2025 ஜூலை 17, வியாழக்கிழமை

யாழில் 139பேர் கைது

Menaka Mookandi   / 2014 ஜனவரி 17 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நா.நவரத்தினராசா

'யாழ்ப்பாணத்தில் கடந்த வாரம் இடம்பெற்ற பல்வேறு குற்றச்செயல்கள் தொடர்பில்  139பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்' என்று யாழ். உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டீ.எம்.திலகரெட்ன தெரிவித்தார்.

யாழ். பொலிஸ் நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (17) நடைபெற்ற வாராந்த ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து தகவல் வழங்கிய அவர், 'யாழ்ப்பாணம் மற்றும் காங்கேசன்துறை பொலிஸ் நிலையத்திற்குட்பட்ட பொலிஸ் பிரிவுகளில் பதிவு செய்யப்பட்ட குற்றங்களின் அடிப்படையில் சிறு குற்றங்கள் புரிந்த 139பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றார்.

'யாழ்ப்பாணம் பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில், குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் 15 பேரும், அடித்து காயப்படுத்தியவர்கள் 16 பேரும், கொள்ளையுடன் தொடர்புடையவர்கள் இருவரும், சட்டவிரோதமான முறையில் மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் 6 பேரும், சந்தேகத்தின் பெயரில் 13 பேரும் கைது செய்யப்பட்டனர்.

அத்துடன், 'பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் 12 பேரும், சமாதானத்திற்கு பங்கம் ஏற்படுத்தியவர்கள் 04 பேரும், களவு குற்றச்சாட்டில் 08 பேரும், ஏனைய குற்றங்கள் சம்பந்தமாக 13 பேருமாக 89 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்' என்றார்.

'காங்கேசன்துறை பொலிஸ் அத்தியட்சகர் பிரிவில், பாரிய குற்றங்களில் சம்பந்தப்பட்டவர்கள் 4 பேரும், சந்தேகத்தின் பெயரில் 20 பேரும், சட்டவிரோத மது விற்பனையில் ஈடுபட்டவர்கள் இருவரும், பிடியாணை பிறப்பிக்கப்பட்டவர்கள் மூவரும் குடிபோதையில் வாகனம் செலுத்தியவர்கள் இருவரும், ஏனைய குற்றங்களுக்காக 19 பேருமாக 50 பேர் கைது செய்யப்பட்டு நீதிமன்றங்களில் ஆஜர்ப்படுத்தப்பட்டுள்ளனர்' எனவும் அவர் தெரிவித்தார்.

இதேவேளை, சுமார் 6 இலட்சம் ரூபா பெறுமதியான காசோலை மோசடியொன்று இடம்பெற்றதாக கண்டியைச் சேர்ந்த வியாபாரி ஒருவரினால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

யாழ். நகரத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவர் கண்டி, முல்கம்பளை என்னும் இடத்தைச் சேர்ந்த வியாபாரி ஒருவரிடம் இருந்து பொருட்களை பெற்றுக்கொண்டு காசோலையை வழங்கியதாகவும் தற்போது குறிப்பிட்ட காசோலைக்கான பணம் வங்கியில் இல்லாததுடன் குறிப்பிட்ட நபரையும் சந்திக்க முடியாத நிலையில் இந்த முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சந்தேகநபரை பொலிஸார் தேடிச் சென்ற வேளையில் அவர் தலைமறைவாகியுள்ளதாகவும் சந்தேகநபர் சம்பந்தமான புலன் விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

இதேவேளை, தனது இரு பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய தந்தை ஒருவரை பொலிஸார் கடந்த 10ஆம் திகதி கைது செய்துள்ளனர்' என உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் தெரிவித்தார்.

அளவெட்டிப் பகுதியில் 14, 15 வயதுடைய தனது இரு பிள்ளைகளை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாக தெல்லிப்பழை பிரதேச சிறுவர் உரிமைகள் பிரிவினருக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து சிறுவர் உரிமைகள் பிரிவினால் தெல்லிப்பழை பொலிஸ் நிலையத்தில் முறையிடப்பட்டுள்ளது.

இவ்விரு சிறுமிகளும் கடந்த 2010ஆம் ஆண்டிலிருந்து அவர்களது தந்தையினால் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டு வந்ததாக விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது. 

சந்தேகநபர் யாழ்ப்பாணம் சிறுவர் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டதைத் தொடர்ந்து எதிர்வரும் 24ஆம் திகதி வரை அவரை விளக்கமறியலில் வைக்கும்படி நீதிமன்றினால் உத்தரவிட்டுள்ளதாக' உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மேலும் தெரிவித்தார்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X