2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

இந்தியாவுக்கெதிரான 3ஆவது T20I இன்று: தொடரைச் சமப்படுத்துமா இலங்கை?

Editorial   / 2020 ஜனவரி 10 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவது இருபதுக்கு – 20 சர்வதேசப் போட்டியானது, புனேயில் இன்றிரவு ஏழு மணிக்கு நடைபெறவுள்ளது.

மூன்று போட்டிகள் கொண்ட இரண்டு அணிகளுக்குமிடையிலான இத்தொடரின் முதலாவது போட்டியில் மழை காரணமாக பந்தேதும் வீசப்படாததுடன், இரண்டாவது போட்டியில் இந்தியா வென்று முன்னிலை பெற்றுள்ள நிலையில், தொடரை சமப்படுத்துவதற்கு இன்றைய போட்டியில் வென்றாக வேண்டிய கட்டாயத்தில் இலங்கை உள்ளது.

இந்நிலையில், இரண்டாவது போட்டியில் காயமடைந்து பந்துவீசியிருக்காத இலங்கையின் வேகப்பந்துவீச்சாளர் இசுரு உதான, இன்றைய போட்டியிலும் விளையாட முடியாமல் போயுள்ளமை இலங்கைக்கு இழப்பாகக் காணப்படுகிறது.

எவ்வாறெனினும், இசுரு உதானவின் ஓவர்களை கட்டுக்கோப்பாக தசுன் ஷானக வீசியிருந்தமை இலங்கைக்கு சாதகமானதாகக் காணப்படுகின்ற நிலையில், இசுரு உதானவுக்கு பதிலாக முன்னாள் அணித்தலைவர் அஞ்சலோ மத்தியூஸைக் கொண்டு வந்து துடுப்பாட்டத்தைப் பலப்படுத்தக்கூடிய வாய்ப்பு காணப்படுகிறது.

ஏனெனில், இரண்டாவது போட்டியில் இலங்கையணியின் பல வீரர்கள் ஆரம்பங்களைப் பெற்றிருந்தபோதும் அடித்தாட முற்பட்டு விக்கெட்டுகளைப் பறிகொடுத்திருந்த நிலையில், ஒரு வீரராவது இனிங்ஸை நகர்த்திச் செல்லக் கூடியவராக தேவைப்படுகின்றார்.

அந்தவகையில், குசல் பெரேரா, அவிஷ்க பெர்ணான்டோ, தனுஷ்க குணதிலக, ஒஷத பெர்ணான்டோ, பானுக ராஜபக்‌ஷ ஆகியோரில் ஓரிருவராது நிலைத்து நின்றாலே இந்தியாவுக்கு சவாலளிக்கக்கூடிய ஓட்ட எண்ணிக்கைகளை வழங்க முடியும்.

மறுபக்கமாக, இந்திய அணியைப் பொறுத்தவரையில், இவ்வாண்டு நடைபெறவுள்ள சர்வதேச கிரிக்கெட் சபையின் இருபதுக்கு – 20 உலகக் கிண்ணத் தொடரில் ரோஹித் ஷர்மாவுடன் ஆரம்பத் துடுப்பாட்டவீரராக யாரைக் களமிறக்குவது என்று ஆராய்கையில், அந்த விடைக்குத் தானே பதில் போல லோகேஷ் ராகுலின் பெறுபேறுகள் இருக்கின்ற நிலையில், சர்வதேச கிரிக்கெட் சபையின் தொடர்களில் சிறந்த வீரராக இருக்கும் ஷிகர் தவான் தனதிடத்தை உறுதிப்படுத்துவதற்கு மேம்பட்ட பெறுபேறுகளை வழங்க வேண்டியுள்ளது.

இதேவேளை, புவ்னேஷ்வர் குமார், தீபக் சஹர் ஆகியோர் காயமடைந்துள்ள நிலையில் அணியில் தொடர்ந்து இடம்பெறுகின்ற ஷர்துல் தாக்கூர், நவ்தீப் சைனி ஆகியோர் தமது திறமைகளை இரண்டாவது போட்டியில் வெளிப்படுத்தியிருந்த நிலையில், தமதிடங்களை உறுதிப்படுத்துவதற்கு அவர்கள் தொடர்ந்தும் இவ்வாறான பெறுபேறுகளை வெளிப்படுத்த வேண்டியவர்களாக உள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .