்விதத் தடங்களுமின்றி, வெற்றிகரமாக மேற்கொண்டனர்.
வெற்றிச் செல்ஃபி
இவ்வாறானதொரு நிலையில், ஊவா மாகாணசபை அமைச்சர் செந்தில் தொண்டமான், இலங்கைக்கு விஜயம் செய்திருந்த மோடியுடன் செல்ஃபி எடுத்து மகிழ்ந்திருந்தார். அந்த வாய்ப்பு கிட்டிய ஒரேயோர் அரசியல்வாதி, செந்தில் தொண்டமானாவார். இந்த செல்ஃபியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்ட செந்தில், “மோடியுடனான செல்ஃபியின் வெற்றியாளன் நான்” என்ற தொனியில் கருத்தொன்றையும் பதிவிட்டிருந்தார்.
தூக்கம் தொலைந்த நாட்கள்
“காணாமற் போகச்செய்தமை குற்றமாக்கு” என்ற தொனிப்பொருளில், ஊடகவியலாளர்கள் சங்கமொன்றினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கருத்தரங்கொன்றில் கலந்துகொண்டிருந்த அமைச்சர் மஹிந்த அமரவீர, “என்னுடைய 26 வருட அரசியல் வாழ்க்கையில், தூக்கத்தைத் தொலைத்த நாளாக, அரசியலமைப்பின் 18ஆவது திருத்தத்துக்கு கையுயர்த்திய நாள் அமைந்தது” எனத் தெரிவித்திருந்தார். “அத்துடன், ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்துக்கும் சரத் பொன்சேகாவுக்கு எதிரான முடிவுகளுக்கும் தலையசைத்த போதும், என்னுடைய தூக்கத்தைத் தொலைத்துவிட்டேன்” என்றும், அவர் குறிப்பிட்டிருந்தார்.
மீண்டும் போராட்டம்
மாலபேயிலுள்ள “சைட்டம்” தனியார் மருத்துவக் கல்லூரிக்கு எதிராக, இம்மாதம் 29ஆம் திகதியன்று, பாரியதொரு தொழிற்சங்கம் போராட்டத்துக்கான தயார்படுத்தல்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான கலந்துரையாடலொன்று, அமைச்சர் லக்மன் கிரியெல்ல தலைமையில், அவரது அமைச்சில் இடம்பெற்றிருந்தது.
இதில், மின்சார, எண்ணெய்வளம், போக்குவரத்து உள்ளிட்ட அரச சேவைத் தொழிற்சங்கங்களின் சம்மேளனங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் பலர் கலந்துகொண்டிருந்தனர். இதன்போது அவர், இந்தப் போராட்டத்தைத் தோல்வியடையச் செய்வதாக, அமைச்சரிடம் உறுதியளித்ததை அடுத்து, அமைச்சர் அதற்கு நன்றி தெரிவித்திருந்தார்.
45 நிமிடக் கூட்டம்
கடந்த வாரம் இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்துக்கு முன்னரே, அக்கூட்டம் நடைபெறாதென்றும் அதற்கான காரணங்களைப் பட்டியல்படுத்தியும் செய்திகள் வெளியாகிக்கொண்டு இருந்தன. ஆனால், அந்தச் செய்திகளைப் பொய்யாக்கும் வகையில், ஜனாதிபதி தலைமையில் அமைச்சரவை கூடியிருந்தது. சுமார் 45 நிமிடங்கள் மாத்திரமே இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில், அமைச்சர்கள் பலர் கலந்துகொண்டிருக்கவில்லை.
அமைச்சரவை மாற்றம் தொடர்பில், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கிடையே, பனிப்போரொன்றே நடைபெற்றுக்கொண்டிருந்தது.
சில அமைச்சர்கள், தங்களால் வேலைகளைச் செய்ய முடிகின்ற போதிலும், அதற்கு தடைகள் ஏற்படுத்தப்படுவதாக, தங்களது கண்ணீர்க் கதைகளைப் பட்டியலிட்டுக்கொண்டிருந்த அதே தறுவாயில், சில எம்.பி.க்கள், அமைச்சர்களுக்கு எதிரான போர்க்கொடிகளை உயர்த்திக்கொண்டிருந்தனர். இதற்கிடையே, ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சரவை மாற்றத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என, கோஷமெழுப்பத் தொடங்கினர்.
‘ஆட்டம் பற்றி நாம் சொல்லிக்கொடுக்க நேரிடும்’
அரநாயக்க மண்சரிவில் பாதிக்கப்பட்டோருக்கான வீடமைப்புத் திட்டத்தைக் கையளிக்கும் நிகழ்வில் கலந்துகொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, “வடக்கிலுள்ள அரசியல்வாதிகள், எமது படையினரைத் தூற்றி வருகின்றனர்.
எந்தவோர் அனர்த்தம் ஏற்படும் போதும், எமது படையினரே முன்னின்று, மக்களுக்கு உதவி வருகின்றனர். இவ்வாறானதொரு சேவையை வழங்குவோரைத் தூற்றுவது குறித்து நாம் கவலையடைகிறோம்” என்றிருந்தார்.
“நான்கு, ஐந்துபேரைச் சேர்த்துக்கொண்டு, யுத்தத்தில் உயிரிழந்தவர்களுக்கு விளக்கேற்றும் நாடகமொன்றை, வடமாகாண சபை உறுப்பினர் சிவாஜிலிங்கம் அரங்கேற்றி வருகின்றார். நாம் பெற்றுக்கொடுத்த சுதந்திரம் காரணமாகவே தான், அவரால் இன்று அந்த நாடகத்தையேனும் அரசங்கேற்ற முடிகிறது. முப்படையினரால், வடக்கு - கிழக்கு மக்களுக்கு வழங்கப்படும் சேவைகள் குறித்து மக்கள் அறிவர். புலம்பெயர் தமிழர்களிடமிருந்து பணம் பறிப்பதற்காக, மேற்கண்ட நாடகங்களை அரங்கேற்றி வருபவர்கள், இது தொடர்பில் அறியார்.தொடர்ந்தும் இந்த அரங்கேற்றங்களைச் செய்வார்களாயின், அதற்குரிய தாளத்தை நாம் சொல்லிக்கொடுக்க நேரிடும்” என்றும், இராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டிருந்தார்.
கீதாவுக்கு சர்க்கரை கூடியது
இரட்டைப் பிரஜாவுரிமை காரணமாக, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி, நிலைகொள்ளுமா என்ற உறுதியற்ற நிலைப்பாட்டிலிருக்கும் கீதா குமாரசிங்க, தனக்கு நியாயம் வழங்கக்கோரி, உயர் நீதிமன்றத்தை நாடினார்.
அவரது வழக்கைத் தொடர்ந்து நடத்துவதற்கு, நீதிமன்றம் தீர்மானித்ததை அடுத்து, மிக மகிழ்ச்சியுடன் நீதிமன்ற வளாகத்தை விட்டு வெளியே வந்த கீதா, “எனக்குத் தெரிந்தமட்டில், இலங்கையில் மாத்திரமே எனக்கு பிரஜாவுரிமை உள்ளது. என்னுடன் உள்ள கோபத்தில், இப்படி என்னைப் பழிதீர்க்கப் பார்க்கிறார்கள். எவ்வாறாயினும், எனது வழக்கை விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியமை, மகிழ்ச்சியளிக்கிறது” என்று கூறிவிட்டு வெளியேறினார்.
ஆனால், அவர் அங்கிருந்து வெ ளியேறும் போதும், அரது உடலில் சர்க்கரையின் அளவு கூடியிருந்ததாகவும், சில மணிநேரங்கள் வரை அவர் அதனால் அவதியுற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
தலைகளை மாற்றுவதால் பிரச்சினை தீருமா?
தற்போதைய அரசியல் நிலைவரம் தொடர்பில், ஜே.வி.பி.யினரால் விசேட கலந்துரையாடலொன்று, கொழும்பில் நடத்தப்பட்டது. இதில் கலந்துகொண்டிருந்த விஜித்த ஹேரத் எம்.பி, “அரசாங்கத்தின் புதிய நாடமாக தற்போது, அமைச்சரவை மாற்றம் இடம்பெற்று வருகின்றது.
நாட்டு மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுப்பதை விடுத்து, தலைகளை மாற்றுவதால் என்ன பிரயோசனம்? இது என்ன புது விளையாட்டு?” என்று கேள்வி எழுப்பியிருந்தார்.
“தலைகளை மாற்றுவதால், நாட்டுப் பிரச்சினை தீரப்போவதில்லை. இதனால், மக்களுக்கு பதிய எதிர்ப்பார்ப்பை விதைக்கவே முயல்கின்றனர். ஜனாதிபதி, பெரிய பெரிய கதைகளைக் கூறுவார். ஆனால், செய்வதொன்றும் கிடையாது” என்று, கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்திருந்தார்.
மாறிய மாற்றம்
அமைச்சரவையின் இணைப் பேச்சாளர் ராஜித சேனாரத்னவை, அந்தப் பதவியிலிருந்து தூக்க, ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர்கள் முயன்ற போதிலும், அவரை அப்பதவியிலிருந்து தூக்குவதற்குப் பதிலாக, சு.க.வின் அமைச்சரவைப் பேச்சாளர் ஒருவரும் நியமிக்கப்படுவார் என்றே, இறுதியில் தீர்மானம் எட்டப்பட்டது.
ஆரம்பத்தில் அந்த வாய்ப்பு அநுர பிரியதர்ஷன யாப்பாவுக்கு செல்லவே, உடனடியாக அவர் அதனை நிராகரித்தார். பின்னர் அந்த வாய்ப்பு, தயாசிறிக்கு அளிக்கப்பட்டது. ஆரம்பத்தில் அதற்கு இணங்கிய தயாசிறி, பின்னர் அவரும் அதனை நிராகரித்தார். இதனால், இந்தப் பதவி யாரிடம் செல்லும் என்றே தெரியாத நிலை உள்ளது. பெரும்பாலும், ஜோனுக்கு அந்த வாய்ப்பு கிட்டக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாகவே கூறப்படுகின்றது.
அமைச்சரவை மாற்றம்
“இன்று போய் நாளை வா” என்ற நிலைமையில் காணப்பட்ட அமைச்சரவை மாற்றம், ஏதேவொரு வகையில், இன்று (நேற்று 22) இடம்பெற்றாகிவிட்டது. இந்த மாற்றத்தால், அரசாங்கம் எதை எதிர்பார்க்கின்றது என்று தெரியாமல், அமைச்சர்களே குழம்பிப்போயிருப்பதாகக் கூறப்படுகிறது. “அரசாங்கத்தைப் பலப்படுத்துவதற்காக என்று கூறி, தலைகளை மாற்றுவதால் மாத்திரம் என்ன பயன்?” என்பதே, பலரதும் கருத்தாக உள்ளது.
எவ்வாறாயினும், தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்க்கும் வகையில், இந்த மாற்றம் இடம்பெறுவதாக இருப்பின், அது மகிழ்ச்சிக்குரியதே. அவ்வாறில்லாவிடின், பெரிதாகப் பேசப்பட்ட அமைச்சரவை மாற்றம், மக்களை ஏமாற்றும் நடவடிக்கையாக மாத்திரமே அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.
31 minute ago
35 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
35 minute ago
2 hours ago
3 hours ago