2025 மே 16, வெள்ளிக்கிழமை

2015ஆம் ஆண்டின் நம்பர் ஒன் ஹீரோ யார்?

George   / 2015 டிசெம்பர் 31 , மு.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

தமிழ் சினிமா என்பது நாயகர்கர்களுக்கு முக்கியத்துவம் கொடுப்பதாகவே உள்ளதாக  பலரும் கருத்து சொல்லி வருகிறார்கள். முன்பெல்லாம் நாயகர்கள் இயக்குநர்களைத் தேடினார்கள், ஆனால் தற்போது இயக்குனர்களும், தயாரிப்பாளர்களும்,  நாயகர்களைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னும் எளிதாகச் சொன்னால் எந்த நாயகரின் கோல்ஷீட் கையில் இருக்கிறதோ அவர்களுக்காகவே கதையை எழுதி திரைப்படத்தை இயக்கும் நிலைமையே இருப்பதாக சினிமா விமர்சகர்கள் கருதுகின்றனர்.

ஒரு திரைப்படத்தின் வெற்றிக்கு கதை எவ்வளவு முக்கியமோ, இயக்குநர் எவ்வளவு முக்கியமோ அதே அளவு நாயகனும் முக்கியம்தான், ஆனால், நாயகன் மட்டுமே முக்கியமல்ல என்பதை அண்மையில் வெளிவந்த பல திரைப்படங்கள் உணர்த்தியுள்ளன. 

சில முன்னணி நாயகர்கள் நடித்திருந்தாலும் சிலத் திரைப்படங்கள் தோல்வியைத் தழுவியதை இந்த 2015ஆம் ஆண்டிலும் பார்த்தோம். அதே சமயம் கதையே இல்லையென்றாலும் இரசிகர்கள் எதிர்பார்க்கும் சில விடயங்கள் அந்தத் திரைப்படங்களில் இடம்பெற்று அந்தத் திரைப்படங்கள் வெற்றி பெற்றதையும் பார்த்தோம். அப்படிப்பட்ட படங்களில் புதுமுக நடிகர்கள் நடித்து வெற்றி பெற்றதும் ஆச்சரியமான விடயம்தான். 

இவ்வாறான ஆச்சரியங்களை உள்ளடக்கி எதிர்பார்த்தும், எதிர்பாராமலும் இந்த ஆண்டில் பேசப்பட்ட சில நாயகர்களைப் பற்றியும், அவர்களில் யார் முதல் இடத்துக்கு தகுதியானவர் என்று பார்ப்போம். அதற்கு முன்னதாக இந்த ஆண்டில் முக்கிய நடிகர்கள் நடித்து வெளியான திரைப்படங்கள் பற்றிப் பார்க்கலாம்.

புறம்போக்கு என்கிற பொதுவுடமை, வாசுவும் சரவணனும் ஒண்ணா படிச்சவங்க, யட்சன், இஞ்சி இடுப்பழகி, இன்று நேற்று நாளை ஆகிய திரைப்படங்களில் நடிகர் ஆர்யா நடித்திருந்தார். நடிகர் ஜெயம் ரவியின் நடிப்பில் ரோமியோ ஜுலியட், சகலகலா வல்லவன், தனி ஒருவன், பூலோகம்ஆகிய திரைப்படங்கள் வெளியாகின.

உலகநாயகன் கமல்ஹாசன்  நடிப்பில் உத்தம வில்லன், பாபநாசம், தூங்காவனம் ஆகிய திரைப்படங்களும் தனுஷ்  நடிப்பில் அனேகன், மாரி, தங்கமகன், பாபி சிம்ஹாவின் சென்னை உங்களை அன்புடன் வரவேற்கிறது, மசாலா படம், உறுமீன் ஆகிய திரைப்படங்களும் வெளியாகின.

