2025 மே 14, புதன்கிழமை

'கலை கடற்கரையில், கை மண்ணளவு அள்ளிவிட்ட பெருமை'

George   / 2016 ஓகஸ்ட் 22 , மு.ப. 04:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரான்ஸ் நாட்டின் மிகஉயரிய செவாலியே விருதுக்கு தேர்வு செய்யப்பட்டமைகாக நன்றி தெரிவித்துள்ள நடிகர் கமல் ஹாசன், கலை, இலக்கியத்துக்கு ஆற்ற வேண்டிய பணிகளுக்கான ஊக்கியாக கருதும் இவ்விருதினை எனது ரசிகர்களுக்கும், அபிமானிகளுக்கும் அர்ப்பணம் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

செவாலியே விருது பெற இருக்கும் நடிகர் கமல் ஹாசனுக்கு திரை உலகத்தினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். காலில் காயம் ஏற்பட்டு அறுவை சிகிச்சைக்கு பிறகு சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள தனது வீட்டில் ஓய்வெடுத்து வரும் கமல் ஹாசன் பாராட்டு மழையில் நனைந்து வருகிறார்.

இந்நிலையில், கலை, இலக்கியத்துக்கு செய்ய வேண்டிய பணிகள் ஏராளம் உள்ளன. அதற்கான ஊக்கியாகவே இந்த செவாலியர் விருதை கருதுகிறேன் என கமல்ஹாசன் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து, வட்ஸ்அப்-இல்; வெளியிட்டுள்ள ஓடியோ வடிவிலான செய்திக்குறிப்பில் அவர் இவ்வாறு பேசியுள்ளார்.

'பிரெஞ்சு அரசு கலை, இலக்கியத்துக்கான செவாலியே விருதை எனக்கு அளிக்க மனமுவந்துள்ளது. பெருமிதத்துடன், நன்றியுடன் பணிவுற்று அவ்விருதினை ஏற்கிறேன். அவ்விருதின் பெருமையை தமிழக மக்களுக்கு அறிமுகப்படுத்திய ஐயா சிவாஜி கணேசன் அவர்களையும், வடநாட்டு பாமரரையும் அறியச்செய்த காலஞ்சென்ற சத்யஜித் ரே-யையும் என் கரம் கூப்பி வணங்குகிறேன்.

இனி நாம் செய்ய வேண்டிய கலை, இலக்கிய பணிக்கான ஊக்கியாகவே இவ்விருதினை நான் உணர்கிறேன்.
கலை கடற்கரையில், கை மண்ணளவு அள்ளிவிட்ட பெருமை, எவ்வளவு சிறுபிள்ளைத்தனமானது? என்பதை நான் உணர்கிறேன். வயதிலாது என்றும் ஆர்ப்பரிக்கும் கலைக்கடல் அலைகள், இத்தகைய தருணங்களில் கரைமோதி, என் போன்றோர் முகத்தில் தெளித்து, பெருவேச மயக்கம் கலைத்து, உதடும் நனைத்து, உப்பிட்டவர் நினைவை உணரச் செய்கிறது.

துவரையான என் கலைப் பயணம், தனிமனிதப் பயணம் இல்லை என்பதை உணர்கிறேன். கைதாங்கி, எழுத்தும், கலையும் அறிவித்த பெருங்கூட்டத்துடன் நாம் ஏற்ற யாத்திரை இது என்பதையும் உணர்கிறேன்.
அக்கூட்டத்தில் பெரும்பான்மை தமிழகத்து ரசிகர்கள், 4 வயது முதல் என் கைப்பிடித்து படியேற்றி, பீடத்தில் அமர்த்தி பார்க்கும் தாய்மை உள்ளம் கொண்ட அவர்களுக்கும் இவ்விருது அர்ப்பணம்.

என்னைப் பெற்றோர் இருந்து பார்க்க இயலாத குறை, என் குடும்பத்தில் எஞ்சிய பெரியோரும், இளையோரும், என் சிறுவெற்றிக்கும் ஆர்ப்பரிக்கும் என் ரசிகர் கூட்டமும் போக்கி விடுகிறது.

நன்றியுடன் உங்கள் கமல்ஹாசன்'.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .