Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 21, புதன்கிழமை
Suganthini Ratnam / 2016 மார்ச் 31 , மு.ப. 05:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரீ.கே.றஹ்மத்துல்லா,கனகராசா சரவணன்
'இந்த அரசாங்கம் கூறிய வாக்குறுதிகளை நிறைவேற்றுமென்று நம்பி தொடர்ச்சியான அழுத்தங்களைக் கொடுத்து வருகின்றோம். நாங்கள் அந்த நம்பிக்கையை இழந்து விடவில்லை. கொடுக்கின்ற அழுத்தத்தின் காரணமாக இந்த அரசாங்கத்தையும் வீழ்த்தி மீண்டும் நாங்கள் ஒரு பயங்கரமான சூழ்நிலைக்கு திரும்பிவிடாமல் இந்த நகர்த்தல்களை செய்து வருகின்றோம்' என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமேந்திரன் தெரிவித்தார்.
காணாமல் போனோர் குடும்ப ஒன்றியம் ஏற்பாடு செய்த மாபெரும் மக்கள் பேரணியும் விசேட கூட்டமும் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் புதன்கிழமை (30) மாலை நடைபெற்றது. இங்கு உரையாற்றியபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், 'கற்றுக்கொண்ட பாடம் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் குற்றம் தெரிவிக்கப்பட்டுள்ளவர்கள் இன்றும் சுதந்திரமாக உள்ளனர். இவர்கள் விசாரணைக்குட்படுத்தப்பட்டு அவர்கள் குற்றம் செய்திருப்பின், தண்டிக்கப்பட வேண்டுமென இந்த ஆட்சி மாற்றம் நடந்ததிலிருந்து அழுத்தம் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம்' என்றார்.
'மேலும் காணாமல் ஆக்கப்பட்டோர் ஒவ்வொருவருக்கும் உண்மையில் என்ன நடந்தது என்பதைக் கண்டறிந்து அவர்களின் உறவுகளுக்கு கூறவேண்டிய ஒரு பாரிய கடப்பாடு இந்த அரசாங்கத்துக்கு இருக்கின்றது.
நாங்கள் அரசாங்கத்தில் இணையவில்லை. அதற்கான காரணத்தை பகிரங்கமாக கூறிக்கொள்ள விரும்புகின்றேன். நாட்டில் இருக்கின்ற சூழ்நிலையை மாற்ற வேண்டும். மிகக்கொடுமையான ஆட்சியொன்றின் கீழ் நாம் ஒருபோதும் முன்னேற முடியாது என்ற காரணத்தினாலேயே ஆட்சி மாற்றத்துக்;கு முழுமையான ஆதரவை வழங்கினோம்.
ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னர் ஆட்சியில் இணைந்துகொள்ளுமாறு பல தடவைகள் எங்களுக்கு அழைப்புகள் வந்தபோதும், நாங்கள் அந்த ஆட்சியில் இணைந்துகொள்ளவில்லை. நாங்கள் இணைந்துகொள்ளாமைக்கு முக்கிய காரணம் காணாமல் போனவர்கள் உள்ளிட்ட தமிழர்களின் முக்கிய பிரச்சினைகள் இன்றைக்கும் நீண்டு கொண்டிருக்கின்றன. அவ்வாறான முக்கிய பிரச்சினைகள் தீரும் வரையில் நாங்கள் எந்த அரசாங்கத்தினதும் பங்காளியாக இருக்க முடியாது என்ற காரணத்தினால் அரசாங்கத்துக்கு வெளியே இருந்து அழுத்தங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றோம். வெளியிலிருந்து கொண்டு நாங்கள் அழுத்தம் கொடுத்தபோதிலும், இந்த அரசாங்கத்தை வெறுக்கவில்லை. நாங்களும் இணைந்தே இந்த அரசாங்கத்தை ஆட்சிக்கு கொண்டு வந்தோம்.
இந்த அரசாங்கத்தின் ஊடாக நாங்கள் எதிர்பார்க்கின்ற நீதி, நியாயம் எங்களுடைய மக்களுக்கு கிட்ட வேண்டும் என்பதற்காகவே கொண்டு வந்தோம். அதற்காகவே எங்களுடைய ஆதரவை வழங்கி வருகின்றோம்.
ஆட்சி மாற்றம் நடந்துள்ளது. இதனால் ஜனாதிபதி, பிரதமர், அமைச்சரவை மாறியுள்ளனரே தவிர ஏனைய அதிகாரிகள், பொலிஸார், இரானுவத்தினர் மாற்றமடையவில்லை. அவர்களே இந்த நாட்டிலுள்ளனர். எனவே, அந்த பாதுகாப்புத் தரப்பு சீர்திருத்தம் என்பது ஒரு நாளிலே அல்லது ஒரு வருடத்திலே கூட செய்து முடிக்க முடியாத ஒரு விடயமாகும். அதனாலேதான் நாங்கள் இன்னும் கொஞ்சம் பொறுமை காக்க வேண்டும்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதியாக இந்த நிகழ்வுக்கு சமூகமளித்தவன் என்ற வகையில் நான் உங்களுக்கு கூறிக்கொள்வது என்வென்றால் காணாமல் போனவர்களுக்கான பிரச்சினை எமது நிகழ்ச்சி நிரலில் முதற்கட்டமாகும். அது சரியான இடத்திலே தீர்க்கப்பட வேண்டும். அதனை மூடி மறைப்பதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு போதும் இணக்கம் தெரிவிக்காது.
மஹிந்த ஆட்சியானாலும் சரி அது இந்த நல்லாட்சி அரசாங்மாக இருந்தாலும் சரி காணாமல் ஆக்கப்பட்ட ஒவ்வொருவருக்கும் என்ன நடந்தது என்கின்ற உண்மை அறியப்பட்டு சொல்லப்படுகின்ற வரைக்கும் நாங்கள் உங்களிடம் முனனிற்போம்' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
42 minute ago