2025 மே 16, வெள்ளிக்கிழமை

24 இல் கோட்டை விட்ட இலங்கை வீரர்

George   / 2016 மே 10 , மு.ப. 04:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

கழுகு பார்வையில் சிறகொன்று பறக்க, திரை விலகுகையில் பேசுகின்ற முதல் வசனங்கள், கேட்காத அளவுக்கு இரசிகர்களின் விசில் சத்தம், கைத்தட்டல்களால் திரையரங்கே ஒருகணம் அதிர, நடிகர் சூர்யா வில்லனாக நடித்திருக்கும் '24' படத்தை இயக்கியிருக்கின்றார் விக்ரம் குமார். 

இசைப்புயல் ஏ.ஆர் ரஹ்மானின் இசைப்புயல் வீச, மிகமிகத் துல்லியமான ஒளிப்பதிவைச் செய்திருக்கிறார் திரு. விஞ்ஞானி, டொக்டர் மற்றும் கடிகாரம் திருத்துனர் ஆகிய மூன்று வேடங்களில் சூர்யா கலக்கு கலக்க, சமந்தா, சரண்யா நடிப்பும் கண்களைச் சிமிட்டுவதற்கும் மறக்க வைத்துவிடுகிறது.

இவ்வாறான களத்தில் வரும் படங்களை ஹொலிவூட்டில் அடிக்கடி பார்க்கலாம். தமிழில் எப்போதாவது இருந்து ஒன்றிரெண்டு புரியாமலே வந்துபோகும். 

'24' மாதிரியான கதைகளைப் படங்களாக்க வேண்டுமாயின் மிதமிஞ்சிய அர்ப்பணிப்பு வேண்டும். அந்த வகையில் ஹீரோ சூர்யாவைவிட தயாரிப்பாளர் சூர்யா பாராட்டுக்குரியவர். 

கதையின் பிரகாரம், டைம் மெஷின் வோட்ச் ஒன்றை பெரும்பாடுபட்டுக் கண்டுபிடிக்கிறார் விஞ்ஞானி சூர்யா. அதை அபகரிக்க அடியாட்களுடன் வருகிறார் உடன் பிறந்த அண்ணனான இன்னொரு சூர்யா. கொடூர மனம் படைத்த இந்த அண்ணன், தம்பியின் மனைவியைக் கொல்கிறார்.

ஒருவாறு குழந்தையுடன் ரயிலில் குதித்து தப்பிக்கும் விஞ்ஞானி, அந்த ரயிலில் பயணிக்கும் சரண்யாவிடம் குழந்தையை ஒப்படைத்து நிம்மதிப்பெருமூச்சு விடுமுன்னரே அக்கடிகாரத்துக்காக  தம்பியையும் ரயிலில் வைத்து கொல்கிறான் வில்லன் சூர்யா. வில்லன் பாத்திரத்துக்கான அவரது நடிப்பு, மற்றொரு வில்லனின் நடிப்பு முயற்சியானதோ என மனம்பேசினாலும் சூர்யாவை வில்லனாகப் பார்க்க சூப்பராகத்தான் இருக்கிறது. 

குழந்தையை, ரயிலில் பயணிக்கும் சரண்யாவிடம் ஒப்படைத்துவிட்டு உயிர் துறக்கிறார் விஞ்ஞானி சூர்யா. குண்டு வெடிக்கப் போகிறது என நினைத்து அதே ரயிலிலிருந்து குதிக்கும் வில்லன் சூர்யா, அடிபட்டு கோமாவில் மூழ்கிவிடுகிறார். 

26 ஆண்டுகள் கழித்து அந்தக் குழந்தை வளர்ந்து இளம் சூர்யாவாகிறார். அந்த இளம் சூரியாதான், கடிகாரம் திருத்துனர். விஞ்ஞானி உருவாக்கிய கடிகாரம், அந்தக் கடிகாரத்துக்கான சாவி எல்லாம் இளம் சூர்யாவிடம் கிடைக்க, ஒருநாள் கடிகாரத்தைத் திறந்து திருக, அது காலத்தை முன்னுக்கும் பின்னுக்குமாக நகர்த்தும் அற்புத டைம் மெஷின் என்பதை உணர்கிறார் சூர்யா. இதே வேளையில், கோமாவிலிருந்த சூர்யாவுக்கும் உணர்வு வருகிறது. 

இந்த டைம் மெஷின் வோட்சை உருவாக்கி, கோமாவில் மூழ்கிய 26 ஆண்டைத் திரும்பப் பெறும் முயற்சியில் இறங்குகிறார் வில்லன் சூர்யா. அது தோல்வியில் முடிகின்றது. இந்த இடத்தில் தான் கழுகிடமிருந்து பறந்துவந்த இறகுவின் தார்ப்பரியம் புரியும். 

ஏற்கெனவே உருவாக்கப்பட்ட வோட்சைத் தேடும் முயற்சி ஆரம்பமாக, இளம் சூர்யா, தன் தந்தை விஞ்ஞானி சூர்யாவைக் கொன்ற வில்லன் சூர்யாவைக் கண்டுபிடிக்கிறாரா? அத்துடன் இடைவேளையாகின்றது. 

இந்த மாதிரி டைம் மெஷின் சமாசாரக் கதைகளில் குழப்பங்கள் வரும். காட்சிகள் பிசகும். ரசிகர்களுக்கு புரியவைப்பதற்காகவோ என்னமோ, மூன்று காட்சிகள் மூன்று தடவைகள் அடிக்கொரு தடவை வருகிறது. அதில், காதல் ரொமான்ஸ்கான காட்சியில், விலாசத்தை மூன்றுமுறைகள் கேட்பதை கட்... கட்... பண்ணியிருக்கலாம்.

எப்படியாயினும்,  விக்ரம் குமாரின் தெளிவான திரைக்கதை, கோர்ப்பு ஏன், சுவிங்கம் கூட காட்சிகளை பிசகவைக்காது கதையோடு ஒட்டிப்போகின்றது. இங்குதான் காணாமல் போன சாவி கண்டுப்பிடிக்கும் முடிச்சு அவிழ்கப்படுகின்றது. ஆனால், காசோலை காட்டிக்கொடுத்துவிடுகின்றது. 

நேரத்தை உறைய வைத்து மழையை அந்தரத்தில் நிறுத்துவது, கிரிக்கெட் ஸ்டேடியத்துக்குள் புகுந்து மெட்ச் முடிவை மாற்றுவது, காதலியைக் குழப்புவது என சுவாரஸ்யமான காட்சிகளுக்குப் பஞ்சமில்லை. பத்துமாதம் சுமந்து பெத்தவன் என்ற வசனம் பாசப்பினைப்பை பின்னாடி காட்டுகிறது. 

அதிலும், இந்திய அணியின் கப்டன் டோணியுடன் செல்பி எடுப்பது என்னமோ பிரமாதம்தான். ஆனா மனந்நொந்து போயிருக்கும் இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர் லசித் மாலிங்கவின் பிடியெடுப்பை சூர்யா மாற்றியதன் மூலம், இலங்கை கிரிக்கெட் அணி ரசிகர்களை முகஞ்சுளிக்கவைத்துவிட்டார். 

இளம் சூர்யாவின் காதலியாக வரும் சமந்தா, கோபால சமுத்திரம் கிராமத்துக் காட்சியில், சூர்யாவை தேடும் இடம் கூட சுப்பர்தான். அப்பாவை அடுத்தகாட்சி தேடும் என்ற ரசிகர்களின் மனக்கோட்டையை மண்கோட்டையாக்குவது போல காட்சியை கோர்த்தமை, திகைப்பானது. இந்தப் படத்தின் ஒளிப்பதிவு சூப்பர். பதிவுகளை பார்க்கையில் திருதிருவென முழிக்கவைத்துவிடுகின்றார் திரு. 

நிறைவில் வரும், இரு குழந்தைகளின் காதல் சம்பாஷணையை கட்பண்ணியிருந்தால். குழந்தை மத்தியில் உருவாகும் தப்பான காதல் உணர்வுகளை தூவும் தூபத்துக்கு சாபமிட்டிருக்கலாம். 

பாடல்களை பொறுத்தவரையில் அண்மையகால தமிழ் சினிமாக்களில் வெளியாகியுள்ள ஏனைய பாடல்களைப் போலவே புரியவில்லை என்றாலும், இசைபுயலின் இசை லயிக்கவைத்துவிட்டது. 

'வோட்ச் மெக்கானிக்குக்கு இதெல்லாம் சாதாரணங்க...' என்ற வசனத்தை எத்தனை முறைகள் சொன்னாலும் சளைக்கவே சளைக்காது. அப்படி டைமிங்... ஆக மொத்தத்தில் 24 என்று ஏண்டா படத்துக்குப் பெயர் வச்சாங்க என்பது புரியாதவர்களுக்கு புதிர், புரிந்தவர்களுகளுக்கு புதிதல்ல. ஏன்னா 'ஜேனர்லிஸ்டுக்கு (பத்திரிகையாளர்கள்) இதெல்லாம் சாதாரணங்க'.

திரைவிமர்சனம்: பெரியமணி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .