2025 டிசெம்பர் 15, திங்கட்கிழமை

நாடாளுமன்றத்தில் இடம் வழங்காததால்தான் 'நீதிமன்றம் செல்ல வேண்டிய நிலை'

Gavitha   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனகலிங்கம் கோபிகிருஷ்ணா

நாடாளுமன்றத்தில் இடம் வழங்காததால் தான், நீதிமன்றம் செல்லவேண்டிய நிலைமை ஏற்பட்டது என்று ஒன்றிணைந்த எதிர்க்கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தன தெரிவித்தார்.

பெறுமதி சேர் வரி திருத்தச் சட்டமூலம் தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்மானம் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்பட்டது. இது தொடர்பாக, தினேஷ் குணவர்தன எம்.பி உரையாற்றிய பின்னர் உரையாற்றுவதற்காக அவர் எழுந்ததுடன், ஆளுங்கட்சியிலிருந்து அவரைப் பேசவிடாமல் செய்வதற்காக உரத்துக் குரலெழுப்பப்பட்டது.

இவற்றுக்கு மத்தியில் உரையாற்றிய பந்துல எம்.பி, 'அரசியலமைப்பின் 148ஆவது பிரிவுக்கு ஏற்பட்ட, நாடாளுமன்றத்துக்கு நிதி அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது' என்று தெரிவித்ததும், ஆளுங்கட்சியிலிருந்து மீண்டும் குரல்கள் எழுந்தன. பலர் இணைந்து, 'வாடிவென்ட வாடிவென்;ட' (அமருங்கள், அமருங்கள்) எனக் குரலெழுப்பினர்.

ஆளுங்கட்சியின் கூச்சலைத் தொடர்ந்து, தான் பேச வந்த விடயத்தை விட்டு, ஆளுங்கட்சி மீது குற்றச்சாட்டுகளை, பந்துல எம்.பி முன்வைத்தார். 'இந்த நாடாளுமன்றத்தில் இடம் வழங்கப்படாமையின் காரணமாகத் தான், நீதிமன்றத்துக்குச் செல்ல வேண்டி ஏற்பட்டது. நாடாளுமன்றத்தைப் புல்டோசர் செய்ய முயல்கிறீர்கள்' என்றார். இதனைத் தொடர்ந்து, ஆளுங்கட்சியின் கூச்சல், மேலும் அதிகரித்தது.

அதன்போது எழுந்த ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவும் அமைச்சருமான கயந்த கருணாதிலக, ஷிராணி பண்டாரநாயக்கவை அவரது பதவியிலிருந்து அகற்றுவதற்குச் செயற்பட்டமையைப் போன்று, உயர் நீதிமன்றத்தின் மீது தங்களது அரசாங்கம் விரலால் குத்துவதில்லை எனத் தெரிவித்து அமர்ந்தார். அவரது கூற்றுக்கு, ஆளுங்கட்சியிலிருந்து பலத்த வரவேற்பு வழங்கப்பட்டது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .