2026 ஜனவரி 14, புதன்கிழமை

“தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்”

S.Renuka   / 2026 ஜனவரி 14 , பி.ப. 12:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

"விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்படத்தை இந்திய அரசு தடுக்கும் முயற்சி தமிழ் கலாசாரத்தின் மீதான தாக்குதல்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை எக்ஸ் பதிவில், பிரதமர் நரேந்திர மோடி தமிழ் மக்களின் குரலை அடக்குவதில் ஒருபோதும் வெற்றி பெற மாட்டார் என்றும் கூறியுள்ளார்.

ஜனநாயகன் திரைப்படத்துக்கு ஆதரவாக தமிழகத்தைச் சேர்ந்த காங்கிரஸ் தலைவர்கள் சிலர் ஆதரவு தெரிவித்துவந்த நிலையில், ராகுல் காந்தியும் இப்போது விஜய்க்கு ஆதரவாக கருத்து தெரிவித்துள்ளார்.

வழக்கு நாளை விசாரணை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனநாயகன் திரைப்படம் கடந்த 9ஆம் திகதி வெளியாக இருந்தது. ஆனால், படத்துக்கு தணிக்கைச் சான்று வழங்க மறுத்த மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம், படத்தில் மதரீதியான ஆட்சேபணைக்குரிய காட்சிகள் இடம்பெற்றுள்ளன. பாதுகாப்புப் படை சின்னங்களும் இடம்பெற்றுள்ளன என்று கூறி மறு ஆய்வுக் குழுவுக்கு பரிந்துரைத்தது.

அதை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதி பி.டி.ஆஷா, படத்துக்கு உடனடியாக தணிக்கைச் சான்று வழங்குமாறு மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியத்துக்கு கடந்த 9 ஆம் திகதி உத்தரவிட்டார்.

இதை எதிர்த்து மத்திய திரைப்பட சான்றிதழ் வாரியம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா, நீதிபதி ஜி.அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தனி நீதிபதியின் உத்தரவுக்கு அன்றைய தினமே இடைக்காலத் தடை விதித்து, விசாரணையை ஜன. 21ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

இந்நிலையில், உயர்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமர்வின் உத்தரவை எதிர்த்து படத் தயாரிப்பு நிறுவனம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.

இந்த மனுவை உச்சநீதிமன்றம் நாளை வியாழக்கிழமை (15) விசாரிக்கவுள்ளது. நீதிபதிகள் தீபாங்கர் தத்தா மற்றும் அகஸ்டின் ஜார்ஜ் மாசி அடங்கிய அமர்வில் வழக்கு பட்டியலிடப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .