2025 மே 16, வெள்ளிக்கிழமை

வெள்ளை ஒஸ்கார் நகைச்சுவை

George   / 2016 ஜனவரி 26 , மு.ப. 03:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இவ்வாண்டுக்கான ஒஸ்கார் விருது வழங்கல் நிகழ்வைத் தொகுத்தளிப்பதிலிருந்து விலகப் போவதில்லையென, அமெரிக்க நடிகரும் நகைச்சுவையாளருமான கிறிஸ் றொக் அறிவித்துள்ளார்.

எனினும், நிகழ்வுத் தொகுப்பின் ஆரம்பத்தில் அவர் வழங்கவுள்ள ஓரங்க நகைச்சுவையை, மீண்டும் எழுதிவருவதாக அவர் தெரிவித்துள்ளார். இதனால், அது தொடர்பில் அதிகமான எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

2016ஆண்டு ஒஸ்கார் விருதுக்கான தெரிவுப்பட்டியலில், வெள்ளையர்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்படுவதாகவும் வெள்ளையர்கள் அல்லாதோர், குறிப்பாக கறுப்பினத்தவர்கள் ஒதுக்கப்படுவதாகவும் சர்ச்சை எழுந்திருந்தது.

இவ்வாண்டுக்கான சிறந்த நடிகர், நடிகையருக்கான தெரிவுகளில், 20பேருமே வெள்ளையர்களாக அமைந்ததோடு, தொடர்ச்சியாக இரண்டாவது வருடமாக இது இடம்பெற்றதைத் தொடர்ந்தே, அதிக எதிர்ப்பு எழுந்திருந்தது. குறிப்பாக, இவ்விருதுக்கான தெரிவுப்பட்டியலில் தெரிவுசெய்யப்படக்கூடிய திறமைகளை வில் ஸ்மித் உட்பட பலர் வெளிக்காட்டியிருந்ததாகவும் விமர்சகர்கள் தெரிவித்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பிரபலங்கள் பலர், தங்களது கருத்துகளை வெளியிட்டுள்ளதுடன் ஒஸ்கார் விருது நிகழ்வைப் புறக்கணிக்கப் போவதாகவும் அறிவித்தனர். அத்தோடு, 'ஒஸ்கார் மிகவும் வெள்ளையானது' என்ற அர்த்தப்பட, #OscarIsSoWhite  என்ற ஹேஷ்டக்கில், சமூக வலைத் தளங்களில், நகைச்சுவைகளும் பகிரப்பட்டன.

இதனால், கறுப்பினத்தவரான கிறிஸ் றொக், இந்நிகழ்வைத் தொகுத்தளிப்பதிலிருந்து விலக வேண்டுமென, அழுத்தங்கள் கொடுக்கப்பட்டன.

இந்நிலையிலேயே, அதிலிருந்து விலகப் போவதில்லையெனவும் மாறாக, தனது அறிமுக ஓரங்கப் பேச்சைத் திரும்ப எழுதி வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார். இதில், ஒஸ்காரில், வெள்ளையர்களுக்கு எவ்வாறு அதிக முக்கியத்துவம் காணப்படுகிறது என்பதை, அவர் சுட்டிக்காட்டுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவ்வாறான அர்த்தப்படுத்தல்களுடன் கூடிய உரையாடல்களை, ஒஸ்காரின் தயாரிப்பாளர்களும் எதிர்பார்த்துள்ளனர். ஒஸ்காரின் தயாரிப்பாளரான றெஜினோல்ட் ஹட்லின், 'நகைச்சுவைகளை நீங்கள் எதிர்பார்க்கலாம். அத்தோடு, அதை அவர் செய்வதற்கு, அக்கடமி (ஒஸ்கார் விருது வழங்கும் அமைப்பு) தயாராக இருக்கிறது. அதை அவர் செய்வது குறித்து, அவ்வமைப்பு எதிர்பார்ப்புடன் காணப்படுகிறது' எனத் தெரிவித்துள்ளார்.

ஒஸ்கார் விருதுக்கு வாக்களிப்போரில், ஏறத்தாழ 93 சதவீதமானோர் வெள்ளையர்கள் எனவும் 76 சதவீதமானோர் ஆண்களெனவும் தரவுகள் தெரிவிப்பதோடு, கறுப்பினத்தவர்களின் புறக்கணிப்புக்கு, பல்வகைமையல்லாத இந்த நிலையே காரணமெனவும் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .