2025 ஓகஸ்ட் 23, சனிக்கிழமை

கனவாய் போனது 'அப்பாவின் முத்தம்'

George   / 2016 ஓகஸ்ட் 14 , மு.ப. 10:36 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஒரு மகத்தான கவிஞனை மரணம் கொண்டே சென்றுவிட்டது. இறந்தவர்களை விட அந்த இறப்பினை காண்பவர்களுக்கே வலியும், வேதனையையும் மிஞ்சும் என்பதை உண்மையாக்கி சுற்றியிருப்பவர்களை கண்ணீரில் ஆழ்த்திவிட்டு மீளாத்துயிலுக்குச் சென்றுவிட்டார் கவிஞர் நா.முத்துக்குமார்.

'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்று மகள்களைக் கொண்டாடியவருக்கும் அண்மையில்தான் மகளொருத்தி பிறந்திருக்கிறாள். அவருடைய இறப்புக்கு காரணமாக சொல்லப்படுவது கவிதைகளுக்கும், வார்த்தைகளுக்கும் மதிப்பு கொடுத்த அளவுக்கு அவர் உடல்நிலைக்கு முக்கியத்துவம் கொடுக்கவில்லை என்பதுதான்.

கேட்டால் நொடியில் உடனடியாக ஒரு பாடலை கவிதை வரிக்களுக்குள் அடக்கி எழுதிக் கொடுத்துவிடுவார் முத்துக்குமார் என்று திரையுலகினரால் கொண்டாடுப்படுபவர். இரண்டு முறை தேசிய விருது பெற்ற கலைஞர். ஆனால்இ 41 வயதில் மரணமென்பது...மூளையால் வாழ்ந்தவர்களுக்கு, ஆயுள் அதிகமில்லை என்று பாரதிக்குப் பின் மீண்டும் பொட்டில் அறைந்து சென்றிருக்கின்றது.

நான்கு வயதிலிருந்து தந்தையால் வளர்க்கப்பட்டதாலோ என்னவோ குழந்தைகள் மீதான பாசம் அதிகம் அவருக்கு. அவருடைய பாடல்களிலும் சரி, கவிதைப் புத்தககங்களிலும் சரி தந்தைக்கும், மகன், மகளுக்குமான இடம் அதிகமாக ஆக்கிரமிக்கப்பட்டிருக்கும்.

தங்க மீன்கள் படத்தில் 'ஆனந்த யாழை மீட்டுகிறாய்' என்று பெண் குழந்தையின் அருகாமையையும், அகமகிழ்ச்சியையும் அப்பாவின் மனநிலையிலிருந்து பதிவு செய்திருந்ததற்காகவே தேசிய விருதினை அள்ளிச் சென்றவர் நா.முத்துக்குமார். இனி அவர் கனவில் மட்டுமே நம்மைச் சந்திக்க வருவார் அவருடைய மீதமிருக்கும் கவிதை நினைவுகளால் என்பதை ஏற்றுக் கொண்டே ஆக வேண்டும் நாம்.

குழந்தைகள் நிறைந்த உங்கள் வீட்டில் இனி நீங்கள் வெறும் புகைப்படமாக இருந்து மட்டுமே அவர்களைப் பார்த்துக் கொண்டிருப்பீர்கள். இன்னும் இன்னும் அழுகைக்கு நடுவே கோவம்தான் அதிகமாக வருகின்றது.
கவிதைகளின் காதலனாய் இருந்த உங்களைக் காமாலை கொண்டு சென்றுவிட்டது என்பதை நாங்கள்தான் எப்படித் தாண்டி வரப் போகிறோம்?

இனி உங்கள் மனைவிக்கும், இரண்டு குழந்தைகளுக்கும் யார் பொறுப்பு? சுற்றி எத்தனைக் கோடி பேர் இருந்தாலும், அப்பன் இருப்பதுபோல் ஆகுமா அந்த பிள்ளைகளுக்கு? எதனால் உடல் மேல் இந்த பாரமுகம்? நாளை உங்கள் மகள் 'அப்பாவின் முத்தம் வேண்டும்' என்று கேட்டால் நாங்கள் என்ன பதில் சொல்வோம் முத்துக்குமார்?

உங்கள் உடல் நிலையிலும் கவனம் வையுங்கள்

கவிதையாளர்களே....அப்பாக்களே....சினிமாக்காரர்களே....டிஜிட்டல் உலகில் பம்பரமாய் ஓடிக்கொண்டிருக்கும் உழைப்பாளர்களே...உங்களுடைய உலகில் வேலை முக்கியமாய் இருக்கலாம்...ஆனால், யாரோ ஒருவருக்கு உலகமே நீங்கள்தான். அவர்களை உங்கள் உயிராய் நினைத்தால்,  உங்கள் உடலையும், உயிரையும் நோய்க்கு இழக்க நீங்கள் தயாராக இருக்க மாட்டீர்கள்!

இனியேனும் முத்துக்குமார்கள் சாகாதிருக்கட்டும்....

(நன்றி: விகடன்)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X