2024 ஏப்ரல் 20, சனிக்கிழமை

பெரும்பான்மையை நிரூபிக்க முடியாமல் திமிறியது புதிய அணி

Editorial   / 2018 நவம்பர் 15 , மு.ப. 08:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

அழகன் கனகராஜா  

 

எட்டாவது நாடாளுமன்றத்தின் மூன்றாவது அமர்வினது முதலாவது கூட்டம், பெரும் களேபரத்துக்கு மத்தியில், குறுகிய நேரத்துக்குள் நிறைவடைந்தது. அதன்போது, தங்களுக்குப் பெரும்பான்மை இருப்பதை நிரூபிக்க முடியாமல் திமிறிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான புதிய அரசாங்கம், கூச்சல் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டு, சபையிலிருந்து வெளியேறிவிட்டது.

இந்நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ மற்றும் அவரது தலைமையிலான அமைச்சரவைக்கு எதிராக, ஜே.வி.பியினால் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை, குரல் வாக்குப்பதிவின் ஊடாக நிறைவேற்றப்பட்டது.   

இதனிடையே, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பி, தமிழ் முற்போக்குக் கூட்டணி உள்ளிட்ட கட்சிகளுடன் கைகோர்த்த ஐக்கிய தேசிய முன்னணி, தங்களுக்கு 122 உறுப்பினர் இருப்பதாக, தங்களுடைய பெரும்பான்மையை நிரூபித்தது.   

இதனால், நாட்டில் இரண்டு பிரதமர்கள் இல்லை என்பதற்கும் ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியன்று ஏற்படுத்தப்பட்ட இரவுப் புரட்சிக்கும், நாடாளுமன்றத்தின் ஊடாக நேற்று (14) முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.   
உயர்நீதிமன்றத்தின் இடைக்காலத் தடையுத்தரவை அடுத்து, ஜனாதிபதியினால் ஏற்கெனவே விடுவிக்கப்பட்ட விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக, நாடாளுமன்றம் நேற்று (14) கூடியது.   

சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், நேற்றுக் காலை 10 மணிக்கு சபை கூடியவேளையில், ஆளுந்தரப்புப் பக்கத்தில், புதிய பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ தலைமையிலான குழுவினரும் எதிர்த்தரப்பில், ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஜே.வி.பி உறுப்பினர்களும் அமர்ந்திருந்தனர்.   

நாடாளுமன்ற அமர்வு நாள்களில், என்றொருபோதும் நிரம்பியிருக்காத சபை, வரவு - செலவுத்திட்டம் சமர்ப்பிக்கப்படும் நாளன்று மட்டும் எப்படி நிரம்பிவழியுமோ அதுபோலக் காட்சியளித்தது. எனினும், மக்கள் கலரிகள் வெறிச்சோடியே காணப்பட்டன.   

சபாநாயகருக்கான கலரியில், வெளிநாட்டுத் தூதுவர்கள், உயர்ஸ்தானிகர்கள்,தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகராலயங்களின் பிரதிநிதிகள் அமர்ந்திருந்தனர். அவர்கள் அனைவரும், செவிப்பண்ணிகளை அணிந்திருந்தனர்.   

ஜனநாயகச் சால்வை

எதிரணியில் இருந்த ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள், தங்களுடைய கழுத்துகளில் ஜனநாயம் என எழுதப்பட்ட கறுப்பு நிறத்திலான சால்வையை அணிந்திருந்தனர். அதில், மும்மொழிகளிலும் ஜனநாயகம் என எழுதப்பட்டிருந்தது.   

ஆளுந்தரப்பில் அமர்ந்திருந்த ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்களின் கழுத்துகளிலும், அந்த ஜனநாயக சால்வை தொங்கியது.   

இலக்கங்கள் இருந்தன

எதிரணியின் வரிசையில் அமர்ந்திருந்தவர்களது மேசைகளின் மீது, பத்திரிகையில் அச்சடிக்கப்பட்ட இலக்கங்கள் இருந்தன. முதலாவது இலக்கத்தை ரணில் விக்கிரமசிங்க வைத்திருந்தார். இதேவேளை, ஆளும் தரப்பில் இருந்த ஐக்கிய தேசிய முன்னணியைச் சேர்ந்தவர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டிருந்த இலக்கங்களைக் கைகளில் ஏந்தியிருந்தனர்.   

வருகைக்கான மணி

நாடாளுமன்ற உறுப்பினர்களை சபைக்குள் அழைப்பதற்குரிய வருகைக்கான மணி, காலை 9:55 மணிமுதல் 10 மணிவரையிலும் ஒலித்தது. மணியோசை நிறைவடைந்தவுடன், பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, சபைக்குள் பிரவேசித்தார். அப்போது, ஆளும் தரப்பிலிருந்தவர்கள், மேசைகளில் தட்டி ஆரவாரஞ் செய்தனர்.   

அந்த முக்கியக் கூட்டங்கள்

நாடாளுமன்றம் கூடுவதற்கு முன்னதாக, சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில், அவருடைய அலுவலகத்தில், நேற்றுக் காலை 8:30 மணிக்கு, கட்சித் தலைவர்களுக்கான முக்கிய கூட்டமொன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில், புதிய பிரதமருக்கும் ஆளும் கட்சியின் பிரதம கொறடாவுக்கும், அந்தந்தப் பதவிக்குரிய ஆசனங்களை ஒதுக்குவதற்குத் தீர்மானிக்கப்பட்டது.   

அதன் பின்னர், ஐக்கிய தேசிய முன்னணி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஜே.வி.பியின் நாடாளுமன்றக் குழுக்கூட்டம் நடத்தப்பட்டது.   

நம்பிக்கையில்லாப் பிரேரணை

இதில், ஜே.வி.பியின் நாடாளுமன்ற குழுக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானத்துக்கு அமைவாக, புதிய பிரதமருக்கும் அவர் தலைமையிலான அமைச்சரவைக்கும் எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை, சபாநாயகர் கரு ஜயசூரியவிடம் கையளிக்கப்பட்டது.   

அவ்விருவரும் நான்காம் வரிசையில்

நாடாளுமன்றம் கூடியபோதும், எதிரணியில் சில உறுப்பினர்கள் எழுந்து நின்றுகொண்டு, அங்குமிங்கும் ஓடியோடி திரிந்துகொண்டிருந்தனர். இன்னும் சில உறுப்பினர்கள், தங்களுடைய ஆசனங்களை வேறு கட்சிகளின் உறுப்பினர்களுக்குக் கொடுத்துதவினர்.   

இந்நிலையில்,ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகிய இருவரும், எதிரணியின் நான்காம் வரிசையில் அமர்ந்திருந்தனர்.   

செங்கோலுக்கு பின்னர் வந்த ரணில்

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, சபைக்குள் பிரவேசித்த சில நொடிகளில் மணியோசை நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் படைகல சேவிதரினால் செங்கோல் கொண்டுவரப்பட்டது. மேடையில் செங்கோல் வைக்கப்பட்டதன் பின்னர் தான், ரணில் விக்கிரமசிங்க சபைக்குள் பிரவேசித்தார்.   

ஆடை அணிந்திருந்தார்; முன்பாக வரவில்லை

வழமையாகவே சபை நடவடிக்கைகள் ஆரம்பிக்கும் போது, சபாநாயகருக்குரிய ஆடையை அணிந்து, செங்கோலுக்கு முன்பாக வரும் சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்றைய தினம், செங்கோலுக்கு முன்பாக வருகைதரவில்லை, செயலாளர் நாயகம், உதவி மற்றும் பிரதிச் செயலாளர்கள் மட்டுமே வருகைதந்தனர்.   
சபாநாயகர் மேடைக்குப் பின்னாலுள்ள கதவினுடாகவே, சபாநாயகர் கரு ஜயசூரிய, நேற்றைய தினம் நாடாளுமன்றத்துக்கு வருகைதந்தார். அவர் வழமைபோலவே சபாநாயகருக்குரிய ஆடையை அணிந்திருந்தார்.   

தாவி வந்தோருக்கு ஜனநாயக மாலை

கூடுவதற்கு முன்னரே சூடுபிடித்திருந்த சபை, கூடியவுடன் இன்னும் சூடுபிடித்தது. எதிரணியின் பக்கத்திலிருந்து கோஷங்கள் எழுந்தவண்ணமே இருந்தன. இந்நிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த பியசேன கமகே, ஆளுந்தரப்புப் பக்கத்திலிருந்து, எதிரணிப் பக்கமாக வந்தார்.   

எதிரணியில் இருந்த தேரர்

எதிரணியில் இருந்துகொண்டே, புதிய அரசாங்கத்துக்கு ஆதரவளிக்கப் போவதாக அண்மையில் அறிவித்திருந்த உடுவே தம்மாலோக்க தேரர், நேற்றைய தினமும், எதிரணியின் முன்வரிசையிலேயே அமர்ந்திருந்தார்.   
அவருக்கு, ஜனநாயக சால்வையொன்று, மாலையாக அணிவிக்கப்பட்டதுடன் கைலாகு கொடுத்து வரவேற்பும் அளிக்கப்பட்டது. அவ்வாறு வந்தவர்களுக்கு, எதிரணியின் முன்வரிசையில் ஆசனங்கள் வழங்கப்பட்டன.   

பின்கதவால் நுழைந்து குறுக்காக வந்தார்

அதுவரையும் எதிரணியில் நின்று அளவளாவிக் கொண்டிருந்த இராஜாங்க அமைச்சர் மனுஷ நாணாயக்கார, எதிரணியின் பின்கதவால் வெளியேறி, ஆளும் தரப்புக்குள் நுழைந்து, சபை நடுவினூடாக, எதிரணிக்கு வந்தார். அப்போது, எதிரணியினர் தங்களது மேசைகளில் தட்டி, ஆரவாரஞ்செய்து வரவேற்றனர். அவர், ஏற்கெனவே தன்னுடைய கழுத்தில் ஜனநாயகச் சால்வை அணிந்திருந்தமையால், அவருக்கு சால்வை அணிவிக்கப்படவில்லை.  

அவர்கள் மூருவருக்கும் முன்வரிசை

இதேவேளை, ஆளுந்தரப்பின் அமைச்சர்களான டக்ளஸ் தேவானந்தா மற்றும் ஆறுமுகன் தொண்டமான் ஆகிய இருவருக்கும், ஆளும் தரப்பில் முன்வரிசை ஒதுக்கப்பட்டிருந்தது. அவ்விருவரும், ஆரம்பத்திலிருந்தே சபையில் இருந்தனர்.   

இராஜாங்க அமைச்சர் ஏ.எச்.எம்.பௌசி, எதிரணியின் ஊடாக சபைக்குள் பிரவேசித்து, எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தனின் ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். அவருக்கும், ஜனநாயகச் சால்வை அணிவிக்கப்பட்டது. எனினும், ஓடோடிவந்த உறுப்பினர் ஒருவர், அவ்வாசனத்துக்குப் பக்கத்து ஆசனத்தில் அமருமாறு, பௌசியிடம் கேட்டுக்கொண்டார். பௌசியும் அவ்வாறே அமர்ந்துகொண்டார்.   

எனினும், சற்றுநேரத்துக்கு பின்னர் சபைக்குள் பிரவேசித்த த.சித்தார்த்தன், எதிர்க்கட்சித் தலைவருக்குரிய ஆசனத்தில் அமர்ந்துகொண்டார். அவர், தனக்கு முன்பாக அமர்ந்திருந்த அமைச்சர் டக்ளஸ் தேவானந்தவுடன் இரண்டொரு வார்த்தைகள் பேசினார்.   

தடுமாறிவிட்ட சபாநாயகர்

இவ்வாறாக சுவாரஸ்யமான சம்பவங்கள் இடம்பெற்றிருந்த நிலையில், சபாநாயகர் அறிவிப்பின் போது, நாடாளுமன்றத்தைக் கூட்டுவதற்காக, ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட அதி விசேட வர்த்தமானி அறிவித்தல், செயலாளர் நாயகத்தினால் அறிவிக்கப்பட்டது.   

பின்னர், பயங்கரவாதத் தடுப்புத் சட்டம் தொடர்பான உயர் நீதிமன்றத்தின் வியாக்கியானத்தை, சபாநாயகர் கரு ஜயசூரிய அறிவித்தார். சிங்கள மொழியில் அறிவிக்கப்பட்ட அதே அறிவிப்பை, ஆங்கில மொழியிலும் அறிவித்தார். இதனால், சபை சற்று அமைதியானது.   

“சேர், இரண்டும் ஒரே அறிவிப்பு தான்” என செயலாளர் நாயகம் எடுத்துரைக்க, சபையை அடுத்தகட்ட நடவடிக்கைக்கு, சபாநாயகர் நகர்த்திச் சென்றார்.   

வருகைதராத ஜனாதிபதி

நாடாளுமன்ற அமர்வு ஒத்திவைக்கப்பட்டு, மீண்டும் கூடும்போது, அக்கிராசனத்தில் அமர்ந்து, அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை, நாட்டு மக்களுக்கு ஜனாதிபதி விடுப்பார். எனினும், நேற்றைய தினம், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்றத்துக்கே சமுகமளிக்கவில்லை.   

தளர்த்திக்கொடுத்த சுமந்திரன்

இதனிடையே எழுந்த சுமந்திரன் எம்.பி, இன்றைய (நேற்றை) நாளுக்குரிய நிலையியற் கட்டளையைத் தளர்த்துவதற்கான பிரேரணையொன்றை முன்மொழிந்தார். அதனை, ஜே.வி.பியின் எம்.பியான விஜித்த ஹேரத் வழிமொழிந்தார்.   

ஹூ சத்தம்

இதன்போது, ஆளும் தரப்பினர் ஹூ சத்தமெழுப்பி கோஷமெழுப்பினர். ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான அமைச்சர் தினேஷ் குணவர்தன, இன்றைய நாளுக்குரிய நடவடிக்கைகளை நிறைவு செய்துகொண்டு, நாடாளுமன்றத்தை ஒத்திவைக்க வேண்டுமெனக் கேட்டுக்கொண்டார்.   

‘விசேட கவனஞ்செலுத்தவும்’

இலங்கை மட்டுமன்றி, சர்வதேசமும் இந்நாட்டின் அரசியல் தொடர்பில் அவதானத்தைச் செலுத்திக் கொண்டிருக்கின்றது என்பதால், இன்றைய சபை நடவடிக்கை தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டியுள்ளது. ஆகையால், மிகவும் கண்ணியமாக நடந்துகொள்ளுமாறு, சகல உறுப்பினர்களிடமும் சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.   

‘அதனை இது மீறமுடியாது’

இதன்போது எழுந்த தினேஷ் குணவர்தன, “கொடுப்பதாயின் கொடுப்பேன். நீங்கள் முட்டாளாகியது முதல் தடவையல்ல. அதேநேரம், நிலையியற் கட்டளை, அரசமைப்பை மீறமுடியாது” என்றார்.   

‘அப்ப அங்க கேட்டிருக்கலாம்தானே’

எனினும், ஒலி வாங்கி முடுக்கிவிடப்படாத நிலையில், மிகவும் உச்சத்தொனியில், “அப்படியாயின், அதனை அங்கே, அதாவது, உயர்நீதிமன்றத்தில் நேற்று (நேற்றுமுன்தினம்) கேட்டிருக்கலாம் தானே”, என, சபாநாயகர் கேட்டுவிட்டார்.   

‘முடியாது முடியாது’

உறுப்பினர்கள் ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய போதும், கோஷத்தின் சத்தம், சபையை அதிரச் செய்துகொண்டிருந்தது. இதனிடையே, தன்னுடைய ஒழுங்குப் பிரச்சினையை எழுப்பிய தினேஷ், “இன்றைய (நேற்று) அமர்வில், ஜனாதிபதியின் அறிவிப்பைத் தவிர வேறு எந்த நடவடிக்கையையும் நாடாளுமன்றத்தில் முன்னெடுக்க முடியாது” என்றார்.   

காலவதியான யோசனை

முதலாவது சபையமர்வை ஒத்திவைத்ததன் பின்னர் தான், அடுத்தகட்ட நடவடிக்கைக்காக சபையை முன்னகர்த்த வேண்டுமென்றும் வலியுறுத்திய தினேஷ், பிரேரணையை எழுத்துமூலமாகத் தெரிவிக்க வேண்டுமென்று கேட்டுக்கொண்டார். அவ்வாறு யோசனை சமர்ப்பிக்கப்படாமையால், சுமந்திரனின் இந்த யோசனை காலாவதியாகிவிட்டது.   

கைமாறிய ஆவணம்

அவ்வாறான சர்ச்சையொன்று ஏற்பட்டுகொண்டிருந்த போதுதான், சுமந்திரன், சக உறுப்பினர்களிடம் ஏதோவோர் ஆவணத்தைக் கொடுத்தார். அதனை, விஜித்த ஹேரத் எம்.பி பெற்றுக்கொண்டார். அதனைக் கண்டுகொண்ட தினேஷ், “அங்கே பாருங்கள், அங்கே பாருங்கள்... இப்போதுதான் ஆவணம் கைமாற்றப்படுகின்றது. இது செல்லுபடியாகாது” என்றார்.   

இரண்டும் ஒன்றல்ல; வேறுவேறு

இதன்போது எழுந்த எதிர்க்கட்சிகளின் முதற்கோலாசான் அநுரகுமார திஸாநாயக்க, “சுமந்திரன் எம்.பியினால் கொண்டுவரப்பட்டது, நிலையியற் கட்டளைகளைத் தளர்த்துவதற்கான யோசனையாகும். அதனை விஜித்த ஹேரத் எம்.பி, வழிமொழிந்தார். அவ்வளவுதான். எங்களுடைய யோசனை இன்னும் சமர்ப்பிக்கப்படவில்லை” என்றார்.   

அதன் பின்னர், நிலையியற் கட்டளையைத் தளர்த்துவதற்கான யோசனை, குரல் வாக்கெடுப்பின் மூலமாக, நிறைவேற்றப்பட்டதென, சபாநாயகர் அறிவித்தார்.   

‘இது என்ன உங்கள்...’

ஆரம்பம் முதலே சலசலப்பாக இருந்த சபை, அநுரவின் விளக்கத்தை அடுத்து இன்னும் சலசலப்பானது. சபையைக் கட்டுப்படுத்துவதிலும் பெரும் சிரமத்தை சபாநாயகர் எதிர்கொண்டிருந்தார். “ஓடர் ப்ளீஸ்... ஓடர் ப்ளீஸ்...” என்று பலமுறை அறிவுறுத்தினார். இதனிடையே, அமைச்சர் விமல் வீரவன்ச, ஒழுங்குப் பிரச்சினையொன்றை எழுப்பி, “எதற்கும் ஒரு சம்பிரதாயம் இருக்கின்றது. பிரேரணையைக் கொண்டுவருவதற்கு முன்னர், எழுத்துமூலமாகக் கொடுக்கவேண்டும். அது தொடர்பில், கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கலைந்துரையாட வேண்டும். அதன்பின்னர், ஒழுங்குப்பத்திரத்தில் உள்ளடக்க வேண்டும். அதற்கெல்லாம் ஒரு சம்பிரதாயம் இருக்கிறது. இது என்ன உங்கள்...” என்று இழுத்தபோது, ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது.   

‘சபை தீர்மானிக்கட்டும்’

இன்றைய நடவடிக்கைகளை என்னால் தீர்மானிக்கமுடியாது. சபை தீர்மானிக்கட்டும். அதற்கான வாக்கெடுப்பு நடத்தப்படும். வாக்கழைப்பு மணியை ஒலிக்கவிடுங்கள் என சபாநாயகர் கேட்டுக்கொண்டார்.    மணி ஒலிக்கவில்லை. எனினும், கோஷத்தின் சத்தம் சபையை அதிரச்செய்தது. வாக்கெடுப்புக்குச் செல்வதற்கு இடமளிக்கவில்லையெனில், குரல் பதிவு வாக்கெடுப்பின் பிரகாரம் தீர்மானிப்பேன் என்றார். அதற்காக மும்முறை எச்சரித்தார். எனினும், ஆளும் கட்சி உறுப்பினர்கள் கேட்கவில்லை. பெரும்பான்மை உறுப்பினர்களின் விருப்பத்தை தீர்மானத்தை எடுப்பேன் என்றார்.   

அநுர சமர்ப்பிப்பு

இதனிடையே எழுந்த எதிர்க்கட்சியின் முதற்கோலாசனும், ஜே.வி.பியின் தலைவருமான அநுரகுமார திஸாநாயக்க, புதிய பிரதமர் மீதும், அவர் தலைமையிலான அரசாங்கத்தின் மீது நம்பிக்கையில்லை என்றுகூறி, நம்பிக்கையில்லாப் பிரேரணை சமர்ப்பித்தார்.   

மஹிந்த வெளியேறினார்

அதுவரையிலும் தன்னுடைய ஆசனத்தில் அமர்ந்து அவை நடவடிக்கைகளை அவதானித்துக் கொண்டிருந்த பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ, கடுமையாகச் சீற்றமடைந்தார். அவருடைய முகத்தில் கடுமையான கோபம் தென்பட்டது. கடுமையாக முணுமுணுத்துக்கொண்டு, தன்னுடைய ஆசனத்திலிருந்து எழுந்து, முற்பகல் 10:26க்கு சபையை விட்டு வெளியேறிவிட்டார்.   

‘கள்ளப்பிரதமர் ஓடுகிறார்’

பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ சபையை விட்டு வெளியேறும் போது, “கள்ளப்பிரதமர் சபையை விட்டு ஓடுகின்றார். கள்ளப் பிரதமர் ஓடுகிறார். பெரும்பான்மை இல்லை, பெரும்பான்மை இல்லை” என ஆளும் தரப்பினர் கோஷமெழுப்பினர்.   

ஓடோடி வந்தனர்

பிரதமர் மஹிந்த வெளியேறியதன் பின்னர் கடுமையாகக் கோபடைந்த ஆளும்தரப்பினர், சபைக்கு நடுவே, சபாபீடத்தை நோக்கிப் படையெடுத்தனர். அவர்களுக்கு முன்னதாக படைக்கல சேவிதர்கள், செங்கோலுக்கு மூன்றடுக்குப் பாதுகாப்புப் போட்டிருந்தனர்.   

குழந்தையைப் போல ஏந்தியிருந்தார்

சபாபீடத்தை நோக்கி ஆளும் தரப்பினர் ஓடோடிவந்தபோது, எதிரணியில் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்கள் சிலரும் சபைக்கு நடுவே ஓடோடி வருவதற்கு முயன்றனர். எனினும், மூத்த உறுப்பினர்கள் சிலர், அவர்களைத் தடுத்துநிறுத்தி, ஆசனங்களுக்கு அனுப்பிவைத்தனர்.   

ஆளும் தரப்பினருக்கு முன்னதாக சபைபீடத்தை நோக்கி ஓடிவந்து செங்கோலுக்குப் பாதுகாப்பளித்த படைக்கல சேவிதர்களில் ஒருவர், செங்கோலை எடுத்து, குழந்தையொன்றை தூக்கிவைத்திருப்பது போல, நெஞ்சோடு அணைத்து வைத்துக்கொண்டிருந்தார்.   

செங்கோலைத் தேடிய ஆளுந்தரப்பினர்

சபாபீடத்துக்கு முன்பாக குழுமியிருந்து கோஷமெழுப்பிக் கொண்டிருந்த ஆளும் தரப்பினர், செங்கோலைக் காணவில்லை. இது செல்லுபடியாகாது, செல்லுபடியாகாது. செங்கோல் எங்கே? செங்கோல் எங்கே என்று கோஷமெழுப்பினர்.   

‘என்னுடையதை நான் பாதுகாப்பேன்’

இதனிடையே கருத்துரைத்த சபாநாயகர் கரு ஜயசூரிய, அரசமைப்பின் பிரகாரம், செங்கோலை பாதுகாக்கும் உரிமை எனக்குண்டு. அதனை நான் பாதுகாத்துக்கொள்கின்றேன். செங்கோல் என்னிடம்தான் இருக்கிறது. வாக்கெடுப்பை நடத்துவதா, இல்லையா என்பது தொடர்பில் தீர்மானியுங்கள் என்றார்.   
கொக்கா காட்டிய உறுப்பினர்

ஊர்வழியில் கொக்கா காட்டுவது என்பர், அதாவது, தேவையில்லாத அல்லது மிகவும் மோசமான அர்த்தங்களைப் பிரயோகிக்ககூடிய வகையில் கைகள் உள்ளிட்ட அவயவங்களில், குறியீடு காண்பிப்பர். ஆளும் தரப்பைச் சேர்ந்த உறுப்பினர் பலர், சபாநாயகரை நோக்கி, தலைகளில் விரல்களை வைத்து கொம்புகள் உள்ளதுபோல, அவ்வாறான மோசமான குறியீடுகளைச் செய்துகாட்டினர்.   

மக்கள் தீர்மானிக்கட்டும்

சபை நடவடிக்கை தொடர்பில் என்னால் இன்று தீர்மானிக்க முடியாது என்று இதன்போது தெரிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, மக்கள் தீர்மானிக்கட்டும் நீங்கள் ஏதாவது என்னைப்பற்றிக் கூறுங்கள் என்றார்.   
சபாநாயகரின் அறிவித்தலை ஆளும் தர்ப்பினர் கேட்கவில்லை. கடுமையான கூச்சல் குழப்பங்களை மேற்கொண்டனர். இதற்கிடையில், குரல் சத்தத்தின் வாக்குப்பதிவின் ஊடாக, நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார்.   

சபையை ஒத்திவைத்த எதிரணி

புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவைக்கு எதிராகக் கொண்டுவரப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணை நிறைவேற்றப்பட்டதாக அறிவித்த சபாநாயகர் கரு ஜயசூரிய, சபையை, நாளைக்கா (இன்றா) அல்லது 21 ஆம் திகதியா ஒத்திவைக்க போகின்றீர்கள் எனக் கேட்டார்.   

இதன்போது எழுந்த, ஐக்கிய தேசியக் கட்சியின் எம்.பியான லக்ஷ்மன் கிரியெல்ல, சபையை நாளை (இன்று) 10 மணிக்கு ஒத்திவைத்தார்.   நாடாளுமன்ற சபையமர்வை, சபைமுதல்வர் அல்லது ஆளும் கட்சியின் பிரதம கொறடா இன்றேல் ஆளும் தரப்பைச் சேர்ந்தவர்களில் ஒருவரே ஒத்திவைக்கவேண்டும். எனினும், நேற்யைதினம் எதிரணியே ஒத்திவைத்தது.   

தூக்கிக் காண்பித்து வெற்றி கோஷம்

அதன்பின்னர், ஐக்கிய தேசிய முன்னணியின் உறுப்பினர்களில் பலர் சபைக்கு நடுவே ஓடோடிவந்து, ஜனநாயக சால்வையைத் தூக்கிப்பிடித்து வெற்றிக்கோஷம் எழுப்பினர். பெரும்பாலான நாடாளுமன்ற உறுப்பினர்கள், செல்பி எடுத்தனர். இன்னும் சிலர், ஆளும் தரப்பு வெறிச்சோடி கிடப்பதைக் காண்பிக்கும் வகையில், செல்பி எடுத்துக்கொண்டனர்.   

கேட்டு வாங்கிய ஹூ

ஐக்கிய தேசிய முன்னணியினர் வெற்றிக்கோஷம் எழுப்பிக்கொண்டிருந்த நிலையில் அமைச்சர்கள் சிலர், ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் அளவளாவினர். அப்போது தன்னுடைய மேசையில் ஏதோவொன்றை விட்டுச்சென்றிருந்த அமைச்சர் எஸ்.பீ.திஸாநாயக்க, அதனை எடுப்பதற்காக சபைக்குள் வந்துவிட்டார். அவரைக் கண்ட எதிரணியினர், அவர் சபையை விட்டு வெளியேறும் வரையிலும் ஹு சத்தமிட்டனர்.   
இருவரும் ஒன்றாக வெளியேறினர்

இதனிடையே சபைக்கு வந்த ரணில் விக்கிரமசிங்க மற்றும் சஜித் பிரேமதாஸ ஆகிய இருவரும், முக்கிய கூட்டமொன்றுக்காக சகல உறுப்பினர்களையும் அழைத்துக்கொண்டு வெளியேறிவிட்டனர்.   
பின்கதவால் சென்ற செங்கோல்

சபை அமர்வு ஆரம்பிக்கப்படும் போது, முன்கதவால் கொண்டுவரப்படும் செங்கோல், சபை நிறைவடைந்ததன் பின்னரும், அவ்வழியாகவே கொண்டு செல்லப்படும். எனினும், நேற்றையதினம், பின்கதவாலேயே செங்கோல் கொண்டுசெல்லப்பட்டது.   

பின்கதவால் இணைந்த இருவர்

புதிய அரசாங்கத்துடன் இணைந்துகொண்ட வடிவேல் சுரேஸ் மற்றும் வசந்த சேனாநாயக்க ஆகிய இருவரும், ஐக்கிய தேசியக் கட்சியுடன் பின்கதவால் நேற்று (14) இணைந்துகொண்டனர். புதிய அரசாங்கத்தின் அமைச்சராக பதவியேற்ற துமிந்த திஸாநாயக்க சமுகமளிக்கவில்லை. இன்னும் சில முக்கியஸ்தர்களும் நேற்றையதினம் பிரச்சன்னமாய் இருக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டதன் பின்னர் , ஒவ்வொரு தரப்பினரும் நாடாளுமன்ற குழு அறைகளில் தனித்தனியாக ஊடகவியலாளர் சந்திப்புகளை நடத்தினர்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .