2021 மே 14, வெள்ளிக்கிழமை

விலகல் சுற்றில் பார்சிலோனா, லெய்ப்ஸிக்

Editorial   / 2019 நவம்பர் 28 , பி.ப. 07:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐரோப்பிய கால்பந்தாட்டச் சங்கங்களின் ஒன்றியத்தின் சம்பியன்ஸ் லீக் தொடரின் இறுதி 16 அணிகளுக்கிடையிலான விலகல் முறையிலான சுற்றுக்கு, ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா, ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான ஆர்.பி லெய்ஸிக் ஆகியன தகுதிபெற்றுள்ளன.

தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற ஜேர்மனிய புண்டெலிஸ்கா கழகமான பொரூசியா டொட்டமுண்டுடனான குழு எஃப் போட்டியொன்றில் 3-1 என்ற கோல் கணக்கில் வென்று குழுவின் வெற்றியாளர்க்ளாக விலகல் முறையிலான சுற்றுக்கு பார்சிலோனா தகுதிபெற்றுள்ளது.

பார்சிலோனா சார்பாக, லூயிஸ் சுவாரஸ், லியனல் மெஸ்ஸி, அன்டோனி கிறீஸ்மன் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். டொட்டமுண்ட் சார்பாகப் பெறப்பட்ட கோலை ஜடோன் சஞ்சோ பெற்றார்.

இதேவேளை, தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற போர்த்துக்கல் கழகமான பெய்ஃபிக்காவுடனான குழு ஜி போட்டியை 2-2 என்ற கோல் கணக்கில் சமப்படுத்தியதைத் தொடர்ந்து, முதன்முறையாக விலகல் முறையிலான சுற்றுக்கு லெய்ஸிக் தகுதிபெற்றிருந்தது.

லெய்ப்ஸிக் சார்பாகப் பெறப்பட்ட இரண்டு கோல்களையும் எமில் ஃபொர்ஸ்பேர்க் பெற்றிருந்ததோடு, பெய்ஃபிக்கா சார்பாக, பிஸி, கார்லோஸ் வின்சியஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இந்நிலையில், தமது மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற இத்தாலிய சீரி ஏ கழகமான நாப்போலியுடனான குழு ஈ போட்டியொன்றை 1-1 என்ற கோல் கணக்கில் சமநிலையில் நடப்புச் சம்பியன்களான லிவர்பூல் முடித்துக் கொண்டிருந்தது.

இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான லிவர்பூல் சார்பாகப் பெறப்பட்ட கோலை டெஜா லொவ்ரேன் பெற்றிருந்த நிலையில், நாப்போலி சார்பாகப் பெறப்பட்ட கோலை ட்ரைஸ் மேர்ட்டன்ஸ் பெற்றிருந்தார்.

இதேவேளை, ஸ்பானிய லா லிகா கழகமான வலென்சியாவின் மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற அவ்வணியுடனான குழு எச் போட்டியொன்றை 2-2 என்ற கோல் கணக்கில் இங்கிலாந்து பிறீமியர் லீக் கழகமான செல்சி சமப்படுத்தியிருந்தது.

செல்சி சார்பாக, மட்டியோ கொவாசிச், கிறிஸ்டியன் புலிசிச் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர். வலென்சியா சார்பாக, கார்லோஸ் சொலர், டேனியல் வாஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.

இதேவேளை, செக் குடியரசுக் கழகமான ஸ்லாவியா பிராக்கின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு எஃப் போட்டியொன்றில் 3-1 என்ற கோல் கணக்கில் இத்தாலிய சீரி ஏ கழகமான இன்டர் மிலன் வென்றது.

இன்டர் மிலன் சார்பாக, லொட்டரோ மார்ட்டின்ஸ் இரண்டு கோல்களையும், றொமெலு லுக்காக்கு ஒரு கோலையும் பெற்றனர். ஸ்லாவியா பிராக் சார்பாகப் பெறப்பட்ட கோலை தோமஸ் செளசெக் பெற்றிருந்தார்.

இந்நிலையில், தமது மைதானத்தில் நேற்றிரவு நடைபெற்ற பிரெஞ்சு லீக் 1 கழகமான லயோனுடனான குழு ஜி போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் ரஷ்யக் கழகமான ஸெனிட் சென். பீற்றர்ஸ்பேர்க் வென்றிருந்தது. ஸெனிட் சென். பீற்றர்ஸ்பேர்க் சார்பாக, ஆர்டெம் ஸூபா, மகொமெட் ஒஸ்டொயெவ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றிருந்தனர்.

இதேவேளை, பிரெஞ்சு லீக் 1 கழகமான லில்லியின் மைதானத்தில் இன்று அதிகாலை நடைபெற்ற அவ்வணியுடனான குழு எச் போட்டியொன்றில் 2-0 என்ற கோல் கணக்கில் நெதர்லாந்துக் கழகமான அஜக்ஸ் வென்றது. அஜக்ஸ் சார்பாக, ஹக்கீம் ஸியெச், குயின்ஸி ப்றொமெஸ் ஆகியோர் தலா ஒவ்வொரு கோலைப் பெற்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .