2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

'குறிக்கோள்களை அடைய ஒன்றிணைவோம்'

Menaka Mookandi   / 2017 மார்ச் 31 , மு.ப. 11:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

“விமர்சனங்களுக்கும் குற்றச்சாட்டுக்களுக்கும் செவிசாய்த்து, அவற்றுக்குத் தீர்வுகாண முயற்சிப்பதை விடுத்து, நாட்டின் எதிர்காலத்துக்குத் தேவையான குறிக்கோள்களை அடைவதற்காக ஒன்றிணைந்து செயற்படுவோம்” என, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில், இன்று (31) முற்பகல் நடைபெற்ற “பேண்தகு இலங்கை” என்ற தேசிய நிகழ்வின் ஆரம்ப வைபவத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே, ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

சுய முயற்சியுடன் முன்னோக்கிச் செல்வதே, அபிவிருத்திக்கான அடிப்படை எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சுய முயற்சி மற்றும் அபிமானத்துடனேயே உலக நாடுகள் தமது அபிவிருத்திக் குறிக்கோள்களை நோக்கிப் பயணிக்கின்றன.

எமது எண்ணம் சார்ந்த மாற்றங்களே நாமும் ஒரு நாடு என்ற வகையில் முன்னோக்கிச் செல்வதற்கு அத்தியாவசியமானதென சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, பேண்தகு அபிவிருத்தி இலக்குகள் மற்றும் புத்தாயிரமாம் ஆண்டு இலக்குகள் என்பவற்றை அடைந்த பிரபல தேசமாக நாம் முன்னோக்கி பயணிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.

ஜனாதிபதியின் எண்ணக்கருவுக்கு ஏற்ப செயற்படுத்தப்படும் நச்சுத்தன்மையற்ற நாடு எனும் மூன்று வருடகால செயற்திட்டம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள பேண்தகு அபிவிருத்தி இலக்குகளுக்கு அமையவும் நடைபெறும் “பேண்தகு இலங்கை” தேசிய நிகழ்வு, இன்று முதல் ஏப்ரல் 4ஆம் திகதி வரை, கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெறவுள்ளது.

2015 செப்டெம்பர் மாதம் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் பேண்தகு அபிவிருத்தி தொடர்பான மாநாட்டில் பிரகடனம் செய்யப்பட்ட பேண்தகு அபிவிருத்தி இலக்குகளான வறுமை, விவசாயம், சுகாதாரம், கல்வி, பெண்களுக்கான பாதுகாப்பு, நீர், வலுசக்தி, வேலைவாய்ப்பு, கைத்தொழில், சமூக, சமனற்ற தன்மை, சனத்தொகை, நுகர்வு, காலநிலை வேறுபாடுகள், சமுத்திரம், உயிர்பல்வகைமை, சமாதானம் மற்றும் பொது வேலைத்திட்டங்கள் போன்ற துறைகள் உள்ளடக்கப்படும் வகையில், பேண்தகு இலங்கை தேசிய நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஒவ்வொரு அமைச்சுக்கள் மற்றும் வெவ்வேறு நிறுவனங்களால் மேற்கூறப்பட்ட இலக்குகளை அடைவதற்கான தமது செயற்பாடுகள் பிரதிபலிக்கப்படும் வகையில், கண்காட்சிக் கூடங்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், ஜனாதிபதி அவற்றைப் பார்வையிட்டார்.

“பேண்தகு அபிவிருத்தி இலக்குகளை ஒன்றிணைந்து வெற்றிகொள்வோம்” எனும் ஆலோசனை நூல், இதன்போது விவசாய, ஆராய்ச்சி அதிகாரிகளிடம் ஜனாதிபதியால் கையளிக்கப்பட்டது.

“நாமறிந்த விவசாயம்” தகவல் கையேடும், விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளுக்கு இதன்போது கையளிக்கப்பட்டது.

விவசாய திணைக்களத்தின் அறிவுறுத்தல்களுக்கேற்ப, சேதனப் பசளையை உற்பத்தி செய்த நிறுவனங்களுக்கான சான்றிதழ்களும், ஜனாதிபதியால் இதன்போது வழங்கப்பட்டன.

”நச்சுத்தன்மையான பயங்கரவாதத்துக்கு எதிராக மேற்கொண்ட விவசாய புரட்சியின்” வெற்றி பற்றிய அறிக்கையும் திருக்கோணமலை மாவட்டத்துக்கான ஜனாதிபதி விசேட நிகழ்ச்சித்திட்ட பணிப்பாளர் பிரியந்த பத்திரனவினால், ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இளம் விவசாய முயற்சியாளர்களை உருவாக்குதல் மற்றும் இயந்திரமயமான விவசாயம் என்பவற்றை நோக்காகக்கொண்டு, 210 நாற்று நடும் இயந்திரங்களும், 1000 தன்னியக்க களை பிடுங்கும் இயந்திரங்களும் கையளிப்பதன் ஆரம்பமாக அவற்றுக்குரிய ஆவணங்கள், ஜனாதிபதியால் விவசாயிகளுக்கு வழங்கி வைக்கப்பட்டன.

வண. அத்துரலியே ரத்தன தேரர், அமைச்சர்களான மஹிந்த சமரசிங்க, சுசில் பிரேமஜயந்த, நிமல் சிறிபால டி சில்வா, ரவி கருணாநாயக்க, துமிந்த திசாநாயக்க, தயாசிறி ஜயசேகர, தயா கமகே, சரத் பொன்சேகா ஆகியோருடன், நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஐக்கிய நாடுகள் சபையின் வசிப்பிட ஒருங்கிணைப்பாளர் மற்றும் அபிவிருத்தி செயற்திட்டங்களின் வசிப்பிட பிரதிநிதி ஊனா மெக்கோலி அம்மையார், மூலோபாய தொழில் முயற்சி முகாமைத்துவ நிறுவனத்தின் தலைவர் அசோக்க அபேகுணவர்தன உள்ளிட்டோரும், இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X