Princiya Dixci / 2016 நவம்பர் 30 , மு.ப. 03:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
அழகன் கனகராஜ்
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரி, ஒன்றிணைந்த எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றாக எழுந்துநின்று வலியுறுத்தியமையால், சபையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை, சற்று சலசலப்பு ஏற்பட்டது.
நாடாளுமன்றம் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நேற்றுச் செவ்வாய்க்கிழமை காலை 9.30க்குக் கூடியது. சபையின் பிரதான நடவடிக்கைகள் நிறைவடைந்ததன் பின்னர், உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர்,அமைச்சு அறிவிப்பொன்றை விடுவார் என்று சபாநாயகர் அறிவித்தார்.
இதனையடுத்து எழுந்த உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபா, ஜே.வி.பியின் எம்.பியான அநுரகுமா திஸாநாயக்க, கடந்த அமர்வில் கேள்விக்கு பதிலளிக்க இன்னும் 3 வாரகால அவகாசம் வேண்டுமென சபையில் கோரிநின்றார். அதனையடுத்து எழுந்த அநுரகுமார திஸாநாயக்க, குறிப்பிட்ட மாகாணத்தில் அரசியல் பழிவாங்கல்கள் இடம்பெறுவதாகவும், இதனால் ஊழியர்கள் அச்சமடைந்துள்ளதாகவும் சுட்டிகாட்டியதுடன் அரசியல் பழிவாங்கல் இடம்பெறாது என அமைச்சர் உத்தரவாதமளிக்க வேண்டுமென கோரிநின்றார்.
அதற்குப் பதிலளித்த அமைச்சர் முஸ்தபா, மாகாணத்தின் அதிகாரம், ஆளுநர் வசமே உள்ளது. இதுதொடர்பில் ஆளுநரின் கவனத்துக்கு கொண்டுவருவேன்” என்றார். இதனிடையே, அவையிலிருந்து ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் எம்.பிக்கள் அனைவரும் ஒன்றாக எழுந்துநின்றதுடன், கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கு ஏன் தேர்தல் நடத்தப்படவில்லை என்று தினேஷ் எம்.பி கேட்டார்.
பதிலளித்த அமைச்சர் எல்லைகள் நிர்ணயம் தொடர்பில் மேன்முறையீடு செய்யப்பட்டுள்ளதால் அப்பணிகள் இன்னும் பூர்தியாகவில்லை. பூர்த்தியடைந்ததும் தேர்தல் நடத்தப்படும் என்றார்.
இந்தப் பதிலை ஏற்றுக்கொள்ளாத எம்.பிக்கள் 17பேரும், கலைக்கப்பட்ட உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடனடியாக நடத்துமாறு கோரிநின்றனர். பதிலுக்கு ஆளும் பக்கத்திலும் எதிர்க்கட்சி பக்கத்திலும் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் எழுந்துநின்று பதில் கோஷமிட்டனர் இதனால் சபையில் சலசலப்பு ஏற்பட்டது.
நேரத்தை கவனத்தில் கொண்டு உறுப்பினர்கள் ஒத்துழைக்கவேண்டும் என்று சபாநாயகர் கடுமையாக எச்சரித்தமையினால் சலசலப்பு அப்படியே அமைதியடைந்தது. அதனையடுத்து அவை நடவடிக்கைளை சபாநாயகர் அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்திச் சென்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .