2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

‘குண்டர்கள் நட்டநடுவீதிகளில் குதிப்பதனால் அச்சமாய் உள்ளது’

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 06 , மு.ப. 02:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜ்

ஆர்ப்பாட்டம் எனும் பெயரில், கொலைக்குற்றவாளிகள், பாலியல் வன்புணர்வாளர்கள் மற்றும் திருடர்கள் பிரதான வீதிகளை மறித்து எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு, தமது போக்குவரத்துக்கு இடையூறு விளைவிப்பதானது பெரும் அச்சுறுத்தல் விடுப்பதாக உள்ளது என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சபாநாயர் கரு ஜயசூரியவின் கவனத்துக்குக் கொண்டுவந்தார். 

இத்தகையை குற்றவாளிகளின் கூட்டத்துக்குள் நிற்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் (எம்.பிக்கள்), குற்றவாளிகளாவே பார்க்கப்படுவர் என்றும் அவர் தெரிவித்தார்.

நாடாளுமன்றம் நேற்றுக் காலை 9.30க்கு, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் கூடியது, சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர் ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள், நாடாளுமன்றத்துக்கு வரும் சுற்றுவட்டத்துக்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட கண்ணீர்ப்புகைப் பிரயோகம் தொடர்பில் பிரஸ்தாபித்தனர். 

அத்துடன், ஆளும் கட்சியினரும் இந்த விவகாரம் தொடர்பில் கருத்துரைத்தனர். இதன்போதே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

“நாடாளுமன்ற சுற்றுவட்ட வீதியில் சனிக்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது வீதியின் ஒருபக்கம் மட்டுமே மூடப்பட்டுள்ளதாக எனக்குத் தெரிவிக்கப்பட்டது. இந்தத் தகவல் சரியானதா என எனக்குத் தெரியாது. எனினும், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாடாளுமன்றத்தை சுற்றிவளைக்கப் போவதாக சூளுரைத்தனர்.  

“ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் பல்கலைக்கழக மாணவர்கள் அல்லர். பிரதேச சபைகளின் தலைவர்களாக, தவிசாளர்களாக இருந்து திருடியவர்கள், கொள்ளையடித்தவர்கள் இதில் ஒருவர், 100 பெண்களை வன்புணர்ந்தவர். இன்னொருவர் வெளிநாட்டிலிருந்து வந்த ஜோடியில் பெண்ணைக் கொலைச் செய்துவிட்டு, வெளிநாட்டவரை கொலை செய்தவர். 

“இவ்வாறான குற்றவாளிகளே, வீதிகளை மறித்தது மட்டுமன்றி, நாடாளுமன்றத்தை சுற்றிவளைக்கப் போவதாக எச்சரித்து அச்சுறுத்தல் விடுத்தனர். இவ்வாறானவர்களின் நடவடிக்கையை ஆர்ப்பாட்டம் என்று கூறமுடியாது. அச்சுறுத்தல் என்றே சொல்லமுடியும். அந்த கோஷ்டியினருடன் இருக்கும் எம்.பிக்களை, குற்றவாளிகளாகவே பார்க்கவேண்டும். 

“இந்த கொலைக்குற்றவாளிகள், வன்புணர்வாளர்கள், கொள்ளையாளர்கள் மற்றும் திருடர்கள் வீதிகளை மறித்து ஆர்ப்பாட்டம் எனும் பெயரில் முன்னெடுக்கும் அச்சுறுத்தும் செயற்பாடானது, வீதிகளில் பயணிக்கும் எமக்கு அச்சமாகவே இருக்கின்றது” என்றும் பிரதமர் ரணில் விக்கரமசிங்க குறிப்பிட்டார்.

‘அவர்கள் குண்டர்கள்’

இந்த விவகாரத்தால் சபை சூடுபிடித்திருந்த நிலையில், எழுந்த சுஜீவ சேனசிங்க, ஒழுங்குப்பிரச்சினைகளை எழுப்பி, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் அல்லர். அவர்கள் குண்டர்கள். இவ்வாறான குண்டர்களுடன் சிரேஷ்ட அரசியல்வாதிகளான தினேஷ் மற்றும் பந்துல ஆகியோர் நிற்பது இளம் அரசியல்வாதிகளான தமக்கு தவறான முன்னுதாரணமாக அமைந்துவிடும் என்றார்.  

இதனிடையே கருத்துரைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்த விவகாரத்தால் குழுநிலை விவாதத்தின் நேரமும் குறைந்து செல்கிறது என்று சுட்டிக்காட்டியுதன், நாடாளுமன்றத்துக்குள் 2000 பேரை அனுமதிக்கமுடியாது என்று சுட்டிக்காட்டி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளிவைத்து, அவையை அடுத்த கட்ட நடவடிக்கைக்கு நகர்த்திச் சென்றார்.     

‘ஆடைகள் நனைந்திருந்தன’

இதன் போது கருத்துரைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, நாடாளுமன்றத்தை பாதுகாக்கும் பொறுப்புப் பொலிஸாருக்கு இருப்பதனால், அவர்களின் எல்லா நடவடிக்கைகளிலும் தன்னால் தலையிடமுடியாது. மக்களின் பிரதிநிதிகளை சந்திக்கும் உரிமை மக்களுக்கு உண்டு. எனினும், வீதிகளின் இரு மருங்குகளிலும் இருந்து எதிர்ப்பு நடவடிக்கைளை முன்னெடுக்கமுடியும் என்று நீதிமன்றம் கட்டளையிட்டிருந்த நிலையில், அதனை மீறியே இவர்கள் செயற்பட்டுள்ளனர் என்றார்.  

