2025 ஜூலை 21, திங்கட்கிழமை

1.5 கோடி ரூபா மோசடி: சந்தேக நபருக்கு 2 வருடம் விளக்கமறியல்

Kogilavani   / 2013 ஜூன் 11 , மு.ப. 07:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-தேவ அச்சுதன்

சுமார் 1.5 கோடி ரூபாவுக்கு மேல், நிதி மோசடியில் ஈடுபட்டதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள நபரை இரண்டு வருடங்கள் விளக்கமறியலில் வைக்குமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வாழைச்சேனை பிறைந்துறைச் சேனையைச் சேர்ந்த ஆதம்பாவா முகமது ஜிப்ரிஸ் என்பவரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஏழுக்கும் மேற்பட்ட பிடியாணைகள் பிறப்பிக்கப்பட்டு நீண்டகாலமாகத் தேடப்பட்டு வந்த நிலையிலேயே குறித்த நபரை மட்டக்களப்பு பொலிஸார் கடந்த 9 ஆம் திகதி  ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்தனர்.

அவர், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் நேற்று ஆஜர் படுத்தப்பட்டப்போதே நீதவான் என்.எம்.எம்.அப்துல்லா மேற்கண்ட உத்தரவை பிறப்பித்துள்ளார்.

பிடியாணைகள் மற்றும் இவருக்கு எதிராக நிலுவையிலுள்ள வழக்குகளின் அடிப்படையிலேயே அவர் 2 வருடங்கள் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அரசாங்க மற்றும் தனியார் நிறுவனங்களில் தொழில்வாய்ப்பு பெற்றுத்தருதல் மற்றும் வெளிநாடுகளுக்கு அனுப்புவதாக கூறி குறித்த நபர் பலரிடம் பணம் வசூலித்து அவர்களை ஏமாற்றியுள்ளதாக அவருக்கு எதிராக பல பொலிஸ் நிலையங்களிலும் முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

மட்டக்களப்பு நீதிமன்றத்தின் ஊடாக 7 க்கும் மேற்பட்ட பிடியாணை உத்தரவுகள், கல்முனை நீதிமன்றத்தின் ஊடாக 4 பிடியாணை உத்தரவுகள் இவருக்கு எதிராக பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலேயே இவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை கைதுசெய்யப்பட்டார்.

மட்டக்களப்பு மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜந்த சமரகோனின் கட்டளையின் பிரகாரம், சூழல் பாதுகாப்புப் பிரிவு பொறுப்பதிகாரி எம்.எம்.எஸ்.புஸ்பகுமார தலைமையிலான சார்ஜன் எஸ்.விஜயசூரிய, கான்ஸ்ரபிள்களான ஏ.கோகுலன், ரி.ராஜபக்ஷ, பற்குணம், கே.பி.சில்வா, ஜெயந்திரன் அடங்கிய குழுவினரே இவரைக் கைதுசெய்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X