2025 ஜூலை 06, ஞாயிற்றுக்கிழமை

யாழ். போதனா வைத்தியசாலையின் துரித அபிவிருத்தி

George   / 2016 நவம்பர் 17 , மு.ப. 05:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சொர்ணகுமார் சொரூபன்  

“யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் தனிப்பிரிவாக நிர்மாணிக்கப்பட்டு வரும் விபத்துச் சிகிச்சை மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவுக்கான இரண்டு மாடிக் கட்டடத்தின் நிர்மாணப் பணிகள், எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் நிறைவடையும்” என யாழ்.போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் டி.சத்தியமூர்த்தி, புதன்கிழமை தெரிவித்தார்.  

குறித்த பிரிவினை நிர்மாணிப்பதற்கு, உலக வங்கியிடமிருந்து 600 மில்லியன் ரூபாய் நிதியுதவி, கிடைக்கப்பெற்றதை அடுத்து, கட்டுமானப பணிகள் ஆரம்பிக்கப்பட்டு, துரிதகதியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து உள்ளக வேலைகள் ஆரம்பமாகவுள்ளன.  

மத்திய சுகாதார அமைச்சின் 100 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ், வைத்தியசாலையின் உள்ளக திருத்த வேலைகள் அனைத்தும் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்குள் வைத்தியசாலைக்கான மலசல கூடம், வாகானத் தரிப்பிட விஸ்தரிப்பு, ஒழுங்குபடுத்தல், வைத்தியசாலை சுற்றுமதில் புனரமைப்பு மற்றும் வர்ணப்பூச்சு ஆகிய வேலைத்திட்டங்கள் அடங்குகின்றன. இதனைத் தவிர வைத்தியசாலையின் உட்கட்டமைப்பினை பேணுவதற்கான வேலைத்திட்டங்களும் இதனுள் அடங்குகின்றன.  

இவ்வாறு வைத்தியாசாலை அபிவிருத்திகள் சரியான திட்டமிடலின் கீழ் முன்னெடுக்கபட்ட நிலையில், எதிர்காலத் திட்டங்களும் முன் வைக்கப்பட்டுள்ளன. அத்திட்டங்களுக்கான அனுமதி மற்றும் நிதி கிடைக்கப்பெற்றவுடன் அதற்கான வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.  

இருதய சத்திரசிகிச்சைப் பிரிவு அமைப்பதற்கான 1,000 மில்லியன் ரூபாய்க்கான திட்ட அறிக்கை முன்மொழிவும், மகப்பேற்று சிகிச்சை மற்றும் குழந்தைகள் மருத்துவ விடுதி அமைப்பதற்கான 2,700 மில்லியன் ரூபாய்க்கான திட்ட அறிக்கை முன்மொழிவும், இந்த இரண்டு பிரிவுகளுக்குமாக உள்ளக உபகரணங்களுக்காக 6,000 ஆயிரம் மில்லியன் ரூபாய்க்கான திட்ட அறிக்கை முன்மொழிவும் வழங்கப்பட்டுள்ளன.  

இலங்கை அரசின் ஊடாக துருக்கி வங்கியில் இருந்து கடனாக நிதியினைப் பெறுவதன் மூலம் இந்த அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்த முடியும். மீள்குடியேற்றம் மற்றும் இந்து கலாசார, புனர்வாழ்வு மற்றும் சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் இதற்கான முயற்சிகளை மேற்கொண்டுள்ளார்.  

பாரிசவாத சிகிச்சைப் பிரிவும், சிறுநீராக மாற்று சிகிச்சைப் பிரிவுக்கான கட்டடத் தொகுதியும் அமைப்பதற்கான அரச நிதி எதிர்பார்க்கப்பட்டுள்ளது. இதனைவிட, வைத்தியசாலையின் குழந்தைகள் பிரிவை தனி வைத்தியசாலையாக இயக்குவதற்கு திட்டம் முன்வைக்கபட்டுள்ளது.  

இந்த குழந்தைகள் வைத்தியசாலையினை, யாழ். போதனா வைத்திசாலைக்கு வெளியில் இயக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டு அதற்கான எமது இடத்தெரிவாக யாழ். நாயன்மார்கட்டு பகுதி உள்ளது. ஆனால், வைத்தியசாலைக்கான இடம் இன்னமும் உறுதியாகவில்லை.  

வைத்தியசாலைக்கு தெற்கு புறமாக, வைத்தியசாலை வளாகத்துடன் இணைந்து காணப்படும் வெற்றுக்காணி, இலங்கை மின்சார நிலைய காணி ஆகியவற்றை வைத்தியசாலைக்கு பெற்றுதருமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கு வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடப்பட்டுள்ளது. இது தொடர்பாக பரிசீலனை செய்வதாக முதலமைச்சர் கூறியுள்ளார்.

இந்தபகுதி வைத்தியசாலைக்கு கிடைக்கப்பெற்றால் வைத்தியசாலையின் முன் பகுதி விஸ்தரிக்கப்பட்டு நில பிரிவுகள் ஆரம்பிப்பதற்கு வசதியாக அமையும்.  

வைத்தியசாலையில் தற்போது 240 வைத்தியர்களும் 76 வைத்திய நிபுணர்களும், 423 தாதியர்களும் பணியில் உள்ளனர். இருந்தும் வைத்தியசாலையின் தாதியர் அணி பற்றாக்குறையாக உள்ளது. இது நீண்ட காலமாக நிலவுகின்ற பற்றாக்குறையாகும். வைத்தியசாலையில் நிலவும் இந்த பற்றாக்குறை நிவர்த்தி செய்யப்படுவதாலும் மேல் குறித்த வசதிகள் ஏற்படுத்தப்படுவதாலும் மக்களுக்கான வைத்தியசேவையினை திருப்திகரமாக யாழ் . மாவட்டத்திலேயே வழங்க முடியும்” எனவும் அவர் கூறினார்.   


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .