Editorial / 2023 மே 07 , மு.ப. 10:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

வி.ரி.சகாதேவராஜா
இந்துக்களின் பாரம்பரிய கதிர்காமத்துக்கான பாதயாத்திரை வழமைபோல இம்முறையும் யாழ்ப்பாணம் செல்வச்சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து ஜெயாவேல்சாமி தலைமையில் 06ஆம் திகதி சனிக்கிழமை விசேட பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.
காலை 7.30 மணியளவில் செல்வச் சந்நிதி முருகன் ஆலயத்திலிருந்து விசேட பூஜையுடன் அரோஹரா கோஷம் விண்ணைப் பிளக்க ஆரம்பமானது.
யாத்திரீகர்களின் உறவினர்களும் வந்து ஆரத் தழுவி கண்ணீர் மல்க வழியனுப்பி வைத்தனர். பாதயாத்திரை தொடர்பான பதாகைகள் யாழ்ப்பாணம் செல்வச் சந்நிதி முருகன் ஆலய வளாகத்தில் கட்டப்பட்டிருந்தன.
கதிர்காமத்தில் கன்னிக்கால் நட்ட தினத்தன்றே இப் பாதயாத்திரை ஆரம்பமாகிறது.
வடக்கு கிழக்கு ஊவா ஆகிய 3 மாகாணங்களையும் யாழ்ப்பாணம் கிளிநொச்சி, முல்லைத்தீவு, திருகோணமலை, மட்டக்களப்பு அம்பாறை மற்றும் மொனராகல ஆகிய 7 மாவட்டங்களையும் இணைத்து 55 நாட்களில் 98ஆலயங்களைத்தரிசித்து 815 கிலோ மீற்றர் தூரத்தை நடந்துகடக்கும் இப் புனித பாதயாத்திரை இலங்கையின் மிகமிகநீண்ட தூர கதிர்காம பாதயாத்திரையாக கருதப்படுகின்றது.
ஆனால் இம்முறை கதிர்காமம் ஆடிவேல்விழா உற்சவ காலம் ஒருமாத காலம் முன்கூட்டியே அறிவித்ததால் பாதயாத்திரை காலத்தை 43 நாட்களாக சுருக்க வேண்டி நேரிட்டது.
கடந்த 23வருடங்களாக சைவமரபு பாரம்பரியத்துடன் இடம்பெற்றுவரும் இப் பாதயாத்திரை கதிர்காமக்கந்தனாலய கொடியேற்றத்தினத்தில் கதிர்காமத்தைச் சென்றடைவது வழமையாகும்.
சந்நதியில் நேற்று 06ஆம் திகதி காலை நடைபெற்ற விசேடபூஜையினைத் தொடர்ந்து மோகன்சுவாமியால் வேலாயுதமானது கதிர்காம பாதயாத்திரைக்குழுத்தலைவர் ஜெயாவேல்சாமியிடம் சம்பிரதாயபூர்வமாக ஒப்படைக்கப்பட்டது.

தொடர்ந்து பாதயாத்திரை வற்றாப்பளை கண்ணகை அம்மனாலயத்தை அடைந்து பின்னர் அங்கிருந்து ஜெயாவேல்சாமிஅணியில் வழமையாக பயணிக்கும் நூறுபக்தர்களுடன் மீண்டும் பாதயாத்திரை இடம்பெறும்.
பாதயாத்திரைக்கான சகல அனுமதிகளும் வழமைபோல பெறப்பட்டிருப்பதாக பாதயாத்திரைக்குழுத்தலைவர் ஜெயாவேல்சாமி தெரிவித்தார்.

கதிர்காம ஆடிவேல்விழா உற்சவம்
இதேவேளை கதிர்காம ஆடிவேல்விழா உற்சவத்திற்கான கன்னிக்கால் அல்லது பந்தல் கால் நடும் வைபவம் நேற்று மே 6ஆம் திகதி நடைபெற்றது.
எனவே, ஜூன் 19ஆம் திகதி கொடியேற்றம் இடம்பெற்று ஜூலை 4ஆம் திகதி எசலபெரஹராவுடனான தீர்த்தோற்சவம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

பாதயாத்திரை
1972ஆம்ஆண்டில் அமெரிக்க முருகபக்தர் பற்றிக்ஹரிகன் கதிர்காம பாதயாத்திரையை ஒழுங்கமைக்கப்பட்ட குழுவடிவில் ஆரம்பித்தார். அதன்தொடர்ச்சியாக 1978இல் அவர் ஓய்வுபெற்றதும் அவர்தாங்கிவந்த வேலை காரைதீவைச்சேர்ந்த வேல்சாமி மகேஸ்வரனிடம் ஒப்படைத்தார்.
அன்றிலிருந்து 21வருடங்களாக வேல்சாமி தலைமையில் பாதயாத்திரை நடைபெற்றுவந்தது.கடந்த இரண்டு வருடங்களாக ஜெயாவேல்சாமி இப்பணியில் ஈடுபட்டு வருகிறார்.
ஆரம்பத்தில் வெருகலிலிருந்து இது இடம்பெற்றது. எனினும் நாட்டின் அமைதிநிலவியபிற்பாடு 2012முதல் சந்நிதியிலிருந்து இப்பாதயாத்திரை ஆரம்பமானது குறிப்பிடத்தக்கது.

17 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
17 minute ago
40 minute ago
1 hours ago
1 hours ago