2025 மே 19, திங்கட்கிழமை

அடுத்த சுப்பர் ஸ்டார் அஜித்

Super User   / 2014 ஜூன் 30 , மு.ப. 06:36 - 0     - {{hitsCtrl.values.hits}}


தமிழ் திரையுலகின் அடுத்த சுப்பர் ஸ்டார் யார் என்பது தொடர்பில் சென்றவாரம் பிரபல வார இதழ் ஒன்று கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியதுடன் இதில் இளைய தளபதி விஜய் வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்த கருத்துகணிப்பு வெளிவந்த நாள் முதல் பல தரப்பிலிருந்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. இதனை சில தரப்பினர் ஆதரித்தாலும், அதிகமானோர்கள் எதிர்ப்புகளையே தெரிவித்துள்ளனர்.

அதிலும் ரஜினி ரசிகர்களை கேட்கவா வேண்டும். தலைவர் இந்த கோதாவில் தொடர்ந்து இருக்கும்போது இந்த கணிப்புகள் தேவைதானா என்று நினைத்தார்கள்.

இந்நிலையில், இந்த கருத்துகணிப்பு குறித்து தற்போது அதிர்ச்சியான தகவல்கள் வெளிவந்துள்ளன.

குறித்த கருத்துகணிப்பின் போது அதிகளவான ரசிகர்கள் வாக்களித்தது அஜீத்துக்குதானாம். விஜய் பெயரை முன்மொழிந்தவர்கள் மிகவும் குறைவாகவே  காணப்பட்டனராம்.

சொல்லபோனால் அஜீத்துக்கும் விஜய்க்கும் ஒரு இலட்சத்துக்கும் மேல் வாக்குகள் வித்தியாசம் இருந்தததாகவும் கூறப்படுகிறது.

அஜீத் சுப்பர் ஸ்டார் பந்தயத்தில் இருந்து ஒதுங்கி உள்ளார். இந்நிலையில் கருத்துக்கணிப்பில் நீங்கள் தான் வெற்றி பெற்றுள்ளீர்கள் என்று அஜீத்திடம் தெரிவித்தாலும் அப்படியா என்று கேட்டுவிட்டு அவர் வேலையை பார்க்க சென்றுவிடுவார்.

அதனால் அவரிடம் தெரிவிக்கப்படவில்லை என்றும் இந்த செய்தியை அந்த கருத்துகணிப்பு நடத்திய நபர்களில் ஒருவரே வெளியிட்டதாகவும் கூறப்படுகிறது.

இந்த விடயம் தெரியாமல், கருத்துக்கணிப்பை நடத்தி என்னை அடுத்த சுப்பர் ஸ்டாராக தேர்வு செய்ததற்கு நன்றி என்று விஜய் அந்த வாரப் பத்திரிக்கைக்கு கடிதம் அனுப்பியுள்ளாராம்.

பாவம் அவர் நன்றி கடிதம் எல்லாம் அனுப்பிய பிறகு இப்படி குண்டை போடுவது போல் இந்த தகவல் வெளியாகியுள்ளது ஏன் என்பது ரசிகர்களுக்கு எழக்கூடிய நியாயமான கேள்விதான்.

அனுஷ்காவுடன் மோதும் தமன்னா

அனுஷ்காவுடன் சண்டை போட தமன்னா தயாராகியுள்ளாராம். தமிழ், தெலுங்கில் உருவாகும் பாஹூபலி படத்தில் அனுஷ்காவுடன் தமன்னா இணைந்து நடிக்கிறார்.

ராணி வேடத்தில் நடிக்கும் அனுஷ்கா இப்படத்துக்காக கத்தி சண்டை பயிற்சி பெற்று சமீபத்தில் போர்க்கள காட்சிகளில் நடித்தார். அவரைத் தொடர்ந்து தமன்னாவும் ஸ்டன்ட் மற்றும் வாள் சண்டை பயிற்சி பெற்றுள்ளார்.
 
இதற்காக அவர் தனது உடலை கட்டுக்கோப்பாக்கும் பயிற்சிக்காக ஜிம்மிற்கும் சென்று வருகிறார். இதுவரை தமன்னா இதுபோன்ற சண்டை காட்சிகளில் நடித்ததில்லை என்பதால் பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டிருக்கிறார்.

ஆயுதம் தாங்கிய உடை அணிந்து எதிரிகளை எதிர்த்து போர் புரியும் காட்சியில் தமன்னா நடிக்க உள்ளார்.

இதற்கான படப்பிடிப்பு தொடங்கிவிட்டதால் சண்டை காட்சிகளில் தமன்னா நடித்து வருகிறார். என்று தமன்னா தரப்பில் கூறப்படுகிறது.

அனுஷ்காவுடனும் சில காட்சிகளில் தமன்னா இணைந்து சண்டை காட்சிகளில் நடிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடிவாங்கி மயங்கிய பிரியங்கா

களஞ்சியம் தற்போது இயக்கி நடித்து வரும் படம் கோடை மழை. இதில் களஞ்சியம் பொலிஸ் அதிகாரியாகவும் அவரது தங்கையாக பிரியங்காவும் நடித்து வருகின்றனர்.

அண்ணன்-தங்கை பாசத்தை மையமாகக் கொண்டு இந்தப் படம் தயாராகி வருகிறது. சமீபத்தில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சங்கரன்கோவிலில் நடைபெற்றது.

அதில் ஒரு காட்சியில் இயக்குநர் மு.களஞ்சியம் நிஜமாகவே அப்படத்தின் நாயகி பிரியங்காவை அடித்ததாகவும், அந்த அதிர்ச்சியில் அவருக்கு வலிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டதாகவும் சென்ற வாரம் செய்தி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது நினைவிருக்கலாம். தற்போது இதுகுறித்து நடிகை பிரியங்கா, ஊடகங்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.
 
ஆரம்பத்தில் என்னிடம் கதை சொல்லும் போது அண்ணன் தன் தங்கையை அடிக்கிற காட்சி இருப்பதாக சொல்லவில்லை. ஆனால், காட்சி ஒத்திகை பார்த்தபோது திடீர்னு களஞ்சியம் என் கன்னத்தில் அடித்தார்.

கன்னத்துல அடிக்கிறதா என்னிடம் யாருமே சொல்லவில்லையே? என்று கேட்டேன். காட்சி யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக முன்கூட்டியே சொல்லவில்லை என்றார்கள். சரி என்று பொறுத்துக் கொண்டேன். அடுத்த ஷொட் கமெரா அவரை நோக்கி வைச்சாங்க.

நான் சும்மா நிக்கணும். ஆனால் அவர் அப்ப அவ்வளவு வேகமாக அடிப்பாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை. கன்னத்துக்கிட்ட அவர் கை வந்ததுதான் ஞாபகம் இருக்கு. நான் மயக்கம் போட்டு விழுந்துட்டேன். எங்க அப்பா என்னை ரூமுக்கு கூட்டிட்டு வந்துட்டாங்க. அதுக்கப்புறம் என்னை சுத்தமா யாருமே கண்டுகொள்ளவில்லை என பிரியங்கா தெரிவித்துள்ளார்.

மீண்டும் சூர்யா - ஜோதிகா

குழந்தைகளை மையமாக வைத்து இயக்குநர் பாண்டிராஜ் இயக்கும் புதிய படத்தில் சூர்யாவும் ஜோதிகாவும் இணைந்து நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இயக்குநர் பாண்டிராஜ் ஏற்கெனவே பசங்க என்ற குழந்தைகள் படத்தை எடுத்தார். இப்படம் வெற்றிகரமாக ஓடியது. தேசிய விருதையும் வென்றது.

தற்போது சிம்பு, நயன்தாரா ஜோடியாக நடிக்கும் இது நம்ம ஆளு படத்தை இயக்குகிறார். இந்த படம் முடிந்ததும் குழந்தைகள் பட வேலைகளை ஆரம்பிக்கவுள்ளார்.

இந்த குழந்தைகள் படத்தில் முன்னணி நடிகை ஒருவரை நடிக்க வைக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
 
இதையடுத்து ஜோதிகாவிடம் கதை சொல்வதற்காக பாண்டிராஜ் அணுகியுள்ளார். அந்த கதையை அவரது கணவரும் நடிகருமான சூர்யா முதலில் கேட்டதுடன் அவருக்கு பிடித்து போனதால் அந்த படத்தை நானே தயாரிக்கிறேன் என்று கூறி விட்டாராம்.

அத்துடன் சிறிய வேடத்தில் நடிக்கவும் சம்மதம் தெரிவித்து உள்ளார். ஜோதிகா நடிப்பது பற்றி தகவல் இல்லை. ஆனாலும் இருவரும் இணைந்து இதில் நடிக்க வாய்ப்பு இருப்பதாக பேச்சு அடிபடுகிறது.

திருமணத்துக்கு பிறகு ஜோதிகா படங்களில் நடிக்கவில்லை. நல்ல கதை அமைந்தால் ஜோதிகா மீண்டும் நடிப்பார் என்று சூர்யா கூறி இருந்தார்.

எனவே இந்த குழந்தைகள் படத்தில் அவர் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. நகைச்சுவை நடிகர் சத்யனும் இப்படத்தில் முக்கிய பாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக கோடம்பாக்க வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரியாமணியின் இரகசிய காதலன்

பிரியாமணியின் காதலன் யார் என்ற இரகசியம் உடைந்துவிட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

பருத்திவீரன், தோட்டா, இராவணன் போன்ற படங்களில் நடித்துள்ள பிரியாமணி, பின்னர் தமிழ் படங்களில் கவனத்தை குறைத்துக்கொண்டு மலையாளம், தெலுங்கு படங்களில் கவனம் செலுத்தினார்.

நீண்ட நாட்களுக்கு பிறகு கடந்த 2012ஆம் ஆண்டு சாருலதா என்ற தமிழ் படத்தில் நடித்தார். அதன்பிறகு தமிழில் வந்த வாய்ப்புகளை ஏற்கவில்லை.

இந்நிலையில் பிரியாமணி காதல் வலையில் விழுந்திருப்பதாகவும் தனது இரகசிய காதலனை அடிக்கடி சந்தித்து பொழுதை கழிப்பதாகவும் தகவல் வெளியானது.
இதற்கு பதில் அளித்த பிரியாமணி, இந்த விடயத்தை நான் மறுக்கவும் விரும்பவில்லை, ஏற்கவும் விரும்பவில்லை.

சரியான நேரம்வரும்போது இதுபற்றி பகிர்ந்துகொள்வேன் என்று பட்டும்படாமல் பதில் அளித்தார். சில தினங்களுக்கு முன் சென்டல்வூட் நடிகர் கோவிந்த் பத்மசூர்யாவுடன் பிரியாமணி நெருக்கமாக நின்று போஸ் கொடுத்த புகைப்படம் வெளியானது.

இதை தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்ட கோவிந்த், பிரியாமணியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம் அருமை. அடிக்கடி இதுபோல் இருவரும் புகைப்படம் எடுத்துக்கொள்வோம் என்று குறிப்பிட்டிருக்கிறார். இதையடுத்து பிரியாமணியின் இரகசிய காதலன் இவர்தானோ என்று திரையுலகில் பரபரப்பாக பேச்சு எழுந்துள்ளது.

தெலுங்கு செல்லும் மஞ்சப்பை

விமல், லட்சுமிமேனன் முதன் முறையாக ஜோடியாக நடித்த படம் மஞ்சப்பை. சமீபத்தில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே அமோக வரவேற்பை பெற்றது.

அதோடு நல்ல வசுலையும் ஈட்டி தந்தது. தாத்தா - பேரன் இடையிலான உறவை சித்திரித்த இந்தப் படத்தில் ராஜ்கிரண் தாத்தாவாகவும் அவருக்கு பேரனாக விமலும் நடித்திருந்தனர்.

இந்நிலையில் மஞ்சப்பை திரைப்படம் விரைவிலேயே தெலுங்கு மொழி பேசவிருக்கிறது. தெலுங்கில் இந்தப் படத்தை பிரபல இயக்குநர் தாசரி நாராயண ராவ் இயக்கவிருக்கிறார்.

தமிழில் விமல் நடித்த கதாபாத்திரத்தில் தெலுங்கு நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு நடிக்கலாம் என்று கூறப்படுகிறது.

அதேசமயம் ராஜ்கிரண் நடித்த கதாபாத்திரத்தில் இயக்குநர் தாசரி நாராயணராவே நடிக்கப் போகிறாராம். இவர் ஏற்கெனவே பல படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அமானுஷ்யங்களுடன் தயாராகும் ஜித்தன் - 2

தமிழ் திரையுலகில், வெற்றி பெற்ற திரைப்படங்களின் இரண்டாம் பாகம் வெளியாவது இப்போதெல்லாம் அடிக்கடி நடக்கும் விடயமாகிவிட்டது.

தயாரிப்பாளர் ஆர்.பி. சௌத்ரியின் மகன் ரமேஷ் நடித்த படம் ஜித்தன். அந்தப் படம் தந்த அறிணிகத்தால் அவர் பெயரே ஜித்தன் ரமேஷ் என்று ஆகிவிட்டது.
இப்போது மீண்டும் ஜித்தன் ரமேஷ் கதாநாயகனாக நடிக்க, ஜித்தன் 2 என்ற பெயரில் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.

மனித கற்பனைக்கு அப்பாற்பட்ட சில அமானுஷ்யங்களின் அடிப்படையில் நடக்கும் சம்பவங்களின் கோர்வையே ஜித்தன் 2. ராகுல் பரமஹம்சா என்ற புதிய இயக்குநர் இந்தப் படம் மூலம் அறிமுகமாகின்றார்.

சிறிகாந்த் தேவா இசையமைக்கின்றார். இந்த படத்தில் இரண்டு நாயகிகள். மும்பையின் பிரபல விளம்பர மொடல்களான இவர்களுக்கு தமிழில் இது முதல் படம் என்பது குறிப்பிடத்தக்கது.

You May Also Like

  Comments - 0

  • suresh Tuesday, 01 July 2014 02:29 PM

    என்ன சொன்னாலும் விஜய் தன் அடுத்த சுப்பர் ஸ்டார். இதில் எந்த மாற்றமும் இல்லை.

    Reply : 0       0

    aman Wednesday, 09 July 2014 09:31 AM

    அஜித் அடுத்த சூப்பர் ஸ்டார்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X