2024 ஏப்ரல் 26, வெள்ளிக்கிழமை

யுத்தத்தின் பின் மீட்ட சொத்துக்கள், தங்க நகைகள் தொடர்பில் ஆராய தீர்மானம்

Kanagaraj   / 2015 ஜனவரி 20 , பி.ப. 01:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

யுத்த காலத்தின் பின்னர் வடக்கிலிருந்து மீட்கப்பட்ட வாகனங்கள், சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு, நேற்று செவ்வாய்க்கிழமை முற்பகல் கூடிய தேசிய நிறைவேற்றுப் பேரவையின் கூட்டத்தில் போது தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. 


இதேவேளை, நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறும் தரப்புக்கு அந்த வெற்றியை விட்டுக்கொடுக்காமல் இருப்பதற்காக தேர்தலன்று இரவு (08) அலரி மாளிகையில் முன்னெடுக்கப்பட்டதாகக் கூறப்படும் சதித்திட்டம் தொடர்பில் ஆராய்ந்து ஒரு வாரத்தில் அதற்கான அறிக்கை சமர்ப்பிப்பது தொடர்பிலும் தீர்மானம் எட்டப்பட்டதாக பேரவைக் கூட்டத்தில் கலந்துகொண்ட மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 


ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின், தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளடக்கப்பட்டிருந்த தேசிய நிறைவேற்றுப் பேரவை, கடந்த வாரம் உருவாக்கப்பட்டது. இதில், ஜனாதிபதி, பிரதமர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க, ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் பாட்டலி சம்பிக்க ரணவக்க, ஜனநாயகக் கட்சியின் தலைவர் சரத் பொன்சேகா, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் ஆகியோர் அங்கம் வகிக்கின்றனர். 


இந்த தேசிய நிறைவேற்றுப் பேரவையின் இரண்டாவது அமர்வு நேற்று முற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. அங்கு கலந்துரையாடப்பட்ட விடயங்கள் தொடர்பில் கேட்டபோதே அநுர குமார திசாநாயக்க மேற்கண்வாறு கூறினார். 
இது குறித்து மேலும் கூறிய அவர், 'அலரி மாளிகை சதி தொடர்பில் கொழும்பிலுள்ள குற்றபுலனாய்வு திணைக்களத்தில் முறைப்பாடொன்று செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான கூற்றுக்களைப் பெற்று ஒரு வாரத்துக்குள் அறிக்கையொன்றை சமர்ப்பிப்பது தொடர்பிலும் இதன் விசாரணைக்காக சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் ஒருவரை நியமிப்பது தொடர்பிலும் தீர்மானம் எட்டப்பட்டதாக' கூறினார். 


அத்துடன், முன்மொழியப்பட்ட திருத்தச் சட்டம் குறித்தும் இந்த பேரவைக் கூட்டத்தின்போது வெகுநேரம் கலந்துரையாடியதாக கூறிய திசாநாயக்க, கடந்த காலங்களில் இடம்பெற்ற ஆட்கடத்தல்கள், கொலைகள் மற்றும் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளை நடத்தி, குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துவதான வேலைத்திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்த இணங்கப்பாடு ஏற்படுத்தப்பட்டதாகவும் கூறினார்.

 
இதேவேளை, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளரை நீக்கி, புதிய பணிப்பாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பான இணக்கப்பாடும் எட்டப்பட்டதாக கூறிய அநுர குமார, யுத்த காலத்தின் பின்னர் வடக்கிலிருந்து மீட்கப்பட்ட வாகனங்கள், சொத்துக்கள் மற்றும் தங்க நகைகளுக்கு என்ன நடந்தது என்பது தொடர்பில் ஆராய்வதற்கு தீர்மானிக்கப்பட்டதாக மேலும் கூறினார். 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .