2025 மே 19, திங்கட்கிழமை

நான் காதலிக்கவில்லை...!

Menaka Mookandi   / 2014 ஜூன் 02 , மு.ப. 05:57 - 0     - {{hitsCtrl.values.hits}}


நடிகர் கமலின் மூத்த மகளும் பிரபல நடிகை, பாடகி, இசையமைப்பாளர் என பன்முகத்திறமைகளைக் கொண்டவருமான ஸ்ருதிஹாசன், பிரபல கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னாவைக் காதலிப்பதாகவும், இருவரும் படு இரகசியமாக காதலை வளர்ப்பதாகவும் கடந்த சில நாட்களாக ஊடகங்களில் செய்தி வெளியானது.

ஆனால், தற்போது அத்தகவலை சம்பந்தப்பட்ட இருவரும் மறுத்துள்ளனர். ரெய்னா, ஏற்கெனவே பல நடிகைகளுடன் காதலில் சிக்கியுள்ளார் என ஊடகங்களில் செய்தி வெளியானது.

இந்நிலையில் தற்போது ஸ்ருதியுடன் இணைத்துப் பேசப்பட்டார். ஆனால், இக்காதல் செய்தி உண்மையில்லை என ரெய்னா மறுத்துள்ளார்.

இது தொடர்பாக தனது டுவிட்டர் பக்கத்தில் மறுப்புத் தகவல் வெளியிட்டுள்ளார் ரெய்னா. அதில் அவர், நிறைய ஊடகங்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளன. ஆனால், யாராலுமே இதனை உறுதிப்படுத்த முடியவில்லை. எல்லோருக்கும் ஒரு விடயத்தை தெளிவுபடுத்திக்கொள்கிறேன். நான் யாரையும் காதலிக்கவில்லை என விளக்கமளித்துள்ளார்.

விஜய்க்கு நடிக்கத் தெரியாது: பார்த்திபன் விளக்கம்

சினிமாவில் பி.ஆர்.ஓ என்பவர் யார்? ஒரு திரைப்படம் அல்லது நட்சத்திரம் அல்லது தொழில்நுட்பக் கலைஞர்கள் பற்றிய தகவல்களை பத்திரிகையாளர்களிடம் சொல்லி, அவற்றை வெளியில் பிரபலப்படுத்துபவர் தான் பி.ஆர்.ஓ. அந்த வகையில் தமிழ் சினிமாவில், நடிகர் - இயக்குநர் பார்த்திபனை விட பலே பி.ஆர்.ஓ.வைப் பார்க்க முடியாது.
 
அவருக்கு அவரே மிகப் பெரிய பி.ஆர்.ஓ.தான். அவருக்கும் அவரின் திரைப்படத்துக்கும் எந்த முறையில் விளம்பரம் தேடலாம் என்பதற்கு பெரிய யோசனைக் கிடங்கே வைத்திருக்கிறார் போலும்! இந்த வாரம் முழுக்க ஏதோ ஒரு வகையில் ஊடகத்தில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டிருக்கிறார்.
 
ஷங்கர் இயக்கிய நண்பன் திரைப்படத்தில் சத்தியராஜின் கதாபாத்திரத்துக்கு பார்த்திபனைத்தான் முதலில் அழைத்தார்களாம். அப்போது ஷங்கரிடம், விஜய் வேஸ்ட், அவருக்கு நடிப்பு வராது. சூர்யாவை நடிக்க வையுங்கள்... அமீர்கான் வேடத்துக்கு பொருத்தமாக இருப்பார் என்று பார்த்திபன் சொன்னதாக ஒரு குற்றச்சாட்டு கிளம்பியுள்ளதாம்.
 
அதற்கு விளக்கமளித்துள்ள பார்த்திபன், சத்தியராஜின் வேடத்துக்கு என்னை சிபாரிசு செய்ததே விஜய் தான். கதை இப்படி இருக்க, விஜய் பற்றிய கருத்தை நான் எங்கு போய் சொல்ல. சிறப்புத் தகுதி இல்லாமல் யாரும் உயர்வது இல்லை. விஜயின் இன்றைய உயரம் சிறப்பு வாய்ந்தது எனக் கூறியுள்ளார் பார்த்திபன்.

சர்ச்சையில் மல்லிகா

இந்திய காங்கிரஸ் கட்சியின் கொடி நிறத்தில் சேலை அணிந்து, கவர்ச்சி போஸ் கொடுத்த நடிகை மல்லிகா ஷெராவத்துக்கு எதிராக கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
 
ஹிந்தியில் தயாராகும் டேர்ட்டி பொலிடிக்ஸ் என்ற திரைப்படத்தில் மல்லிகா ஷெராவத் நடிக்கிறார். அரசியல் திரைப்படமாக இது தயாராகிறது. பொக்காடியா என்பவர்  இயக்குகிறார்.
 
இந்த திரைப்படத்தின் போஸ்டர்கள் மும்பை நகரெங்கும் ஒட்டப்பட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ராஜஸ்தான் சட்டசபை எதிரில் கார் மேல் காங்கிரஸ் கட்சி கொடி கலரான சிவப்பு, வெள்ளை, பச்சை நிறத்தில் மல்லிகா ஷெராவத் சேலை அணிந்து உட்கார்ந்து கையில் சி.டி.யுடன் கவர்ச்சி போஸ் கொடுப்பது போல் அப்போஸ்டரில் படம் காணப்பட்டது.
 
இந்த போஸ்டரை அகற்றும் படியும் மூன்று வர்ண நிறத்தில் சேலை உடுத்தும் காட்சிகள் இடம்பெறக் கூடாது என்றும் அச்சுறுத்தல்கள் வந்துள்ளன.
 
இது குறித்து இயக்குநர் பொக்காடியா கூறுகையில், ராஜஸ்தானில் உள்ள ஓர் அரசியல் கட்சியை சேர்ந்த தொண்டர்கள் இதுபோன்ற காட்சிகள் படத்தில் இடம்பெறக் கூடாது என அச்சுறுத்துகின்றனர். பான்வாலி தேவி, செக்ஸ் ஊழலை மையமாக வைத்துத்தான் இந்த திரைப்படத்தை எடுக்கிறேன்.
 
எல்லா அரசியல் கட்சியினருக்கும் இந்த ஊழல் தெரியும். எந்த அரசியல் கட்சியின் சின்னமும் படத்தில் இல்லை. தேசிய கொடியாகவும் சேலையாகவும் கருதவேண்டாம். அசோக சக்கரம் கிடையாது. மூன்று நிறத்திலான சாதாரண சேலையை தான் அவர் அணிந்துள்ளார் என பொக்காடியா கூறியுள்ளார்.

தமிழுக்கு அதிக சம்பளம்

நடிகர் பிரசாந்த் நடிக்கும் புதிய திரைப்படம் சாகசம். இந்த திரைப்படம் தொடர்பில் பிரசாந்த் விளக்கமளித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் கூறியுள்ளதாவது,
 
பொன்னர் சங்கர், மம்பட்டியான் திரைப்படங்களுக்காக 110 கிலோவாக உடல் எடையை கூட்டினேன். பின்னர் உடற்பயிற்சி செய்து 30 கிலோ குறைத்து 80 கிலோவுக்கு மாறி இருக்கிறேன். டைரக்டர் மேஜர் ரவியிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய அருண் ராஜ் வர்மன் இயக்கும் சாகசம் என்ற திரைப்படத்தில் தற்போது நடிக்கிறேன்.
 
இதன் பாடல் காட்சி ஒன்றுக்காக பொலிவுட் நடிகை நர்கிஸ் பக்ரி, ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். ரன்பீர் கபூர் உள்ளிட்ட பொலிவுட் ஹீரோக்களுடன் நடித்திருப்பதுடன் ஸ்பை என்ற ஹொலிவுட் திரைப்படத்திலும் நடித்து வருகிறார் நர்கிஸ்.
 
நர்கிஸின் கால்ஷீட்டுக்கு பெருந் தொகை கொடுத்தீர்களா? என்கிறார்கள். கொலிவுட் ஹீரோயின்கள் சம்பளமே இப்போது கோடிகளை நெருங்கிவிட்டது. அவருக்கு பெருந்தொகை தரப்பட்டது உண்மைதான். இப்படத்துக்கு தேவி ஸ்ரீபிரசாத் இசையமைக்கிறார் என்று கூறியுள்ளார் பிரசாந்த்.

கணவரை உளவு பார்க்கும் நடிகை

கணவரின் நடவடிக்கைகளை உளவுபார்க்க டிடெக்டிவ் ஏஜென்ட் ஒருவரை நியமித்திருப்பதாக நடிகை வித்யாபாலனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
 
தி டேர்ட்டி பிக்ஷர், கஹானி உள்ளிட்ட பல்வேறு பொலிவுட் திரைப்படங்களில் நடித்திருப்பவர் வித்யாபாலன். தமிழில் வந்த வாய்ப்புகளை ஏற்க மறுத்துவந்த இவர் விரைவில் அஜீத்தின் திரைப்படத்தில் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியான வண்ணம் உள்ளது. இது பற்றி வித்யாபாலன் இன்னும் உறுதி செய்யவில்லை.

இந்நிலையில் வித்யாபாலனுக்கும் அவரது கணவர் சித்தார்த் ராய் கபூருக்கும் இடையே மனக்கசப்பு ஏற்பட்டிருப்பதாகவும் கணவரின் நடவடிக்கையில் சந்தேகம் எழுந்துள்ளதால் அவரை உளவு பார்க்க டிடெக்டிவ் ஏஜென்ட்டை நியமித்திருப்பதாகவும் பரபரப்பாக பேசப்படுகிறது.
 
இதுபற்றி வித்யாபாலனிடம் கேட்டபோது, என் கணவரை உளவு பார்க்க டிடெக்டிவ் ஏஜென்டா? அது வேஸ்ட். சித்தார்த் ரொம்பவே போரிங் நபர். எதிலும் எளிமையாக இருப்பார். அவரை உளவுபார்க்கும் அளவுக்கு எனக்கு எந்த வேலையும் அவர் வைக்கமாட்டார் என்று கூறியுள்ளார் வித்யா.

You May Also Like

  Comments - 0

  • vicky Monday, 02 June 2014 08:43 AM

    super

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X