-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
வாழைச்சேனை - மீராவோடையில் மௌலவியின் வீட்டில் இடம்பெற்ற தங்க நகை மற்றும் பணம் திருட்டுச் சம்பவம் தொடர்பில் மோப்ப நாய்களின் உதவியுடன் இன்று சனிக்கிழமை மாலை மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
நேற்று மாலை மீராவோடை எல்லை வீதியைச் சேர்ந்த முஹம்மது முஹைதீன் முஹம்மது ஹாறூன் மௌலவி (வயது 40) என்பவரின் வீடு பூட்டப்பட்டிருந்த நிலையில் அவரது வீட்டிலிருந்த 16 பவுண் (22 கரட்) தங்க நகைகளும் எழுபத்தையாயிரம் ரூபாய் பணமும் திருட்டுப் போயிருந்ததாக அவர் பொலிஸில் முறைப்பாடு செய்திருந்தார்.
மோப்ப நாய்கள் சகிதம் ஸ்தலத்திற்கு விரைந்த குற்றத் தடுப்புப் பொலிஸார் சந்தேக நபர்கள் இருவரைக் கைது செய்துள்ளனர். மொத்தமாக இதுவரை மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஏற்கெனவே பிரதேசத்திலுள்ள சிறுவன் ஒருவன் வழங்கிய தகவலைத் தொடர்ந்து முதலாவது சந்தேக நபர் இன்று காலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தத் களவுடன் சம்பந்தப்பட்ட திருட்டு அணியாக இயங்கும் ஏனையவர்களையும் தேடி பொலிஸார் வலைவிரித்துள்ளனர்.