“இந்த ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரையும் தாக்கியுள்ளனர் அதில் காயமடைந்த பொலிஸ் அதிகாரியொருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்று பிரதிபொலிஸ்மா அதிபர் தெரிவித்தார். இந்தச் சம்பவத்தில் எம்.பிக்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லை. எனினும், அவர்களின் ஆடைகள் நனைந்திருந்தன. அதற்காக நான் கவலைப்படுகின்றேன். நாங்களும் கண்ணீர்புகைக்குண்டு பிரயோகம், நீர்த்தாரை பிரயோகங்களுக்கு முகங்கொடுத்தோம். அத்துடன் குண்டாந்தடிகளால் அடியும் வாங்கினோம்” என்றார்.   

‘மூட உத்தரவிட்டது யார்?’

இதனிடையே எழுந்த வாசுதேவ நாணயக்கார எம்.பி, “அன்றைய தினம் வீதியை மறித்து, வீதித்தடை போடப்பட்டிருந்தது. யாருடைய உத்தரவின் பேரில் இதனை பொலிஸார் செய்தனர். வீதியை மூடிவிடுமாறு நீங்கள் ஏதும் கூறினீர்களா? உங்களின் அறிவிப்பின் பேரிலா மூடப்பட்டது? வீதியை மூடி எமது சிறப்புரிமையை மீறிவிட்டனர்” என்று முறையிட்டார்.

இதன்போது, சற்றுக் கோபமடைந்த சபாநாயகர் கரு ஜயசூரிய, “என்னுடைய அதிகாரங்களை நான் ஒருபோதும் துஷ்பிரயோகம் செய்ததில்லை. நாடாளுமன்றத்தின் பாதுகாப்புக்கு பொலிஸாரே பொறுப்பு, பாதுகாப்பு விடயங்களில் சகல விடயங்களிலும் என்னால் தலையிடமுடியாது. ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது கண்ணர்ப் புகைக்குண்டுத் தாக்குதல் மேற்கொள்வதற்கு, என்னுடைய அனுமதி தேவையில்லை” என்றார்.   

‘எங்களைக் காக்கவும்’

நாடாளுமன்றச் சுற்றுவட்டத்தில் கடந்த சனிக்கிழமையன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, பொலிஸ் நடந்துகொண்ட விதம் குறித்து, நாடாளுமன்றத்தில் நேற்றுத் திங்கட்கிழமை கேள்வியெழுப்பிய ஒன்றிணைந்த எதிரணியின் எம்.பியான தினேஷ் குணவர்தன, பொலிஸார் நடந்து கொண்ட விதம், எம்.பிக்களின் சுதந்திரத்தில் தலையிடுவதாக அமைந்திருந்ததாகக் குறிப்பிட்டார்.

“எம்.பிக்கள் சிலரை அன்றையதினம் வாகனங்களிலிருந்து இறக்கிய பொலிஸார் அவர்களை நடக்கவிட்டனர். அத்துடன் எங்களைச் சந்திப்பதற்கு, மக்களுக்கு உரிமையுண்டு. அதற்கான உரிமையை பாதுகாத்துத் தரவேண்டும் இவ்வாறான பிரச்சினைகளை சர்வதேசத்துக்கு கொண்டுசெல்லும் பிரச்சினையாக்கிவிட வேண்டாம்” என்றும் சபாநாயகரிடம் கேட்டுக்கொண்டார்.   

‘ஏன் சுத்துகின்றீர்கள்?’

நாடாளுமன்றத்தை சுற்றிவளைக்கப் போவதாக ஆர்ப்பாட்டக்காரர்கள் அச்சுறுத்தினர் என்று சுட்டிக்காட்டிய சபை முதல்வரும் அமைச்சருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல, “சனிக்கிழமை நாடாளுமன்ற அமர்வு நாளாகும். எம்.பிக்கள் என்றால் சபையில் இருக்கவேண்டும். ஏன் வீதிகளில் சுற்றிதிரிந்தீர்கள்? உங்களில் சுமார் நான்கு எம்.பிக்கள் ஆர்ப்பாட்டக்காரர்களுடன் நின்றிருந்தனர். ஆர்ப்பாட்டக்காரர்கள் நாடாளுமன்றத்துக்கு அச்சுறுத்தல் விடுத்திருந்தமையால், அனைவரையும் உள்ளே விடமுடியாது. அது ஆபத்தானது” என்று குறிப்பிட்டார்.

‘சண்டைபோட முடியாது’

இதனிடையே கருத்து தெரிவித்த, ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பியான பந்துல குணவர்தன, “உத்தியோகபூர்வ வாகனத்தில் நாடாளுமன்றத்துக்கு நான் வந்தபோது, அவ்விடத்தில் வைத்து என்னை இறக்கிய பொலிஸார், நடந்துபோகுமாறு வலியுறுத்தினர். பொலிஸாருடன் என்னால் சண்டைபோடமுடியாது. அதனால், நான் நடந்தே சென்றேன்” என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .