2025 மே 19, திங்கட்கிழமை

ஆன்ட்டியான அனுஷ்கா

Kanagaraj   / 2014 ஜூலை 14 , மு.ப. 03:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆன்ட்டியான அனுஷ்கா


நடுத்தர வயது நடிகைகளை அக்கா என்று கூப்பிட்டாலே வருத்தப்படுவார்கள். ஆனால் தன்னை ஆன்ட்டி என்று பாடசாலை மாணவர்கள் சிலர் அழைத்ததால் கடுப்பில் உள்ளாராம் அனுஷ்கா.

சமீபத்தில் ஹைதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் அனுஷ்கா நாயகியாக நடித்து வரும் ருத்ரம்மா தேவி படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றபோது அங்கு வந்த பாடசாலை மாணவர்களில் சிலர் அனுஷ்காவை ஆன்ட்டி என்று அழைத்தார்களாம்.

அதனால் அனுஷ்கா கோபப்பட்டு வருத்தமடைந்து விட்டதாகச் சொல்கிறார்கள். சிறுவர், சிறுமியர் தன்னை அக்கா என்று அழைக்க வேண்டுமென அனுஷ்கா நினைத்திருப்பார் போல. ஆனால் பாடசாலை மாணவர்கள் ஆன்ட்டி என்றுதானே அழைப்பார்கள் என படப்பிடிப்புக்கு வந்திருந்தவர்கள் கமெண்ட் அடித்திருக்கிறார்கள்.

காதல் வளர்க்கும் பாவனா

தமிழ் திரையுலகில் எதற்கு பஞ்சம் வந்தாலும் கிசு கிசுக்களுக்கு குறைவு ஏற்படுவதே இல்லை. கடந்த வாரம் திரிஷாவின் காதல் வெளிப்பட்டதை தொடர்ந்து நடிகை பாவனாவின் காதல் விவகாரம் சூடு பிடித்துள்ளது.

மலையாளத்தில் முன்னணி நடிகரான அனூப்மேனும்  பாவனாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் பரவி உள்ளன. இவரும் புது படமொன்றில் இணைந்து நடித்தனர். அப்போது இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாகவும் அடிக்கடி தனிமையில் சந்தித்து காதல் வளர்த்ததாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.

பாவனா தமிழில் சித்திரம் பேசுதடி படத்தில் நடித்து பிரபலமானார். தற்போது கன்னடத்தில் இரண்டு படங்களில் நடித்து வருகிறார். இந்த படங்கள் முடிந்ததும் திருமணம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனூப்மேனனிடம் இது குறித்து கேட்டபோது பாவனாவும் நானும் நண்பர் களாகத்தான் பழகுகிறோம் என்றார். ஆனால் மலையாள பட உலகினர் இருவரும் காதலிப்பது உறுதி என்கின்றனர்.

பாவனாவுக்கு தற்போது 28 வயது ஆகிறது. எனவே இந்த வருடத்திலேயே அவருக்கு திருமணத்தை முடிக்க பெற்றோர் தீவிரமாக உள்ளனர்.

தயாரிப்பாளராக தடம்பதிக்கும் ஏ.ஆர். ரகுமான்

திரைப்படம் தயாரிக்கும் எண்ணமெல்லாம் தனக்கு கிடையாது என்று கூறிவந்தவர் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். ஆனால் இவர் தற்போது முதல்முறையாக ஹிந்தி படம் ஒன்றை சொந்தமாக  தயாரிக்கவுள்ளாராம்.

இதுகுறித்து அவர் கூறுகையில்,

எங்களது முதல் தயாரிப்பு தொடங்குவதற்கான நேரம் கனிந்துள்ளது. ஹிந்தி படமாக இது உருவாக உள்ளது. அதை மேற்பார்வையிடுவேன். நான் இல்லாதசமயங்களில் தயாரிப்பு நிறுவனத்தை கவனித்துக்கொள்ள நல்ல குழு ஒன்று அமைத்துள்ளேன்.

தயாரிப்பு என்பது பெரிய பொறுப்பு. பொலிவுட் இசை அமைப்பாளர் விஷால் பரத்வாஜ் இசை அமைப்பாளராக இருந்தபோதும் படம் இயக்குவதிலும் வெற்றி கண்டிருக்கிறார். ஆனால் என்னை பொறுத்தவரை விஷால் போல் படம் இயக்கும் எண்ணம் இல்லை. இயக்குனர் பணிக்கு முழுநேரத்தை செலவிட வேண்டும். இப்போதைக்கு அந்தளவுக்கு நேரம் செலவிட என்னால் முடியாது.

எந்தவொரு படத்திலும் இசை முக்கிய பங்கு வகிக்கிறது. மணிரத்னம், டேனி பாயல் போன்றவர்களுடன் பணியாற்றும்போது பட உருவாக்கம் பற்றி நிறைய கேள்விகள் கேட்பேன். தயாரிப்பில் ஈடுபடுவதற்கு இதுபோன்ற செயல்பாடு எனக்கு உதவியாக இருந்தது என்று கூறினார்.

வடகறி படத்தை பார்த்து கொதித்தெழுந்த விஷால்

நடிகர் விஷால் நடிக்கும் புதிய திரைப்படமான பூஜை படத்தின் படபிடிப் காரைக்குடியில் நடைபெற்று வருகிறது. இதற்காக காரைக்குடியில் படப்பிடிப்புக் குழுவினர் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் வடகறி திரைப்படம் உள்ளுர் தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பப்பட்டதை பார்த்த விஷால் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.

அதில் கூறப்பட்டுள்ளதாவது,

நான் வெள்ளிக்கிழமை இரவு படப்பிடிப்பு முடிந்து தங்கியிருக்கும் அறைக்குச் சென்றேன். அப்போது சில உள்ளூர் கேபிள் தொலைக்காட்சிகளில் வடகறி, உன் சமையலறையில் ஆகிய புதிய திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட்டன. இதுபற்றி ஆதாரத்துடன் பொலிஸ் நிலையத்தில் புகார் அளித்தேன்.

திரைப்படத்தைத் தயாரிப்பதன் வலி எல்லோருக்கும் தெரியாது. தயாரிப்பாளர்களுக்குத்தான் அது தெரியும். வருமானம் ஈட்ட வேண்டும் என்றுதான் திரைப்படம் எடுக்கிறோம். அதனை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவது திருட்டு விசிடியைப் போன்றது.

திருட்டைவிட திருட்டு விசிடி தவறானது. காரைக்குடி மற்றும் அனைத்து ஊர்களிலும் இதுபோன்று அனுமதியில்லாத புதிய திரைப்படங்களின் திருட்டு விசிடியை உள்ளூர் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதை பொலிஸார் தடுத்து நிறுத்த வேண்டும் என்று விஷால் குறிப்பிட்டுள்ளார்.

தள்ளிபோகும் மெட்ராஸ்


பருத்திவீரன் புகழ் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள புதிய படம் மெட்ராஸ். இப்படத்தை அட்டக்கத்தி ரஞ்சித் இயக்கியுள்ளார். கேத்ரின் தெரசா கதாநாயகியாக நடித்துள்ளார். ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கின்றது.

இப்படத்தின் பாடல்கள் அண்மையில் வெளியாகியுள்ள நிலையில், படத்தை எதிர்வரும் 25 ஆம் திகதி வெளியிடுவதாக அறிவித்திருந்தனர். தற்போது, இந்த படத்தின்  வெளியீட்டு திகதியை ஒகஸ்ட் மாதத்துக்கு ஒத்தி வைத்துள்ளனர்.

எதிர்வரும் ஜூலை 18 ஆம் திகதி தனுஷின் வேலையில்லா பட்டதாரி படமும், கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ஜிகர்தண்டா, விஜய் ஆண்டனி நடிப்பில் உருவாகியுள்ள சலீம், சரபம் என பல படங்கள் ஜூலை 25 ஆம் திகதியும்; வெளியாகவுள்ளதால் படத்தை ஒத்திவைத்துள்ளதாக கூறப்படுகிறது.

வீரம் ஹிந்தி ரீமேக்கை தள்ளி வைத்த அஜித்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத்தின் நடிப்பில் வெளிவந்த வீரம் திரைப்படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, மீண்டும் சிவாவுடன் இணைந்து பணியாற்ற விரும்பிய அஜீத், அதற்கான கதையை தயார் செய்யும்படி கூறியிருந்தார்.

அதன்படி, கதையை தயார் செய்து அஜீத்திடம் காண்பித்து அதற்கு சம்மதம் வாங்கிவிட்டாராம் சிவா. தற்போது, கௌதம் மேனன் படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் அஜீத், அதன்பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்கிறார் என்பது உறுதியாகியுள்ளது. இப்படத்தை பிவிபி சினிமா தயாரிக்கிறது.

இந்நிலையில் வீரம் படத்தின் ஹிந்தி ரீமேக்குக்கான கதையை சிவா தயார் செய்துள்ளதுடன் அதில் நடிப்பதற்காக  நடிகர் சல்மான்கானை அணுகியுள்ளார். ஆனால், அவர் நடிப்பது இன்னும் உறுதியாகவில்லை இருந்தாலும், அஜீத்தின் அடுத்த படத்தை முடித்துவிட்டுத்தான், வீரம் இந்தி ரீமேக்கை சிவா தொடங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X