அஜித்  நடிப்பில் என்னை அறிந்தால், வேதாளம் நடிகர் சூர்யாவின்  மாசு என்கிற மாசிலாமணி, பசங்க 2 நடிகர் விஷால் நடிப்பில்  ஆம்பள, பாயும் புலி நடிகர் ஜி.வி.பிரகாஷ்குமாரின்  டார்லிங், த்ரிஷா இல்லனா நயன்தாரா நடிகர் விஜய் சேதுபதியின் ஆரஞ்சு மிட்டாய், புறம்போக்கு என்கிற பொதுவுடமை, நானும் ரௌடிதான் நடிகர் அதர்வாவிக் சண்டி வீரன், ஈட்டி நடிகர் அருள்நிதியின் டிமான்ட்டி காலனி, நாலு போலீசும் நல்லா இருந்த ஊரும் ஆகிய திரைப்படங்களும் வெளியாகின.

அத்துடன், விக்ரமின் ஐ, பத்து எண்றதுக்குள்ள  விஜய்யின்  புலி கார்த்தியின் கொம்பன் சித்தார்த்தின் எனக்குள் ஒருவன்  சிம்புவின் வாலு சிவகார்த்திகேயனின்  காக்கி சட்டை விஷ்ணு விஷாலின் இன்று நேற்று நாளை ஆகிய திரைப்படங்களும் வெளியாகியிருந்தன.

ஆர்யா நடித்து இந்த ஆண்டில் வெளியான ஐந்து திரைப்படங்களில் நான்கில் நாயகனாக நடித்திருந்தார். ஒரு திரைப்படத்தில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார். புறம்போக்கு என்கிற பொதுவுடமை கதாபாத்திரம் மட்டுமே குறிப்பிட்டுச் சொல்லும்படியான கதாபாத்திரமாக அமைந்தது. ஏனையவை  கமர்ஷியல் ஹீரோ கதாபாத்திரமாகவே இருந்தது. ஆனாலும் அவை வெற்றி பெறாமல் போனது அவர் இந்த ஆண்டில் அதிகத் திரைப்படங்களில் நடித்திருந்தும் முதலிடத்தைப் பிடிக்க எந்த உதவியையும் செய்யவில்லை. நான் கடவுள் போன்ற திரைப்படங்களில் நடித்து நல்ல பெயரைப் பெற்ற ஆர்யா, இனியாவது நல்ல கதாபாத்திரங்களைத் தேர்வு செய்து நடிப்பது நலம்.

ஒரே ஆண்டில் தான் நடித்து வெளிவந்த நான்கு திரைப்படங்களில் மூன்று வெற்றிகளைக் கொடுத்த பெருமை ஜெயம் ரவிக்கு இந்த ஆண்டு கிடைத்துள்ளது. சகலகலா வல்லவன் திரைப்படத்தில் அவர் ஏன் நடித்தார் என்பது அவருக்கே வெளிச்சம். ரோமியோ ஜுலியட்டும் ஒரு வழக்கமான கமர்ஷியல் மசாலா காதல் கதைதான். ஆனாலும், தனி ஒருவன், பூலோகம் திரைப்படங்களில் ஒன்றுக்கொன்று வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து தன்னாலும் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். 

கமல்ஹாசன் நீண்ட பல வருடங்களுக்குப் பிறகு கமல்ஹாசன் நடித்து ஒரே ஆண்டில் மூன்று திரைப்படங்கள் வெளிவந்திருப்பது ஆச்சரியமான விடயம். உத்தம வில்லன் திரைப்படத்தை வழக்கம் போல தனக்கான திரைப்படமாகவே எடுத்துக் கொண்டார் கமல்ஹாசன், இரசிகர்களை எந்த விதத்திலும் திருப்திப்படுத்தவில்லை. பாபநாசம் ரீமேக்; என்றாலும் கமல்ஹாசனின் நெல்லைத் தமிழ்ப் பேசும் அந்த சுயம்புலிங்கம் கதாபாத்திரம் சாதாரண இரசிகர்களையும் கவர்ந்த ஒன்றாக இருந்தது. ஆனாலும், கமல்ஹாசன் என்ற நடிப்புப் பல்கலைக்கழகத்துக்கு அந்த ஒரு திரைப்படத்தின் நடிப்பு மட்டும் போதாது என்பதே உண்மை. தூங்காவனம் திரைப்படத்தில் இதற்கு முன் பல திரைப்படங்களில் பார்த்த கமல்ஹாசனை மட்டுமே பார்க்க முடிந்தது. கமல்ஹாசனின் நடிப்பையும் மிஞ்சம் அளவுக்கு சிலர் இந்த வருடம் முயற்சி செய்திருப்பதால் முதலிடத்தைப் பிடிக்கும் பாக்கியம் கமலுக்கு இல்லை.

ஆடுகளம் திரைப்படத்துக்கு தேசிய விருது வாங்கியதற்குப்; பிறகு தனுஷ் மீதானப் பார்வை நிறையவே மாறியது. ஹிந்தியில் அமிதாப்புடன் இணைந்து நடிக்கும் அளவிற்கு அந்தப் பெருமையை தேசிய விருதுதான் தேடிக் கொடுத்தது என்றால் அது மிகையில்லை. ஆனாலும், தனுஷ் தன்னுடைய நடிப்புத் திறமையை முழுவதும் பயன்படுத்தாமல் மாரி போன்ற தர லோக்கலான திரைப்படங்களில் நடிப்பதையே அதிக விருப்பமாக வைத்திருக்கிறாரோ என்று எண்ணத் தோன்றுகிறது. அனேகன் திரைப்படத்தில் சில வித்தியாசமான தோற்றங்களில் நடித்திருந்தாலும் அது யதார்த்தத்தை மீறிய கற்பனையாகத் தெரிந்தது. தங்கமகன் போன்ற திரைப்படங்களில் எல்லாம் அவர் மிகச் சாதாரணமாகவும் நடித்துவிடக் கூடாது. அதைப் புரிந்து கொண்டு அடுத்த ஆண்டில் நிறைவேற்றி வைப்பார் என்று எதிர்பார்ப்போம்.  பாலா போன்ற இயக்குநர்களுடன் தனுஷ் இணைந்தால் நிச்சயம் ஒரு மாறுபட்ட படைப்பை நம்மால் பார்க்க முடியும் என்பது உறுதி.

அன்று முதல் இன்று வரை கமர்ஷியல் ஹீரோ என்ற வட்டத்திற்குள்ளாகவே இருக்கிறார் நடிகர் அஜீத். அவருடைய திரையுலக வரலாற்றில் கொஞ்சம் வித்தியாசமாக நடித்த திரைப்படம் என்று சொன்னால் சிட்டிசனை மட்டுமே அதிகமாகக் குறிப்பிட்டுச் சொல்ல முடியும். ஒரு ரஜினிகாந்த், ஒரு கமல்ஹாசன் கலந்த கலவை தான் என்பதை உணர்ந்து அஜீத் ஒரு வித்தியாசமான பாதையில் நடை போட்டால் அவரை மிஞ்ச இங்கு வேறு எந்த நாயகனாலும் முடியாது. என்னை அறிந்தால், வேதாளம் ஆகிய இரண்டுமே அஜீத்தை முழுமையாகப் பயன்படுத்திக் கொண்ட திரைப்படங்கள் அல்ல. அவரை முழுமையாகப் பயன்படுத்தி இரசிகர்களையும் மிரட்ட வைக்கும் திரைப்படங்களை கொடுக்கக் கூடிய இயக்குநர்களே அவருக்கு உடனடித் தேவையாக இருக்கிறது. அப்படிப்பட்டவர்களை அஜீத் தேடிக் கண்டுபிடிக்க வேண்டும், அது புதியவர்களாக இருந்தாலும் சரி. செய்வாரா?

புலி திரைப்படத்தைப் பற்றிப் பேசுவதை விஜய்யே கூட விரும்ப மாட்டார் என்பதால் விஜய் பற்றியும், புலி திரைப்படத்தைப் பற்றி எழுதுவதையும் நிறுத்திக் கொள்வோம்.

விஷால் தன்னை இன்னும் ஒரு ஆக்ஷன் ஹீரோவாகவே முன்னிறுத்திக் கொண்டிருக்கிறார். அதன் தொடர்ச்சியாகத்தான் இந்த வருடம் அவர் நடித்துள்ள இரண்டு திரைப்படங்களும் அமைந்துள்ளன. எக்ஷன் மட்டும் போதும் என்று இல்லாமல் அவன் இவன் போன்று வித்தியாசமான திரைப்படங்களிலும் நடிப்பதுதான் நிலைத்து நிற்கவும் செய்யும் என்பதை அடுத்து ஆண்டு மீண்டும் பாலா திரைப்படத்தில் நடிப்பதன் மூலம் நிரூபிப்பார் என்று எதிர்பார்ப்போம்.

சூர்யாவுக்கென்று எப்போதுமே ஒரு தனி இரசிகர்கள் உண்டு, குறிப்பாக அவருக்குப் பெண் இரசிகைகள் அதிகம். கடந்த ஆண்டு வெளிவந்த அஞ்சான் அவர் மீதான ஒரு பார்வையை நிறையவே மாற்றிவிட்டது. தொடர்ந்து இந்த ஆண்டிலும் மாசு என்கிற மாசிலாமணி என்ற ஒரு மோசமான திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அதை மீண்டும் நிரூபித்திருக்கிறார். ஏன் சூர்யா, இப்படியெல்லாம்? எனினும் தயாரிப்பாளராக 36 வயதினிலே, பசங்க 2 ஆகிய திரைப்படங்களைத் தயாரித்துள்ளார். ஆக, இந்த ஆண்டில் சூர்யாவை சிறந்த தயாரிப்பாளர் என்ற பட்டியலில் இணைத்து விடலாம்.

கடந்த சில வருடங்களாக தமிழ்த் திரையுலகில் யதார்த்தமாக நடிக்கத் தெரிந்த நாயகர் என்ற பாராட்டைப் பெற்று வருபவர் விஜய் சேதுபதி. கடந்த ஆண்டில் வெளிவந்த சில தோல்விப் திரைப்படங்களால் கொஞ்சம் தடுமாறிக் கொண்டிருந்தார். இந்த ஆண்டில் அவர் நடித்து முதலில் வெளிவந்த திரைப்படம் புறம்போக்கு என்கிற பொதுவுடமை. ஆர்யாவுடன் இணைந்து நடித்தார். விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றாலும் வசூல் ரீதியாக வெற்றி பெறவில்லை. அடுத்து ஆரஞ்சு மிட்டாய்  அவருடைய நடிப்பைப் பற்றிப் பேசினாலும் திரைப்படம் பேசப்படாமல் போய்விட்டது. நானும் ரௌடிதான் அவருக்குத் திருப்புமுனையாக வெற்றியைக் கொடுத்தது. இருந்தாலும் வித்தியாசமான கதாபாத்திரம் என்றெல்லாம் இல்லாமல் கொஞ்சம் மாறுபட்ட கமர்ஷியல் திரைப்படமாக மட்டுமே அமைந்தது. அடுத்த ஆண்டில் கைவசம் வைத்துள்ள திரைப்படங்களின் மூலம் மற்ற நாயகர்களுக்கும் சரியான போட்டியாக அமைவார் என்று தெரிகிறது.

இசையமைப்பாளராக இருக்கும்  ஜி.வி.பிரகாஷ்குமார் டார்லிங் திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகும் போது நன்றாகத்தானே இசையமைத்துக் கொண்டிருக்கிறார், எதற்கு இந்த வேண்டாத வேலை என்றெல்லாம் கூடப் பேசினார்கள். ஆனால், பலரது எதிர்பார்ப்பையும் மீறி அவர் நாயகனாக அறிமுகமான டார்லிங் திரைப்படம் வசூல் ரீதியாக நல்ல வெற்றியைப் பெற்றது. அடுத்து வெளிவந்த த்ரிஷா இல்லனா நயன்தாரா மோசமான எதிர்மறை விமர்சனங்களை சந்தித்தாலும்; நல்ல வசூலைப் பெற்றது. ஆனால், ஜிவி மீதிருந்த பெயரை நன்றாகவே கெடுக்கவும் செய்தது. இருந்தாலும் இரண்டு வெற்றிகளை தன்னுடைய அறிமுக ஆண்டிலேயே கொடுத்து வியக்க வைத்தார் ஜி.வி.

கார்த்தி, அதர்வா, அருள்நிதி, சிவகார்த்திகேயன், விஷ்ணு விஷால் ஆளுக்கொரு வெற்றித் திரைப்படங்களின் நடித்தன் மூலம் இந்த ஆண்டில் முத்திரை பதித்துள்ளார்கள். ஆனால் முதலிடத்தில் வரும் நாயகன் என்ற அளவுக்கு அந்த வெற்றிகளும், அந்தக் கதாபாத்திரங்களும் போதுமானதாக இல்லை. சிம்பு, சித்தார்த் ஆகியோர் இந்த ஆண்டில் வெளிவந்த திரைப்படங்களின் பட்டியலில் நடித்துள்ள நாயகர்கள் என்ற விதத்தில்  மட்டுமே இந்தப் பட்டியலில் இடம் பிடித்துள்ளார்கள். 

ஒரு திரைப்படத்தின் வெற்றியில் ஒரு நாயகனின் பங்கு எப்படி அமைகிறது. இயக்குநரின் கற்பனையில் உருவான அந்தத் திரைப்படத்தில், அந்தக் கதாபாத்திரத்தில் தன்னுடைய நடிப்பின் மூலம் ஒரு நாயக நடிகர் எப்படி தன் திறமையை வெளிப்படுத்துகிறார் என்பதே அதிகம் கவனிக்கப்படுகிறது. அந்தக் கதாபாத்திரத்தை அனைவரும் நம்பும் படியும், தோற்றத்திலும், நடிப்பிலும் வெளிப்படுத்துவதே சராசரி இரசிகனையும் கவரும். அப்படி ஒரு நடிகர் ஒரு திரைப்படத்தில் நடித்திருந்தால் அந்தத் திரைப்படம் வெற்றி பெற்றாலும் சரி, தோல்வியடைந்தாலும் சரி, பலமாக விமர்சிக்கப்பட்டாலும் சரி, அந்தத் திரைப்படமும், நடித்த நடிகரும் நீண்ட காலத்துக்கு பேசப்படுவார்கள். அப்படி ஒரு திரைப்படமாக அமைந்தது  ஷங்கர் இயக்கிய ஐ மட்டுமே.

மூன்று விதமான தோற்றங்களில், நடிப்புக்காகத்தானே என்பதையும் மீறி தன்னுடைய உடலை கட்டுக் கோப்பாக ஏற்றியும், எடை குறைய வைத்து இறக்கியும், ஸ்டைலான இன்றைய இளைஞர்களின் தோற்றத்திலும், கூன் விழுந்து விகாரமான தோற்றத்திலும் என ஒரே திரைப்படத்தில் மாறி மாறி மாறி மாறி தோன்றி இரசிகர்களை வியக்க வைத்த விக்ரம், இவ்வருடத்தின் முதல் இடத்துக்கு முற்றிலும் தகுதியானவர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .