2025 ஜூலை 21, திங்கட்கிழமை

10 மில்லியன் ரூபாய் கொள்ளை; 3 பொலிஸ் அதிகாரிகள் உட்பட 7 பேர் கைது

Kogilavani   / 2013 மார்ச் 09 , மு.ப. 04:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொம்பனி வீதியில் கடந்த மாதம் இடம்பெற்ற 10 மில்லியன் ரூபாய் கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் 3 பொலிஸ் அதிகாரிகள் உள்ளடங்களாக 7 பேர் நேற்று வெள்ளிக்கிழமை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் பிரதி பொலிஸ்மா அதிபர் அனுர சேனாநாயக்க தலைமையிலான பொலிஸ் குழுவினர் இக்கைது நடவடிக்கையில் ஈடுபட்டதாக பொலிஸ் பேச்சாளர் புத்திக ஸ்ரீவர்தன தெரிவித்துள்ளார்.

இக்கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடையதாக கூறப்படும் மேற்படி 7 நபர்களும் கொழும்பின் பலபகுதிகளிலிருந்து கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இக்கொள்ளைச்சம்பவத்தில் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரிகள் இருவர் உட்பட அமைச்சரவை பாதுகாப்பு அதிகாரி ஒருவரும் உள்ளடங்குவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்தார்.

மேற்படி கும்பல் கொள்ளையடித்த பணத்தின் ஒருபகுதி மீட்கப்பட்டுள்ளதாகவும் மிகுதி தொகையை மீட்பதற்கான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

போக்குவரத்து பொலிஸ் அதிகாரி ஒருவரை தலைமையாக கொண்ட மேற்படி கொள்ளை குமபலானது, கடந்த மாதம் 12 ஆம் திகதி கொம்பனி வீதி, கங்காரம பகுதியில் வைத்து வர்த்தகர் ஒருவரிடமிருந்து 10 மில்லியன் ரூபாவை கொள்ளையடித்து சென்றுள்ளது.

மேற்படி சம்பவத்தில் பாதிக்கப்பட்ட வர்த்தகர் தனது மனைவியுடன் கங்காரமை விகாரைக்கு வழிபாட்டுக்காக சென்றபோது அவர் பயணித்த வானை போக்குவரத்து பொலிஸார் இடையில் வழிமறித்துள்ளனர்.

இதன்போது வந்த இனந்தெரியாத 4 நபர்கள் குறித்த நபரையும் அவரது மனைவியையும் வானிலிருந்து தள்ளிவிட்டு வானை புறகோட்டைப்பக்கமாக செலுத்தி சென்றதாகவும் அதில் ஒருவர் வான் வேண்டுமானால் பேலியாகொடை பக்கமாக வந்து பெற்றுகொள்ளுமாறும் கூறிவிட்டுச் சென்றதாக பாதிக்கப்பட்ட நபர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

குறித்த நபர் கொழும்பு, குற்றப்பிரிவு பிரிவில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதுடன் அவரது வான் சில மணிநேரங்களின் பின்னர் பேலியாகொடை பகுதியிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

  Comments - 0

  • vallarasu Saturday, 09 March 2013 06:45 AM

    நமது நாட்டில் இப்ப வேலிதான் பயிர மேயிது.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .