2025 மே 16, வெள்ளிக்கிழமை

சல்மான் கான் விடுதலை

George   / 2015 டிசெம்பர் 10 , மு.ப. 10:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

மதுபோதையில் வாகனத்தை செலுத்தி ஒருவர் பலியாகவும் மற்றைய நான்கு பேர் காயமடையவும் காரணமாக இருந்தார் என்று தொடரப்பட்ட வழக்கிலிருந்து சல்மான் கான், இன்று வியாழக்கிழமை விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

சல்மான் மீதான குற்றச்சாட்டை போதிய சாட்சியங்களுடன் நிரூபிக்கத் தவறியதால் வழக்கிலிருந்து சல்மான் கானை விடுவிப்பதாக செய்து மும்பை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஏ.ஆர்.ஜோஷி, இன்று வியாழக்கிழமை வழங்கிய தீர்ப்பில், 'சல்மான் கானுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை அரசு தரப்பு நிரூபிக்கத் தவறிவிட்டது. வலுவான சந்தேகத்தின் அடிப்படையில் மட்டுமே ஒருவரை குற்றவாளி என அறிவித்துவிட முடியாது. சல்மான் கான் குற்றம் செய்ததற்கான உறுதியான ஆதாரம் ஏதும் சமர்ப்பிக்கப்படவில்லை. எனவே சல்மான் கானை வழக்கிலிருந்து நீதிமன்றம் விடுதலை செய்கிறது' என்று குறிப்பிட்டுள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் மும்பையின் மேற்குப்பகுதியிலுள்ள பாந்த்ராவின் அமெரிக்கன் வெதுப்பகத்தின் அருகே, வீதியோரம் உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது நடிகர் சல்மான் கானின் கார் மோதியது. இதில், நூருல்லா மெஹபூப் ஷெரீப் என்பவர் உயிரிழந்தார். மேலும் நான்கு பேர் படுகாயமடைந்தனர்.

இவ்வழக்கு, முதலில் மும்பை விசாரணை நீதிமன்றத்தில் நடந்தது. விபத்து ஏற்படுத்திய காரை சல்மான் கான் மதுபோதையில் ஓட்டி வந்ததாகவும், விபத்து நடந்தபோது சல்மான் கானுக்கு ஓட்டுநர் உரிமம் இல்லை எனவும் பொலிஸார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால், அந்த காரை தான் ஓட்டி வரவில்லை எனவும், தனது சாரதி அசோக் சிங்தான் ஓட்டினார் எனவும் சல்மான் கான் தரப்பில் வாதிடப்பட்டது.

இந்த வழக்கில் சல்மான் கானுக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து மும்பை விசாரணை நீதிமன்றம் கடந்த மே மாதம் தீர்ப்பளித்தது. விசாரணை நீதிமன்ற உத்தரவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் சல்மான் கான் வழக்கு தொடர்ந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .