2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

'ஆய்வாளர், விஞ்ஞானிகளை உருவாக்குவதில் தென்கிழக்கு பல்கலை முனைப்புடனுள்ளது'

Suganthini Ratnam   / 2015 ஒக்டோபர் 23 , மு.ப. 07:02 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

ஆய்வாளர்களையும் விஞ்ஞானிகளையும் உருவாக்குவதில் தென்கிழக்கு பல்கலைக்கழகம் முனைப்புடன் செயற்படுவதாக தென்கிழக்கு பல்கலைக்கழக உபவேந்தர் பேராசிரியர் எம்.எம்.எம். நாஜிம் தெரிவித்தார்.

தென்கிழக்கு பல்கலைக்கழக ஸ்தாபகர் தின நினைவுச் சொற்பொழிவு இன்று வெள்ளிக்கிழமை (23) பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தலைமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே மேற்கண்டவாறு கூறினார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர், 'மர்ஹூம் எம்.எச்.எம்.அஷ்ரப் அரசியல் சாணக்கியத்துடன் தூரநோக்கோடு முன்னெடுத்த அரசியல் நகர்வுகளின் பயனாக இந்நாட்டிற்கு பொருளாதார ரீதியாகவும் அறிஞர்களை உருவாக்குவதற்காகவும் ஏற்படுத்தப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் சர்வதேச அந்தஸ்தில் காணப்படுகின்றதையிட்டு மகிழ்ச்சி அடைகின்றேன்.

இலங்கையில் கல்வியில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்காக வேண்டி மூவின சமூகங்களும் பயன்பெற வேண்டுமென்ற நோக்கில் ஏற்படுத்தப்பட்ட தென்கிழக்கு பல்கலைக்கழகம் இன்று அவரது கனவை நனவாக்கியுள்ளதோடு நாட்டின் பொருளாதார, சமூக, கலாசார வளர்ச்சிக்கும் பங்களிப்பை வழங்கி வருகின்றது.

மேலும், இப்பல்கலைக்கழகத்தை வளர்ச்சி பாதைக்கு கொண்டு சென்று மர்ஹும் அஷ்ரபின் இலக்கை நாம் எல்லோரும் அடைவதற்கு பல்கலைக்கழகத்தை வளர்ச்சியடையச் செய்வதற்கும் எல்லா சமூகமும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்' என்றார்.  

இந்நிகழ்வில் பல்கலைக்கழக பதிவாளர்கள், பீடாதிபதிகள், விரிவுரையாளர்கள், மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X