2024 மே 05, ஞாயிற்றுக்கிழமை

அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம்: ரஷ்யா

Editorial   / 2022 மார்ச் 01 , மு.ப. 10:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

கீவ்: பெலாரஸ் எல்லைப் பகுதியில் ரஷ்ய, உக்ரேன் பிரதிநிதிகள் நேற்று(28)  பேச்சுவார்த்தை நடத்தினர்.

போரை நிறுத்த வேண்டும், ரஷ்ய படைகள் வெளியேற வேண்டும் என்று உக்ரேன்  தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ரஷ்ய தரப்பில் பல்வேறு நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

சுமார் 3 மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ரஷ்யாவின் தொடர் தாக்குதலால் உக்ரேனில் இதுவரை 14 குழந்தைகள் உள்பட 352 பேர் உயிழந்தனர் என்று அந்நாட்டு சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. உக்ரேனில் இருந்து இதுவரை 5.2 லட்சம் மக்கள் வெளியேறிவிட்டனர் என  ஐ.நா கூறுகிறது.

நேட்டோ நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள ரஷ்ய அணு ஆயுதப் படைகள் தயார் நிலையில் உள்ளன என்று அந்த நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் சோய்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

கடந்த 24 ஆம் திகதி உக்ரேன் மீது ரஷ்யா போர் தொடுத்தது. உக்ரேன் தலைநகர் கீவ் உட்பட    பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளுக்கும் இடையே 5 ஆவது நாளாக நேற்றும் கடுமையான சண்டை நடைபெற்றது.

போர் சூழலுக்கு நடுவே பெலாரஸ் நாட்டின் எல்லைப் பகுதியான கோமெல் நகரில் ரஷ்யா, உக்ரேன் பிரதிநிதிகள் நேற்று (28)  பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை 3 மணி நேரம் நீடித்தது.

அப்போது உக்ரேன்  தரப்பில் பல்வேறு விஷயங்கள் வலியுறுத்தப்பட்டன. போரை உடனடியாக நிறுத்த வேண்டும். தங்கள் நாட்டில் இருந்து ரஷ்யப் படைகள் முழுமையாக வெளியேற வேண்டும். கடந்த 2014-ம் ஆண்டில் ரஷ்யா கைப்பற்றிய கிரிமியா பகுதியை திரும்ப ஒப்படைக்க வேண்டும் என்று உக்ரேன் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

2 நகரங்களை கைப்பற்றிய ரஷ்யா

உக்ரேனில் நவீனகால நாஜி ஆட்சியை அகற்ற வேண்டும். எக்காரணம் கொண்டும் நேட்டோவில் இணையக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை ரஷ்யா விதித்ததாகக் கூறப்படுகிறது. இருதரப்பும் தங்கள் கொள்கைகளில் பிடிவாதமாக இருந்ததால் பேச்சுவார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை.

நேற்றைய போரில் பெர்ட்யான்ஸ்க், எனிஹோடர் ஆகிய 2 முக்கிய நகரங்களை ரஷ்ய படைகள் கைப்பற்றின. தலைநகர் கீவில் இருந்து வெளியேற விரும்புகிறவர்கள் மீது எவ்வித தாக்குதலும் நடத்தப்படாது.

 கீவ்-வாசில்கிவ் நெடுஞ்சாலை வழியாக அவர்கள் பாதுகாப்பாக வெளியேறலாம் என்று ரஷ்ய இராணுவம் நேற்று (28) அறிவித்தது. இதன்மூலம் தலைநகர் கீவ் மீது ரஷ்யா மிகப்பெரிய தாக்குதலை நடத்தக்கூடும் என்று தெரிகிறது.

நேட்டோவுக்கு ரஷ்யா எச்சரிக்கை

உக்ரேன் மீதான தாக்குதலை ரஷ்யா  நிறுத்தாவிட்டால் நேட்டோ நாடுகளும் போரில் பங்கேற்க நேரிடும் என்று பிரிட்டன் உட்பட சில ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் நேற்று முன்தினம் எச்சரிக்கை விடுத்தனர். இதற்கு பதிலடியாக நேட்டோ நாடுகளின் அச்சுறுத்தலை எதிர்கொள்ள அணு ஆயுத படைகள் தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புதின் உத்தரவிட்டார்.

500 அணு ஆயுதம்

இதுகுறித்து ரஷ்ய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் சோய்கு நேற்று (28) கூறும்போது, "ஜனாதிபதி புதினின் உத்தரவுபடி நேட்டோவின் அச்சுறுத்தலை முறியடிக்க தரை, வான், நீர்மூழ்கி அணு ஆயுத படைகள் தயார் நிலையில் உள்ளன. எந்த சூழலையும் எதிர்கொள்ளும் திறன் ரஷ்யாவுக்கு உள்ளது" என்று எச்சரிக்கை விடுத்தார்.

ஜனாதிபதி புட்டினின் செய்தித்தொடர்பாளராக முன்னிறுத்தப்படும் ரஷ்யாவின் மூத்த செய்தியாளர் திமித்ரி கிசெல்யாவ் நேற்று கூறும்போது, "ரஷ்ய நீர்மூழ்கிகளில் சுமார் 500 அணு ஆயுதங்கள் பொருத்தப்பட்டுள்ளன. இவற்றின்மூலம் அமெரிக்கா உட்பட அனைத்து நேட்டோ நாடுகளையும் அழிக்க முடியும். ரஷ்யாவுக்கு எதிராக நேட்டோ நாடுகள் போரில் குதித்தால் அணு ஆயுதங்களை பயன்படுத்த தயங்கமாட்டோம்" என்று தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .