2021 செப்டெம்பர் 22, புதன்கிழமை

ஆசை நாயகனுடன் மனைவியை கோர்த்து வித்தியாசமான சீதனம் கொடுத்த கணவன்

Princiya Dixci   / 2017 மே 03 , பி.ப. 11:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம். செல்வராஜா

23 வயதான தன்னுடைய மனைவி, அவருடைய ஆசை நாயகனுடன், கட்டிலில் இருப்பதைக் கண்ட கணவன், அவ்விருவரையும் கையும் மெய்யுமாகப் பிடித்து, இருவரினதும் கரங்களையும் பற்றிப் பிடித்து ஒன்றாகச் சேர்த்து வைத்ததன் பின்னர், வித்தியாசமான சீதனத்தைக் கொடுத்து, அவ்வீட்டிலிருந்து கண்ணீருடன் விடைபெற்றுச் சென்ற சம்பவமொன்று, மஹியங்கனையில் இடம்பெற்றுள்ளது. 

கடந்த 2ஆம் திகதியன்று இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,  

காலிப் பகுதியிலிருந்து, மஹியங்கனைக்குத் தொழிலுக்காக சென்றிருந்த இளைஞன், அங்குள்ள யுவதியை, கடந்த எட்டு வருடங்களுக்கு முன்னர். திருமணம் முடித்துள்ளார். அவ்விருவரும் சிறிய வீடொன்றிலேயே குடித்தனம் நடத்தியுள்ளனர்.  

இருவருக்கும், ஐந்து மற்றும் மூன்று வயதுகளுடைய பெண் பிள்ளைகள் உள்ளனர். குடும்பத்தைக் காப்பாற்றுவதற்காக, 26 வயதான குடும்பத்தலைவன், இரண்டொரு வருடத்துக்கு முன்னர் மத்தியக்கிழக்கு நாடொன்றுக்குத் தொழிலுக்குச் சென்றுவிட்டார்.  

அக்காலப்பகுதியிலேயே, பிறிதொரு ஆடவருக்கும் அப்பெண்ணுக்கும் இடையில் தொடர்பு ஏற்பட்டுள்ளது. அந்த ஆடவன், திருமணம் முடித்து, குழந்தையொன்றுக்குத் தந்தையாவர் என்று அறியமுடிகின்றது. 

காலப்போக்கில், குறித்த பெண்ணின் வீட்டில் அவர், இரவு வேளைகளில் தங்கியும் சென்றுள்ளார். இதனை அவதானித்தவர்கள், மத்திய கிழக்குக்குச் சென்றிருந்த, பெண்ணின் கணவனுக்கு அலைபேசியின் ஊடாக தகவல் கொடுத்துள்ளனர்.  

இந்த விவகாரம் தொடர்பில், மனைவியிடம் அலைபேசியூடாக, கணவன் வினவியுள்ளார். மனைவியோ, சத்தியம் செய்து நீங்கள் கூறுவதெல்லாம் பொய்யென மறுத்துவிட்டார். 

சம்பவம் இடம்பெற்று இரண்டொரு மாதங்களுக்குப் பின்னர், வெளிநாட்டிலிருந்து தனது நண்பர்களுக்கு அலைபேசி அழைப்பை எடுத்த, குறித்த நபர், தன்னுடைய தாய் இறந்துவிட்டதாக, தான் வேலைசெய்யும் நிறுவனத்துக்கு அறிவிக்குமாறு தகவல் கொடுத்துள்ளார். அதன்படியே அவருடைய நண்பர்களும் செய்துள்ளனர்.  

யாருக்கும் தெரியாமல், மஹியங்கனைக்கு வந்த அவர், தன்னுடைய நண்பர்களுடன் இணைந்து, இரவோடு இரவாக வீட்டை நோட்டமிட்டுள்ளார். 

நண்பர்கள், ஏற்கெனவே கூறியதுபோல, மனைவியின் ஆசைநாயகன், கடந்த 2ஆம் திகதியன்று இரவுவேளையில், வீட்டுக்குள் நுழைந்துள்ளார். நுழைந்தவுன் கதவும் மூடப்பட்டது. வீட்டுக்குள்ளிருந்து வெளியான வெளிச்சமும் குறைந்துள்ளது. 

விரைந்து செயற்பட்ட கணவன், தன்னுடைய நண்பனை அனுப்பி, வீட்டின் கதவைத் தட்டியுள்ளார். ஓடோடிவந்த மனைவி, கதவைத் திறந்துள்ளார். சற்றும் எதிர்பாராத விதமாக, கணவன் வீட்டுக்குள் புகுந்துவிட்டார். அங்கு, மனைவியின் ஆசைநாயகன் கட்டிலில் படுத்திருந்துள்ளார். பிள்ளைகள் இருவரும், கீழே ஆழ்ந்த நித்திரையில் இருந்துள்ளனர்.  

மனைவியின், ஆசைநாயகனைக் கண்டு அதிர்ச்சியுற்ற கணவன், அவருக்கு அருகில் சென்று, எவ்விதமான ஆர்ப்பாட்டங்களும் இன்றி, கூப்பிட்டுள்ளார். பயந்துபோயிருந்த நாயகனோ, தொண்டைக்குழிக்குள் எச்சிலை விழுங்க முடியாமல், பயந்து பயந்து அருகில் வந்துள்ளார்.  

ஆசைநாயகன் அருகில்வந்து, கால்களில் விழுந்து மன்னிப்புக் கேட்டுள்ளார். எனினும், அன்போடு கூப்பிட்ட கணவன், “தம்பி எழும்பு. உன்னை அடிக்கவோ, எச்சரிக்கவோ மாட்டேன். பயப்பிடவேண்டாம்” எனக் கோரியுள்ளார். 

மனைவியோ, ஒரு மூலையில் நின்றுகொண்டிருந்துள்ளார். அவ்விருவரையும் அருகருகே அழைத்து, இருவரின் கரங்களையும் பற்றிப்பிடித்து, சேர்ந்து வாழுமாறு சேர்த்து வைத்துள்ளார். தான் கொண்டுவந்திருந்த உடைகள், பொருட்கள் அடங்கிய பொதியை பரிசாக வழங்கியுள்ளார்.  

அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்த பிள்ளைகள் இருவரையும் உச்சி முகர்ந்த அவர், அவ்விருவரையும் உங்களுக்குச் சீதனமாக கொடுப்பதாகவும், கவனமாக பார்த்துக்கொள்ளுமாறும் கூறிவிட்டு, கண்ணீருடன் வீட்டைவிட்டு வெளியேறியுள்ளார்.  

இதனையடுத்து, இந்தச் சம்பவம் தொடர்பில் அவர், பொலிஸில் முறைப்பாடொன்றையும் செய்துள்ளார்.  


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .