2024 ஜூலை 27, சனிக்கிழமை

கங்கனாவிக் கன்னத்தில் “பளார்’’ பெண் அதிகாரி பணி இடைநீக்கம்

Freelancer   / 2024 ஜூன் 07 , மு.ப. 10:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

சண்டிகர் விமான நிலையத்தில் மண்டி மக்களவை உறுப்பினர் கங்கனா ரனாவத்தின் கன்னத்தில் அறைந்த குற்றச்சாட்டின்பேரில் மத்திய தொழில்துறை பாதுகாப்புப் படையின் பெண் காவலர் ஒருவர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

ஏ.என்.ஐ செய்தி முகமையின்படி, இந்த வழக்கை மேலும் விசாரிக்க சி.ஐ.எஸ்.எஃப் அதிகாரிகள் குழு அமைக்கப்பட்டுள்ளது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் கூட்டத்தில் பங்கேற்பதற்காக கங்கனா ரனாவத் டெல்லி வரவிருந்தபோது இந்தச் சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து வீடியோ வெளியிட்டுள்ள கங்கனா ரனாவத், தான் பாதுகாப்பாக இருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

“பாதுகாப்பு சோதனைக்குப் பிறகு நான் இரண்டாவது கேபின் வழியாகச் சென்றபோது சிஐஎஸ்எஃப் காவலராக இருந்த ஒரு பெண் என் முகத்தில் அறைந்தார்,” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஏன் இப்படிச் செய்தீர்கள் எனக் கேட்டதற்கு, தான் விவசாயிகள் இயக்கத்தை ஆதரிப்பதாக அந்தப் பெண் பதில் கூறியதாக கங்கனா தெரிவித்துள்ளார்.

மேலும், “நான் பாதுகாப்பாக இருக்கிறேன். ஆனால் பஞ்சாபில் அதிகரித்து வரும் தீவிரவாதத்தை எப்படிச் சமாளிப்பது என்று கவலையாகவும் உள்ளேன்” என்றும் கங்கனா வீடியோவில் கூறியுள்ளார்.

கங்கனா ரனாவத்தை அறைந்ததாகக் கூறப்படும் காவலரின் பெயர் குல்விந்தர் கவுர். 

கடந்த 2020ஆம் ஆண்டில், மூன்று புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் விவசாயிகள் நடத்திய ஓராண்டு போட்டத்தின்போது கங்கனா கூறிய கருத்துகள் சர்ச்சையாகின.

செப்டம்பர் 2020இல் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளைப் பற்றி கங்கனா பதிவிட்ட ஒரு ட்வீட்டில், “கலவரத்திற்கு வழிவகுத்த சிஏஏ பற்றித் தவறான தகவல்களையும் வதந்திகளையும் பரப்பிய அதே நபர்கள், இப்போது வேளாண் சட்டங்கள் பற்றியும் தவறான தகவல்களைப் பரப்புகிறார்,” என்று குறிப்பிட்டார்.

மேலும், “அவர்கள் நாட்டில் பயங்கரவாதத்தை உருவாக்குகிறார்கள். அவர்கள் ‘பயங்கரவாதிகள்” என்றும் கூறினார்.

இதைத் தொடர்ந்து கங்கனா மீண்டும் ட்வீட் செய்து, விவசாயிகளை தான் ‘பயங்கரவாதிகள்’ எனக் குறிப்பிட்டதாக யாராவது நிரூபித்தால் தனது ட்விட்டர் கணக்கையே நீக்கிவிடுவதாக விளக்கம் அளித்தார்.

வேளாண் மசோதா குறித்து வதந்தி பரப்புபவர்களைத்தான் ‘பயங்கரவாதிகள்’ என்று தான் அழைத்ததாகவும், விவசாயிகளை அல்ல என்றும் கங்கனா தனது பதிவில் தெரிவித்திருந்தார். R


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .