2025 மே 15, வியாழக்கிழமை

இளையராஜாவுக்கு விமான நிலையத்தில் அவமரியாதை

George   / 2016 ஜூன் 08 , மு.ப. 06:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு பெங்களுர் விமான நிலையத்தில் அவமரியாதை ஏற்பட்ட செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தனது மகன் கார்த்திக்ராஜா உள்ளிட்ட குடும்பத்தினருடன் கர்நாடக மாநிலம் மங்களூரில் உள்ள கோவில்களுக்குச் சென்று சாமி தரிசனம் செய்த இளையராஜா, அங்கிருந்து சென்னை திரும்புவதற்காக பெங்களூர் விமான நிலையத்துக்கு நேற்று வந்தார் 

அப்போது, விமான நிலைய அதிகாரிகள், இளையராஜாவின் கை பையை சோதனையிட வேண்டும் என்று கூறினர். அதற்கு பையில் கோவில் பிரசாதம்தான் உள்ளது என்று இளையராஜா கூறியுள்ளார். 

அதை காதில் போட்டுக்கொள்ளாத அதிகாரிகள் வலுகட்டாயமாக இளையராஜாவின் பையை சோதனையிட்டுள்ளனர். அதில் இருந்த தேங்காய், பழம், விபூதி, குங்குமம் போன்ற பொருட்களை விமானத்தில் எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்று அதனை பறிமுதல் செய்துள்ளனர். 

தன் தந்தை அவமதிக்கப்படுவதை பொறுக்க முடியாத மகன் கார்த்திக்ராஜா, அதனை தனது அவைபேசியில் படம் எடுத்துள்ளார்.

இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த அதிகாரிகள் எடுத்த படங்களை அழிக்க வேண்டும் என்று கார்திக்ராஜாவை வற்புறுத்தினர். அவர் மறுக்கவே இளையராஜாவை சுமார் ஒரு மணி நேரம் காக்க வைத்தனர். 

இதை கண்ட அங்கிருந்த விமான பயணிகள் 'உலக புகழ்பெற்ற ஒரு இசை மேதைக்கு நீங்கள் தரும் மரியதை இதுதானா?' என்று கேட்டு சத்தம் போட்டனர். உடனடியாக அந்த இடத்துக்கு வந்த உயர் அதிகாரிகள் நடந்த சம்பவங்களுக்கு மன்னிப்பு கேட்டு இளையராஜாவை அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தமிழகத்தில் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

'தேங்காயை கொண்டு செல்ல விடாமல் தடுத்த விமான நிலைய அதிகாரிகள், இறுதியில் வருத்தம் தெரிவித்தனர்' என கார்த்திக் ராஜா தெரிவித்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக இளையராஜா, 'இது ஒரு சாதாரணமான விடயம் தான். பாதுகாப்புக்காக சோதனை செய்வது அனைத்து இடங்களிலும் நடக்கும் சாதாரண விடயம் தான். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. 

இதை விட சித்திரவதை நடந்த விடயங்களை எல்லாம் நான் கடந்து போயிருக்கிறேன். அதெல்லாம் ஒன்றுமே இல்லை. அவர்கள் அவர்களுடைய பணியை செய்யவில்லை என்றால் இந்தியா, இந்தியாவாக இருக்காது.

தேங்காய் பிரசாதம் கொண்டு சென்ற பையைத் திறக்கச் சொன்னார்கள். அவ்வளவு தான். திறந்து காட்டினேன். இதனை என்னுடைய ரசிகர்கள் பார்த்துவிட்டு, என்னைத் தொடர்பு கொண்டு அனுதாபத்தையும், கோபத்தையும் தெரிவிக்கிறார்கள். தேவையில்லாத விடயங்களில் தங்களது நேரத்தை ஏன் இந்திய மக்கள் வீணாக்குகிறார்கள் என்பதில் எனக்கு பெரிய வருத்தம்.

ஏனென்றால் இந்த சோதனையை நான் பெரிய விடயமாக எடுத்துக் கொள்ளவில்லை. வௌ;வேறு மாநிலங்களில் இருந்து வந்து இங்கு பணியாற்றுபவர்கள் சாப்பாட்டைப் பார்க்க முடியாது, பணிக்கு நேரத்துக்கு வர வேண்டும். அந்த மாதிரியான எரிச்சலில் கூட இருப்பார்கள். அவர்களுக்கு யார், யாரென்று தெரியாது. இந்தமாதிரியான செய்திகளுக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது ஒரு சாதாரண விடயம். நான் உங்களைப் போல் சாதாரணமானவன். எந்த இடத்தில் எப்படி நடத்துக் கொள்ள வேண்டுமோ, அப்படி நடக்கட்டுமே. அவர் என்னை சோதனை செய்தவுடன் பெரியவனாவதும், நான் சிறியவனாவதும் கிடையவே கிடையாது. 

நான் எப்பவும் ராஜா தான். அந்த இடத்தில் அவனுடைய வேலையை அவன் செய்கிறான். அதனை நான் அனுமதிக்கிறேன், ஒத்துழைக்கிறேன். அவனும் என்னோடு சண்டையிடவில்லை, நான் சண்டையிடவில்லை' என்று தெரிவித்திருக்கிறார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .