Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
Thipaan / 2015 செப்டெம்பர் 17 , மு.ப. 04:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
-தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ
மனிதாபிமானத்தின் குரல் வலியது. அது ஒடுக்கப்பட்டோருக்காக ஒலிப்பதைவிட ஒடுக்குமுறையாளர்கட்காக ஒலிக்கும் போது நீண்ட தூரங்களை எட்டுகிறது.
இன்று, ஐரோப்பாவைச் சூழ்ந்துள்ள அகதிகள் நெருக்கடி, மனிதாபிமானம் பற்றிய புதிய கேள்விகளை எழுப்புகிறது. மனித உரிமைகள் பற்றிய வினாக்களைத் தொடுக்கிறது. உலக அரசியல் அரங்கில் மனித உரிமைக் காவலர்களின் மெய்யான முகம் மீண்டும் பிரசன்னமாகிறது.
இந் நெருக்கடி திடீரென உருவானது போன்ற தோற்றம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அதன் மூலங்களும் காரணங்களும் சிக்கலானவை. 2003ஆம் ஆண்டு ஈராக் மீதான ஆக்கிரமிப்பை அமெரிக்கா தலைமையிலான நேட்டோ படைகள் மேற்கொண்ட போது, இந் நெருக்கடிக்கு அத்திபாரம் இடப்பட்டது. சதாம் ஹுசேனை அகற்ற மேற்கொண்ட ஆக்கிரமிப்பு யுத்தமாகியது. இது ஷியா, சுன்னி மதப் பிரிவுகளையும் குர்திய மற்றும் பிற சிறுபான்மையினரையுங் கொண்ட ஈராக்கில் அமைதியின்மைக்கு வழிவகுத்தது. சதாமின் ஆட்சி அகற்றப்பட்ட பின்னணியில், அரசாங்கமில்லாத அமெரிக்கக் கூட்டுப்படைகள் வழிநடத்தியதாக ஈராக்கின் நிர்வாகம் இருந்தது.
அமைதியாக இருந்த மத்திய கிழக்கு அமைதியை இழந்தது. துருக்கி, சிரியா, ஜோர்டான், சவூதி அரேபியா, குவைத், ஈரான் ஆகிய நாடுகளை எல்லையாகக் கொண்ட ஈராக்கைப் பீடித்த அமைதியின்மை முழு மத்திய கிழக்கினதும் அமைதியை அச்சுறுத்தியது. ஈராக் யுத்தம் காரணமாக இடம் பெயர்ந்த மக்கள், ஈராக்கின் எல்லையோர நாடுகட்குப் போகத் தொடங்கினர். யுத்தத்தின் காரணமாக ஒன்றரை மில்லியனுக்கு மேற்பட்ட ஈராக்கியர்கள் இடம் பெயர்ந்தனர்.
அவர்களில்; ஒரு மில்லியனுக்கும் அதிகமானோர் சிரியாவில் தஞ்சம் புகுந்தனர். அவர்களுக்கான வசதிகளை சிரிய அரசாங்கம் ஏற்படுத்தியது. காலப்போக்கில் ஈராக்கில் குழுக்களுக்கிடையே தொடர்ந்த உள்நாட்டு யுத்தத்தால் மேலும் பல்லாயிரக் கணக்கான ஈராக்கியர்கள் சிரியாவுக்கு அகதிகளாகச் சென்றனர்.
ஈராக்கின் அமைதியின்மையைத் திட்டமிட்டு உருவாக்கிய அமெரிக்கா, மத்திய கிழக்கைத் தன் முழுக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் வாய்ப்பாக அதைக் கருதியது. சதாமுக்கு அடுத்த எதிரியாகப்; பெரும் எண்ணெய் வளத்தைக் கொண்டிருந்த லிபியாவின் கடா‡பி இருந்தார். லிபியாவைத் தனது ஆதிக்கத்துட் கொண்டுவரத் தடையாக இருந்த முவம்மர் கடா‡பியின் ஆட்சியை,h ஐக்கிய நாடுகள் சபையின் அனுமதியுடன் 2011இல் நடந்த இராணுவத் தலையீட்டின் மூலம் அகற்றியது.
இம் மாற்றத்தால் லிபியாவில் அரசில்லாத நிலை உருவானதுடன் உள்நாட்டுப் போர் மூண்டது. லிபியாவில்; அந்நிய இராணுவத் தலையீடும் அதைத் தொடர்ந்த உள்நாட்டு யுத்தமும் லிபியர்களை அகதிகளாக இடம்பெயர்த்தது. ஆயிரக்கணக்கான ஆபிரிக்கர்களும் மத்திய கிழக்கு நாட்டவர்களும் ஐரோப்பியக் கரைகளை அடைவதைத் தடுக்கும் சுவராக லிபியா இருந்தது.
நல்ல நிலையில் இருந்த லிபியப் பொருளாதாரம் அகதிகளாக லிபியாவுக்குள் வந்தோருக்கு அடிப்படை வசதிகளை ஏற்படுத்தியதோடு ஏராளமான வேலை வாய்ப்புக்களையும் உருவாக்கியது. அத்துடன் கடுமையாக நடைமுறைப்பட்ட எல்லைப் பாதுகாப்புச் சட்டங்களால் சட்டவிரோதமான கப்பற் பயணங்கள் தடைப்பட்டன. எனவே மத்திய தரைக் கடல் வழியாக ஐரோப்பாவுக்குட் புகும் வாய்ப்புகள் அரிதாகின.
லிபியாவில் கடா‡பியை அகற்றிய பின்பான உள்நாட்டு மோதல்களும் அரசற்ற சூழலும் மத்திய தரைக் கடல் வழியாக ஆபிரிக்கர்கள் ஐரோப்பாவை அடையும் வாய்ப்பை வழங்கின. லிபியாவின் அண்டை நாடுகளான நைகர், சூடான், மாலி, சாட் போன்ற நாடுகளின் உள்நாட்டுக் குழப்பங்கள் அந் நாட்டு மக்கள் லிபியாவினூடு ஐரோப்பாவுக்குள் செல்லும் முயற்சிகட்கு வழிகோலின.
வட ஆபிரிக்காவில் மட்டுமன்றி ஆபிரிக்காவெங்கும் இயற்கை வளங்களுக்காக நடக்கும் யுத்தங்கள் பல இலட்சம் பேரை அகதிகளாக்கியுள்ளன. இயலுமானவர்கள் லிபியாவினூடு மத்திய தரைக் கடல் வழியாக ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு ஐரோப்பியக் கரைகளை அடைய முயல்கிறார்கள்.
மறுபுறம் சிரியாவில் ஆட்சி மாற்றத்தை வேண்டி அமெரிக்காவும் மேற்குலகநாடுகளும் இஸ்லாமியத் தீவிரவாத அமைப்புக்களை ஊட்டி வளர்த்தன. சிரியாவில் அல் அசாத்தின் ஆட்சியை அகற்றுவதன் மூலம் தங்களுக்கு வாய்ப்பான ஓர் ஆட்சியை உருவாக்கும் நோக்கிலேயே சிரியாவில் உள்நாட்டுக் கலவரம் தூண்டப்பட்டது. அதற்கு உடந்தையாகச் செயற்பட்டது சவூதி அரேபியா.
அமெரிக்கா, மத்திய கிழக்கை முழுமையாகத் தனது கட்டுப்பாட்டுள் வைத்திருக்க இயலாமைக்குக் காரணமான இரண்டு நாடுகளில் ஒன்று சிரியா மற்றது ஈரான். எனவே சிரியாவில் ஆட்சி மாற்றம் அமெரிக்காவின் தவிர்க்கவியலாத தேவையாகிறது.
இதுவே, ஐ.எஸ்.ஐ.எஸ்.ஸின் தோற்றத்துக்கும் வளர்ச்சிக்கும் காரணமாகியது. இன்று சிரியாவில் தொடரும் உள்நாட்டுப் போர் கடந்த இரண்டு ஆண்டுகட்கு மேலாகக் கடுமையாகத் தொடர்வதற்கு ஐ.எஸ்.ஐ.எஸ். ஒரு முக்கிய காரணமாகும்.
இப் பின்புலத்திலேயே இப்போதைய அகதிகள் நெருக்கடியை நோக்கவேண்டும். இப்போது ஐரோப்பாவினுள் நுழைந்துள்ள, நுழைய முயல்கின்ற அகதிகளின் பிரச்சனை பற்றிய பார்வையும் பொதுப் புத்தி உருவாக்கமும் இதை வெறுமனே சிரியாவில் நிகழும் உள்நாட்டு யுத்தத்தால் ஐரோப்பாவுக்குள் வரும் சிரிய அகதிகளின் பிரச்சனையாகச் சுருக்குகிறது.
இது வெறுமனே சிரிய அகதிகளின் பிரச்சனையல்ல. சிரியாவில் தஞ்சம் புகுந்து அங்கு வாழ்ந்துவந்த பிற மத்திய கிழக்கு அகதிகளின் பிரச்சனையுமாகும். வட ஆபிரிக்காவின் யுத்தங்களாலும் வறுமையாலும் இடம்பெயரும் ஆபிரிக்கர்களின் பிரச்சனையுமாகும்.
ஊடகங்கள் இந் நெருக்கடியின் மூலங்களையும் அதன் காரணங்களையும் மறைத்துக் கவனமாகத் திசைதிருப்பும் நோக்கங்கள் கேடானவை. ஐரோப்பாவைச் சூழ்ந்துள்ள அகதி நெருக்கடி சிரிய யுத்தத்தின் விளைவு எனச் சொல்லப்படுகிறது. சிரிய யுத்தத்தைத் தொடக்கியது யார், நடத்துவது யார், போராளிக் குழுக்களைத் தோற்றுவித்து வளர்ப்பது யார், இவை கேட்காத கேள்விகள். ஆனாற் கட்டாயம் கேட்கவேண்டிய கேள்விகள்.
துருக்கியின் மத்தியதரைக் கடலில் ஒதுங்கிய குழந்தை அய்லானின் புகைப்படம் உலகின் கவனத்தை ஈர்த்தபோது மனிதாபிமானம் பற்றிய கேள்விகள் எழுந்தன. மனிதாபிமானம் பற்றியும் மனித உரிமைகள் பற்றியும் உலகெங்கும் பேசும் ஐரோப்பிய நாடுகள் அகதிகள் பற்றி என்ன நிலைப்பாட்டை எடுக்கின்றன என்பதை எல்லோரும் கண்டனர்.
குழந்தை அய்லான் சிரியாவில் ஆட்சி மாற்றத்துக்கான தேவையின் குறியீடானான். மேற்குலக ஊடகங்கள் அய்லானின் சாவுக்குக் காரணம் சிரியாவின் அல் அசாத் ஆட்சியே என்றும் சிரியாவில் ஆட்சி மாற்றம் தவிர்க்கவியலாதது எனவும் எழுதுகின்றன.
அவர்கள் சொல்வது போல, சிரியாவில் ஆட்சி மாறினால் அய்லான்கள் சாகமாட்டார்கள் என யாராலும் உறுதி வழங்க இயலாது. மேற்குலகின் அதிகார வெறியின் அண்மைய பலியே அய்லான். இருபது ஆண்டுகள் முன் ருவாண்டாவில், ஐந்து ஆண்டுகள் முன் வன்னியில், இவ்வாறு எத்தனையோ அய்லான்கள் இறந்தார்கள். எந்தக் கமெராவின் கண்ணுக்கும் சிக்காமல் ஆயிரக்கணக்கான அய்;லான்கள் ஆண்டுதோறும் இறக்கிறார்கள்.
சிரிய அகதிகள் மீது குவியுங் கவனம் ஏனைய மத்திய கிழக்கு நாடுகளைச் சேர்ந்த அகதிகளையும் ஆபிரிக்க அகதிகளையும் கவனத்திலிருந்து அகற்றுகிறது. ஆபிரிக்க அகதிகள் பற்றிய அக்கறையின்மைக்கும் சிரிய அகதிகள் குறித்து அக்கறைப்படுவதற்கும் வேறுபாடுண்டு. சிரிய அகதிகள் ஓரளவு படித்த மத்திய வர்க்கத்தைச் சேர்ந்தவர்கள் ஆபிரிக்க அகதிகள் வறுமையில் வந்தவர்கள். அவர்கள் கல்வியறிவு அற்றவர்கள். எனவே அவர்களைப் பயனுள்ள அகதிகளாகக் கொள்ளமுடியாது.
ஜேர்மனி 800,000 சிரிய அகதிகளை ஏற்பதாக அறிவித்துள்ளது. அவர்களிற் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள். பொருளாதார ரீதியாக வலுவாயுள்ள ஜேர்மனி, மக்கள் தொகை வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது. அவர்கட்குப் படித்த, இளவயதுள்ள சிரியர்கள் மலிவு விலையில் வேலைக்குக் கிடைப்பது இலாபம் மிக்கது. ஏனைய ஐரோப்பிய நாடுகளும் இவ்வாறு தங்களுக்குப் பயனுள்ள முறையிலேயே அகதிகளை உள்வாங்குகின்றன. இதற்கு மனிதாபிமானச் செயற்பாடு எனப் பெயர் சூட்டப்படுகிறது.
சிரிய அகதிகளைத் தெரிந்து நாடுகள் ஏற்பதற்கான கொள்கை ரீதியான முடிவு வெறுமனே பொருளாதார நோக்கங்களை மட்டும் கருத்திற் கொண்;டதல்ல. ஐரோப்பிய ஒன்றியம் இன்று பாரிய பொருளாதார நெருக்கடிகளை எதிர்நோக்குகிறது. கிரேக்கச் சிக்கல் நெருக்கடியின் ஆழத்தைக் கோடிட்டுக் காட்டுகிறது. இந் நிலையில் அகதிகளின் வருகை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் விரும்பக்கூடியதல்ல.
இந் நிலையிற் கொள்கைவகுப்பாளர்கள் அகதிகளை ஏற்கும் முடிவை எடுப்பதற்கு மூன்று அடிப்படைக் காரணங்கள் உள்ளன. முதலாவது, தத்தம் நாடுகளில் உள்ள சாதாரண மக்கள் இவ் அகதிகளை அன்போடு வரவேற்கிறார்கள். அகதிகள் குறித்த நியாயமான மனிதாபிமானம் அவர்களிடம் உள்ளது. எனவே அகதிகளில் கொஞ்சப் பேரையாவது உள்வாங்குவதை அரசாங்கங்கள் தவிர்க்கவியலாது.
இரண்டாவது, இவ்வாறு செய்வதன் மூலமே, சர்வதேச அரங்கில் மனித உரிமைக் காவலர்களாகவும் மனிதாபிமானிகளாகவும் தம்மைக் காட்டிக்கொள்ளும் நாடுகள் தொடர்ந்தும் தம் முகத்தைத் தக்கவைக்கலாம்.
மூன்றாவது, சிரியாவில் ஆட்சி மாற்றத்தின் பின் அல்லது யுத்தத்தின் முடிவின் பின் அவர்களை மீள அனுப்பமுடியும். அல்லாதவிடத்து அவர்களை ஆட்சிமாற்றத்துக்கான கருவிகளாகப் பயன்படுத்தலாம்.
இந்நெருக்கடியில் மௌனங்காக்கும் இன்னொரு தரப்பு மத்தியகிழக்கில் அமெரிக்காவின் பிரதான அடியாளகச் செயற்படும் சவூதி அரேபியா தலைமையிலான வளைகுடா நாடுகள். இன்று மத்திய கிழக்கில் அமெரிக்காவின் நம்பிக்கைக்குரிய இந் நாடுகள் இந் நெருக்கடியின் முக்கிய சூத்திரதாரிகள். ஆனால், இதுவரை இந் நெருக்கடி குறித்து இந் நாடுகளில் எதுவுமே வாய்திறக்கவில்லை. எண்ணெய் வளத்தில் திளைத்து பொருளாதாரத்தில் வலுவாக உள்ள இவ் வளைகுடா நாடுகள் வஹாபி இஸ்லாமியத் தேசியவாதத்தை ஊட்டிவளர்க்கிற அதேவேளை, அம் மக்களுக்காக எதுவும் செய்ய முன்வரவில்லை.
தங்கள் உயிர்களைக் காக்க ஐரோப்பாவுக்குள் நுழைந்த இவ்வகதிகள் எதிர்பார்ப்பது மேற்குலகின் மனிதாபிமானத்தை அல்ல. மேற்குலகு, மத்திய கிழக்கில் ஏவியுள்ள போர்களை நிறுத்துவதனூடு தாம்; தன்மானத்தோடு வீடு திரும்புவதையே.
இங்கு ஈற்றிற் தொக்கி நிற்கும் கேள்விகள், யாருடைய மனிதாபிமானம் என்பதும் யாருக்கான மனிதாபிமானம் என்பதுமே.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .