2025 மே 16, வெள்ளிக்கிழமை

BEEP SONG சர்ச்சை

George   / 2015 டிசெம்பர் 14 , மு.ப. 05:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடிகர் தனூஷுடன் இணைந்து கொல வெறி என்ற ஒற்றைப் பாடல் மூலம் ஓவர் நைட்டில் உலக புகழ்ப் பெற்ற இசையமைப்பாளர் அனிருத், நடிகர் சிம்புவுடன் இணைந்து உருவாக்கிய ஒற்றைப் பாடலால் இதுவரை சேர்த்து வைத்திருந்த தனது பெயரை நாசமாக்கி கொண்டுள்ளார்.

வழக்கமாகவே சர்ச்சையில் சிக்கிவரும் நடிகர் சிம்பு, கொல வெறி புகழ் இசையமைப்பாளர் அனிருத் ஆகியோர்தான் தமிழக மக்களிடம் கடந்த இரண்டு நாட்களாக பேச்சு பொருளாக மாறியுள்ளனர். அனிருத், சிம்பு  இருவரும் இணைந்து  உருவாக்கிய பாடல்தான் இதற்கு காரணம்.

சென்னை மக்கள் மழை வெள்ளத்தில் சிக்கி சின்னாபின்னமாகி கிடக்கும்போது, நடிகர், நடிகைகள் தங்கள் பொன்னான நேரத்தை மக்களோடு நின்று அவர்களுக்கு பணியாற்றுவதற்கு செலவிடும்போது கொஞ்சம்கூட சமூக பொறுப்பு இல்லாமல் பீப் சோங் என்ற தலைப்பில் ஒரு ஆபாச பாடல் இணைய தளங்களில் வெளியாகி இருக்கிறது.

இந்தப் பாடலை சிம்பு, எழுதி பாடியுள்ளார் என்றும், அனிருத் இசை அமைத்துள்ளார் என்றும் கூறப்படுகிறது. பாடல் முழுக்க ஆபாச வார்த்தைகள் இடம்பெற்றுள்ளன. அந்த இடத்தில் பீப் ஒலி போட்டிருந்தாலும் எல்லோரும் அந்த வார்த்தையை கணிக்க முடியும். இந்தப் பாடலை சிம்பும், அனிருத்தும் தனிப்பட்ட முறையில் வைத்திருந்ததாகவும் அதனை யாரோ வெளியிட்டு விட்டதாகவும் கூறப்படுகிறது. 

முதலில் வெளியிட்டு பார்ப்போம் மக்கள் என்ன சொல்கிறார்கள் என்று பார்த்து பிறகு வெளியிடுவோம் என்ற சிம்பு தரப்பே செய்திருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. ஆனால், இதுபற்றி கருத்து தெரிவித்துள்ள சிம்பு, 'நான் எந்த பாடலை பாடுவது என்பது என் தனிப்பட்ட சுதந்திரம். அதில் யாரும் தலையிட முடியாது. நான் பாத்ரூமில் பாடுவதையெல்லாம் யாரோ திருடி வெளியிட்டால் அதற்கு நானா பொறுப்பு?'  

அந்தப் பாடலை நான் அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை. இது எந்தத் திரைப்படத்திலும் அல்பத்திலும் இடம்பெறாத பாடல். நானும் அனிருத்தும் பலவகையான 150 பாடல்களைத் தயார் செய்துள்ளோம். அதிலிருந்து ஒன்றை திருடி வெளியிட்டுள்ளார்கள்' என்றார். 

'சிம்பு வீட்டு பாத்ரூம் கதவும், ஜன்னலும் திறந்தா கிடக்கின்றது' என்று கேட்கிறார்கள் ரசிகர்கள்.

இந்நிலையில், சிம்பு - அனிருத்துக்கு எதிராக மகளிர் அமைப்புகளிடையே கண்டனம் அதிகரித்து வருகின்றது. சமூக வலைதளங்களில் கடும் கண்டனங்களை இருவருக்கும் எதிராக பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில், கோவையில் மகளிர் அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த பாடலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து புகார் அளித்துள்ளனர். மேலும், சிம்பு- அனிருத்தின் புகைப்பட பதாதைகளை கிழித்தும், அவமதித்தும் தங்களது எதிர்ப்பை தெரிவித்தனர்.

அத்துடன், பெண்களை இழிவுபடுத்தும் விதமாக பாடியதாக நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கம் சார்பில் கோவை மாநகரக் காவல் ஆணையாளரிடம் மனுவொன்று சனிக்கிழமை கையளிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பாடலில் பெண்களை மிகவும் மோசமாக சித்திரித்துள்ளதாகவும்  அண்மைக் காலமாக பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள் அதிகரித்து வரும் வேளையில், இதுபோன்ற பாடல்கள் பெண்களுக்கு எதிரான வன்முறையை மேலும் அதிகரிக்கச் செய்யும் எனவும் இந்தப் பாடலை தடை செய்வதுடன் இருவர் மீதும் வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

திறமையால் புகழ் பெருவதைவிட  சர்ச்சையால் புகழ் பெறுவது இலகுவாக் இருக்கும் என்று நினைத்தாரோ என்னவோ, சிம்புவுக்குதான் வெளிச்சம்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .