2021 செப்டெம்பர் 18, சனிக்கிழமை

டிரம்ப் விதித்த தடைகளால் பன்றி வளர்ப்பில் கவனம் செலுத்தும் செல்பேசி நிறுவனம்

Princiya Dixci   / 2021 மார்ச் 03 , பி.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க அரசு விதித்த தடைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக சீனாவைச் சேர்ந்த செல்பேசி தயாரிப்பு நிறுவனமான ஹுவாவே தற்போது பன்றி வளர்த்தல் தொடர்பான தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது.

செல்பேசி உற்பத்தியில் பெரும் பின்னடைவை சந்தித்துள்ள ஹுவாவே, பன்றிப் பண்ணைகளில் பயன்படும் தொழில்நுட்பங்களை மேம்படுத்தத் தொடங்கியுள்ளது.

டொனால் டிரம்ப் தொடங்கிய சிக்கல்

ஹுவாவே நிறுவனத்தின் தயாரிப்புகள் அமெரிக்காவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானவை என்று கூறிய அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், அவரது ஆட்சிக்காலத்தில் அந்த நிறுவனத்தின் மீது பல்வேறு பொருளாதாரத் தடைகளை விதித்தார்.

இதை ஹுவாவே நிறுவனம் தொடர்ந்து மறுத்து வந்தாலும் அந்த நிறுவனம் அமெரிக்க வாடிக்கையாளர்களின் தரவுகளை சீன அரசுடன் பகிர்ந்து கொள்கிறது என்றும் குற்றம் சாட்டி இருந்தார் டிரம்ப்.

டிரம்ப் ஆட்சி காலத்தில் விதிக்கப்பட்ட தடைகள் காரணமாக 5ஜி செல்பேசிகள் தயாரிப்பதற்கு தேவையான கருவிகளை ஹுவாவே நிறுவனத்தால் அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்ய முடியவில்லை.

இதன் காரணமாக தற்போது உலகிலேயே மிகப்பெரிய செல்பேசி உற்பத்தி நிறுவனமாக விளங்கும் ஹுவாவே நிறுவனம், 4ஜி வகை செல்பேசிகள் மட்டுமே தயாரிக்கக்கூடிய நிலைக்கு தள்ளப்பட்டது.

அமெரிக்க அரசு விதித்த தடைகள் காரணமாக குறைந்த அளவிலான மைக்ரோசிப்களையே ஹுவாவே நிறுவனம் பெறமுடிந்தது.

இதன் காரணமாக 2020ஆம் ஆண்டின் கடைசி காலாண்டில் இந்நிறுவனத்தின் விற்பனை 42 சதவிகிதம் அளவுக்கு சரிந்தது.

தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களைக் கூறி பிரிட்டன் போன்ற பல நாடுகள் ஹுவாவே நிறுவனத்தின் சேவையை தங்கள் நாடுகளில் இருந்து தடை செய்தனர்.

இதன் காரணமாக இந்த ஆண்டு ஹுவாவே நிறுவனம் திறன்பேசி உற்பத்தியை 60 சதவிகிதம் அளவுக்கு குறைக்கப் போவதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் வெளியாகியுள்ளன.

இத்தகைய சூழலிலேயே தங்களது தொழிலுக்கான மாற்றாக சீனாவிலுள்ள பன்றி வளர்ப்புத் துறையில் தனது தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் முயற்சிகளில் ஹுவாவே நிறுவனம் ஈடுபட்டுள்ளது.

சீனாவின் இறைச்சி பன்றி பண்ணைகள்

உலகிலேயே மிகப்பெரிய பன்றி வளர்ப்பு துறையை கொண்டுள்ள நாடாக சீனா உள்ளது. உலகில் இறைச்சிக்காக வளர்க்கப்படும் ஆண் பன்றிகளில் சுமார் பாதி அளவு பன்றிகள் சீனாவில் உள்ளன.

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் பன்றிகளுக்கு ஏற்பட்டுள்ள நோய்களை கண்டறிவது அவற்றின் நடமாட்டத்தை கண்காணிப்பது உள்ளிட்டவற்றின் பக்கம் நவீனமயமாக்கப்படும் பன்றி பண்ணைகள் கவனம் செலுத்தி வருகின்றன.

மனிதர்களுக்கு முகமறிதல் (Facial recognition) தொழில்நுட்பம் இருப்பதைப் போலவே பன்றிகளுக்கும் முகமறிதல் தொழில்நுட்பம் உள்ளது. இவற்றின் மூலமாக தனித்தனி பன்றிகளை அடையாளம் காணமுடியும்.

பன்றிகளின் எடை, உணவு, அவற்றின் உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை கண்காணிக்கவும் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

சீனாவைச் சேர்ந்த மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களான ஜேடி.காம், அலிபாபா உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்கனவே பன்றிப் பண்ணைகளில் புதிய தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.

இந்தச் சூழலில் தற்போது பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டுள்ள ஹுவாவே நிறுவனமும் களத்தில் இறங்கியுள்ளது.

நன்றி - பிபிசி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .