2025 மே 07, புதன்கிழமை

இமைக்க மறுத்த ‘பாரதிராஜாவின் கண்கள்’

Editorial   / 2020 ஜூன் 14 , மு.ப. 09:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

பிரபல ஒளிப்பதிவாளர் கண்ணன் உடல் நலக்குறைவு காரணமாக நேற்று (13) காலமானார். இறக்கும் போது, அவருக்கு வயது 69.

தமிழ், தெலுங்கு, மலையாள மொழிகளில் 50 திரைப்படங்களுக்கும் மேலாக ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் கண்ணன். இவர் பாரதிராஜா இயக்கத்தில் வெளிவந்த 40 திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.

பாரதிராஜா இயக்கிய ‘நிழல்கள்’ திரைப்படம் தொடங்கி ‘பொம்மலாட்டம்’ வரையான திரைப்படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றிய கண்ணன் பாரதிராஜாவின் நெருங்கிய நண்பராகவும் இருந்தார்.

கண்ணனை ‘பாரதிராஜாவின் கண்கள்’ என்றே திரையுலகில் அழைத்து வந்தார்கள். பிரபல இயக்குநர் பீம்சிங்கின் மகனும், முன்னணி எடிட்டர் லெனினின் சகோதரருமான கண்ணன், உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில், 13 ஆம் திகதி பிற்பகல் 2 மணியளவில் உயிரிழந்தார்.

அவரது பிரிவால் வருந்தும் குடும்பத்தினருக்கும் நண்பனை இழந்து தவிக்கும் பாரதிராஜாவுக்கும் திரையுலக பிரபலங்கள் பலரும் ஆறுதல் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தனது நண்பனின் பிரிவு குறித்து இயக்குநர் பாரதிராஜா உருக்கமான இரங்கல் செய்தி ஒன்றை வீடியோ பதிவாக வெளியிட்டுள்ளார்.

அதில், “என் வாழ்வின் பெரும்பகுதியை என்னுடன் கழித்த, என் துணைவியாரை விடவும் அதிகமாக நான் நேசித்து வளர்ந்த பெரிய ஒளிப்பதிவு கலைஞர் கண்ணன்.

நான் படப்பிடிப்புக்கு என் கெமராவை எடுத்துச் செல்வதில்லை. என் கண்ணனை ‘இரண்டு கண்களைத்’ தான் எடுத்துச் செல்கிறேன். அவருக்குத்தான் ஆகாயத்தின் மறுபக்கத்தையும் பார்க்க தெரியும் என்று சொல்லியிருக்கிறேன்.

40 ஆண்டுகாலம் என்னுடன் இணைந்து பணியாற்றிய அவரது மறைவை இன்றளவும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை.

ஒரு அற்புதமான கலைஞனை நான் மட்டுமல்ல, இந்த கலை உலகமே இழந்துவிட்டது. உலகத் தமிழர்கள் அனைவரும் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்” என்று உருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X