2024 ஏப்ரல் 18, வியாழக்கிழமை

நல்லாட்சி என்ற பெயரில் தமிழருக்கு எதிராக காய்நகர்த்தல்

Suganthini Ratnam   / 2015 மார்ச் 24 , மு.ப. 03:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

–வடிவேல் சக்திவேல்    

'இந்த அரசாங்கம் நல்லாட்சி என்ற பதத்தை வைத்துக்கொண்டு எமது மக்களுக்கு எதிரான காய்நகர்த்தல்களை முன்னெடுக்கின்றதா என்ற சந்தேகம் எமக்கு எழுந்துள்ளது. இந்த அரசாங்கத்தின் ஒவ்வொரு நடவடிக்கையையும் நாங்கள் உன்னிப்பாக அவதானித்துவருகின்றோம்' இவ்வாறு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் ஞா.கிருஷ்ணபிள்ளை தெரிவித்தார்.

பட்டிருப்புத்தொகுதியின் அபிவிருத்தி தொடர்பான கலந்துரையாடல், களுவாஞ்சிக்குடியிலுள்ள அவரது இல்லத்தில் திங்கட்கிழமை (23) நடைபெற்றது. இதன்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து தெரிவித்த அவர்,   

'இந்த நாட்டின் ஆட்சி மாற்றமானது  தமிழ் மக்களுக்கு சாதகமான நிலையை  தோற்றுவிக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கவில்லை. மாறாக, முன்பிருந்த அராஜக ஆட்சியை மாற்றி அமைக்கவேண்டும் என்பதையே நாங்கள் எதிர்பார்த்தோம்.   

ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்திய தமிழ் மக்களாகிய எமக்கு,  இந்த அரசாங்கம் பல கைங்காரியங்களை செய்யவேண்டியுள்ளது என்று   உணரவேண்டும். உணர்ந்து செயற்படுவதன் ஊடாக இந்த அரசாட்சியை நல்லாட்சியாக  நாங்கள் ஏற்கமுடியும். அவ்வாறு செயற்படாத பட்சத்தில்,  இந்த அரசாங்கம் கூறும் நல்லாட்சி என்ற பதத்துக்கு  அர்த்தம் இல்லாமல் போய்விடும் என்பதை  இந்த அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

அதை விடுத்து, நல்லாட்சி என்ற பெயரை வைத்துக்கொண்டு தமிழருக்கு நாங்கள் நல்லதை செய்யப்போகின்றோம் என்று கூறி எம்மையும் எமது பிரச்சினைக்குரிய தீர்வின்பால் முன்னெடுத்துச்செல்லும் சர்வதேசத்தின் முயற்சிகளை சீர்குலைக்கவோ அல்லது மட்டுப்படுத்துவதற்கோ இந்த அரசாங்கம் எள்ளளவும் நினைக்கக்கூடாது.

அத்துடன், இந்த நாட்டில் அனைத்து இன மக்களும் சம அந்தஸ்துடன்  வாழவேண்டும். மாறாக, இனத்துக்கிடையில் ஒரு நாட்டுக்குள் பிரச்சினையை தூண்டுபவர்களாக  தலைவர்கள் இருக்கக்கூடாது. இவ்வாறான வேலைகளினால் எமது நாட்டு மக்களும் நாடுமே  பாதிக்கப்படும் என்பதையும் அனைவரும் புரிந்துகொள்ள வேண்டும்.

இந்த நாட்டினுள் எமது இனமும் சம அந்தஸ்துடன் வாழக்கூடிய தீர்வை தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து தங்களது காலத்தில் பெற்றுத்தருவதன் மூலம் வரலாற்றில் தடம்பதித்த தலைவராக திகழ்வார்கள்' என்றார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .